• Tue. Jan 7th, 2025

24×7 Live News

Apdin News

பொங்கலுக்காக 9 நாள் விடுப்பு கிடைக்க வாய்ப்பு: ஜன.17 விடுமுறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி | 9 days leave for pongal

Byadmin

Jan 5, 2025


சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜன. 17-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன. 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஜன. 15, 16, 18, 19 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதற்கு இடைப்பட்ட நாளான ஜன. 17-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஜன. 17-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அதை ஈடு செய்யும் வகையில், ஜன.25-ம் தேதி சனிக்கிழமையை பணி நாளாக அறிவித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறையை பொறுத்தவரை, தற்போதுள்ள அரசு அறிவிப்பின்படி, ஜன.14 முதல் 19 வரை 6 நாட்கள் விடுமுறை வருகிறது. போகி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்றாலும், மத அடிப்படையிலான விடுமுறை உள்ளது. அதை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. ஏற்கெனவே முந்தைய 11, 12, 13 ஆகிய 3 நாட்களும் அரசுவிடுமுறை நாட்கள் என்பதால், மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



By admin