• Tue. Jan 14th, 2025

24×7 Live News

Apdin News

பொங்கல் பண்டிகை களைகட்டியது: சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் | chennai people travel to native to celebrate pongal

Byadmin

Jan 14, 2025


தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. சொந்த ஊரில் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் உற்சாகமாக புறப்பட்டு சென்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நேற்று போகியுடன் தொடங்கியது. தைப்பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான நாட்களில் நேற்றைய ஒரு நாள் தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களும் அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நாளும் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால், கடந்த 11-ம் தேதி முதலே பலரும் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கினர். அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயங்கின. இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இதற்கிடையே, அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியபோது, ‘‘சென்னையில் உள்ள மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 3 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் சொந்த ஊர் புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும், 7.70 லட்சம் பேர் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

இந்த நிலையில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் மற்றும் திடீரென பயணத்துக்கு திட்டமிட்டவர்கள் நேற்று புறப்பட்டனர். இதனால் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

ரூ.3.98 லட்சம் வசூல்: ஆம்னி பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து துறையினர் அபராதம் விதித்தனர். ‘‘கடந்த 12-ம் தேதி நிலவரப்படி, 111 பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அபராதம், வரி உள்ளிட்ட வகையில் ரூ.2.27 லட்சம் விதிக்கப்பட்டது. வெளிமாநிலத்தில் இருந்து வந்த வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளிடம் இருந்து வரி, அபராதம் என்ற வகையில் ரூ.3.98 லட்சம் வசூலிக்கப்பட்டது. பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 2 முறை அறிவுறுத்தப்பட்டதால், அதிக கட்டண வசூல் தொடர்பாக புகார் எழவில்லை’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் 4-வது நாளான நேற்றும் பரபரப்பாக காணப்பட்டது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து ரயில்களும் நிரம்பி வழிந்தன. சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 8 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத மெமு ரயிலும், திருவனந்தபுரம் வடக்கு வரை செல்லும் சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டது மக்களுக்கு பேருதவியாக இருந்தது. சொந்த வாகனத்திலும் ஏராளமானோர் பயணித்தனர். இவ்வாறு கடந்த 4 நாட்களில் சென்னையில் இருந்து ரயில், பேருந்து, ஆம்னி பேருந்து, சொந்த வாகனங்களில் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 12,216 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இப்பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகின்றன. நாளை பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 860 பேருந்துகளும், இதர பகுதிகளுக்கு 900 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்து இயக்கம் குறித்த அறிய, புகார் தெரிவிக்க 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (கட்டணமில்லா எண்), 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இருக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால் tnstc செயலி அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



By admin