ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், நேற்று தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இலங்கை தொடர்பில் எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.
இந்நிலையில் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு இம்முயற்சிகள் சிவில் சமூக அமைப்புக்கள் ஊடாக மேலும் வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணியின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மீது கவனம் பாய்ச்சுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய இருவழி அணுகுமுறையானது கடந்தகால ஆயுத மோதல் மற்றும் வன்முறைகளின் தாக்கங்களை உரியவாறு கையாள்வதற்கு ஏற்றவாறு எதிர்கால வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.