• Sat. Jan 4th, 2025

24×7 Live News

Apdin News

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஜன.3 முதல் வீடு வீடாக டோக்கன் | Pongal gift Tokens will be distributed door-to-door from Jan 3

Byadmin

Jan 1, 2025


சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் விநியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

‘‘ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும். பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கனில் இடம்பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும்’’ என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025 தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டு, ரூ.249.75 கோடி ஒதுக்கியுள்ளது.

பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக அரசாணைகளில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பரிசு தொகுப்புகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். பரிசு தொகுப்பு விநியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து, ரேஷன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். எந்தவித புகாருக்கும் இடமின்றி பரிசு தொகுப்பை விநியோகம் செய்ய வேண்டும்.

மாவட்ட அளவில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய, மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



By admin