• Mon. May 12th, 2025

24×7 Live News

Apdin News

பொருளாதார வளர்ச்சி உள்பட பல துறைகளில் தமிழ்நாடு முதலிடம்! – தமிழக அரசு பெருமிதம் | Tamil Nadu ranks first in many sectors including economic development! – Tamil Nadu government is proud

Byadmin

May 11, 2025


சென்னை: பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் முதல்வராக பொறுப்பேற்றார். அப்பொழுது கரோனா தொற்று தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்தது. உயிர்ப்பலிகள் வாங்கியது. கரோனா தொற்று ஏற்படும்போது அச்சத்தில் ஒருவருடன் ஒருவர் சந்திப்பதைக்கூடத் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அச்சம் சிறிதுமின்றி, கரோனா ஒழிப்பில் ஈடுபட்டு மக்களைப் பாதுகாத்த மகத்தான பணிகளை பத்திரிகைகள் பாராட்டின.

தொழில் ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாகத் தொடங்கப்பட, நம் நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்த்துள்ள ரூ.10,27,547 கோடி புதிய முதலீடுகள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 32.23 இலட்சம் வேலைவாய்ப்புகள் காரணமாகத் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் எனப் புகழப்படுகிறது. முதல்வரின் இத்தகைய சிறப்பான நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில் வேறு எந்த மாநிலமும் அடையாத வளர்ச்சியாக 9.69% வளர்ச்சி கண்டு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை: திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 2020-2021-இல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி 2024-2025-இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருமடங்கு உயர்ந்து சாதனை படைத்தது.

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் மராட்டியம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநிலங்களைவிட அதிகமாக 14.65 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது தமிழ்நாடு.

வேலைவாய்ப்புகள் வழங்குவதில் சாதனை: தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுத்துறைகள் மூலமாகவும், தனியார் துறையிலும், வேலைவாய்ப்புகளை வழங்குவதில் திராவிட மாடல் அரசு தனிக்கவனம் செலுத்தியது. அதனால், 2020-2021-இல் 2.9 கோடியாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை 2024-2025-இல் 3.87 கோடியாக உயர்ந்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

சமூக அளவீடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்: திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், கலைஞர் கனவு இல்லம், முதலான புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு அபரிமிதமான வளர்ச்சிகளைக் கண்டு இந்திய மாநிலங்களில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடம்: உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 26 சதவிகிதமாக இருப்பது 2023-2024-ல் 51.3 சதவிகிதமாக உயர்ந்து தமிழ்நாட்டின் மகத்தான சாதனையை வெளிப்படுத்துகிறது.

சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு: முதல்வரின் சீரிய நிர்வாகத் திறன்களால் மாநிலம் எங்கும் பெரிய அளவில் சாதி மோதல்களோ, தொழிற்சாலைகளில் பிரச்சினைகளோ இல்லாமல் கடந்த நான்கு ஆண்டு காலமும் தமிழ்நாட்டில் அமைதி நிலவுவது மாநிலத்தில் நிலையான வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

2022 ஆகஸ்ட் முதல் இதுவரை காவல் நிலைய மரணங்கள் எதுவும் நிகழவில்லை என்பது பாராட்டுக்குரியது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் 1,00,000 மக்கள் தொகையில் இந்தியாவில் 66.4; ஆனால் தமிழ்நாட்டில் 24 என வெகுவாகக் குறைந்து மகளிர் நலன் பாதுகாக்கப்படுகிறது.

வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பு: 2023-2024-ஆம் ஆண்டுக்கான அவ்தார் நிறுவன ஆய்வில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் உகந்த பாதுகாப்பான நகரம் சென்னை எனப் பாராட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலிடம்!

Ø பொருளாதார வளர்ச்சியில் 9.69%. இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் !

Ø ஏற்றுமதி தயார் நிலையில் தமிழ்நாடு முதலிடம் !

Ø தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்!

Ø புத்தாக்கத் தொழில்கள் தரவரிசைப் பட்டியலில் 2018-இல் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு, 2022 திராவிட மாடல் ஆட்சியில் முதலிடம் !.

Ø பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் (Women IPS) தமிழ்நாடு முதலிடம் !

Ø இந்திய அளவில் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாடு 38 சதவிகிதம் – முதலிடம் !

Ø அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் !

Ø அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் (RAMSAR Sites) கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு!

Ø வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம் !

Ø இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாடு முதலிடம் !

Ø இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம் !

Ø தொழிற்சாலைகளில் பணிபுரியும் அதிக பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம் !

Ø அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.

உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரூ முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவிகித வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin