• Sun. Jan 12th, 2025

24×7 Live News

Apdin News

“பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது” – கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | Pongal and DMK cannot be separated – Chief Minister Stalin

Byadmin

Jan 11, 2025


சென்னை: “பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கம் மிக உற்சாகத்தோடு கொண்டாடும் ஒரு திருநாள் என்றால் அது பொங்கல் திருநாள்தான். ஏனென்றால், இதில் மதம் இல்லை, சாதி இல்லை, வன்முறை இல்லை. உழைப்பைப் போற்றும் தத்துவம்தான் இருக்கிறது. சமத்துவம் இருக்கிறது. தமிழர்களின் பண்பாடும், வீரமும், கொண்டாட்டமும் நிறைந்த விழா பொங்கல் விழா” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் இன்று (ஜன.11) நடைபெற்ற பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எத்தனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், என் கொளத்தூர் தொகுதியில் எனது மக்களுடன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி எனக்கு எப்போதுமே ‘ஸ்பெஷல்’. அதுவும் அது பொங்கல் விழா என்றால், அது எவ்வளவு ஸ்பெஷல் எனச் சொல்லவா வேண்டும். ஒரு வாரமாகச் சட்டமன்றக் கூட்டத்தொடர், அதில் பரபரப்பான பல நிகழ்வுகள் என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு நேராக இங்கேதான் வந்திருக்கிறேன்.

எனக்கு ‘எனர்ஜி’ வேண்டுமென்றாலும் நீங்கள்தான், கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ ஆகவேண்டும் என்றாலும் கொளத்தூர்தான். அதுவும் தமிழர்களின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளை உங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.

பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கம் மிக உற்சாகத்தோடு கொண்டாடும் ஒரு திருநாள் என்றால் அது பொங்கல் திருநாள்தான். ஏனென்றால், இதில் மதம் இல்லை, சாதி இல்லை, வன்முறை இல்லை. உழைப்பைப் போற்றும் தத்துவம்தான் இருக்கிறது. சமத்துவம் இருக்கிறது. தமிழர்களின் பண்பாடும், வீரமும், கொண்டாட்டமும் நிறைந்த விழா பொங்கல் விழா.

தந்தை பெரியாரே சொல்லியிருக்கிறார். “தமிழர்களுக்கென்று ஒரு விழா என்றால் அது பொங்கல்தான்” என்று சொன்னவர் பெரியார். அதுவும் ஒரு பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “திருக்குறளை உங்களுக்குப் பொங்கல் பரிசாகத் தருகிறேன்” என்று சொன்னார் பெரியார். திராவிடநாடு, முரசொலி என நம் இயக்க இதழ்கள் எல்லாம் பொங்கலுக்குத்தான் ‘சிறப்புமலர்’ கொண்டு வருவார்கள்.

மறைந்த முதல்வர் கருணாநிதி முதல்வரானதும், தை பிறப்பில் இருந்து திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு தொடக்கம், பொங்கல் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவிப்பு எனப் பொங்கலைச் சிறப்பிக்கப் பல முயற்சிகளை எடுத்தார்.இந்த ஆண்டு, பொங்கல் திருநாளைத் தமிழக மக்கள் எல்லோரும் சிறப்பாக சொந்த ஊர்களில் குடும்பத்தோடும் நண்பர்களோடும் ஒன்றாகச் சேர்ந்து எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என 17-ம் தேதி ஒரு நாள் கூடுதலாக விடுமுறையும் விட உத்தரவிட்டுக் கையெழுத்திட்ட கைதான் இந்தக் கை” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



By admin