சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் கோப்புகளை ஒப்படைத்து சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமனை நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டார். தமிழக காவல் துறையின் நிர்வாக பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கடராமனுக்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு பணியும், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை ஜி.வெங்கடராமன் நேற்று ஏற்றுக்கொண்டார். அவரிடம் ஓய்வுபெற்ற சங்கர் ஜிவால் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்தார். இதையடுத்து, வெங்கடராமன் அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.
தொடர்ந்து, டிஜிபி சங்கர் ஜிவாலை வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. சங்கர் ஜிவாலை டிஜிபி அலுவலக வாயில் வரை சென்று வெங்கடராமன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு வெங்கடராமன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஏடிஜிபிக்கள் டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், ஐஜிக்கள் அன்பு, அஸ்ராகார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால், டிஜிபி ரேங்கில் உள்ள யாரும் இதில் பங்கேற்கவில்லை.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கடராமன், 1994-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் சேர்ந்தார். இவர் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்துள்ளார். மதுரை மாநகர சட்டம் ஒழுங்கில் காவல் துணை ஆணையராகவும், மத்திய புலனாய்வுப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.
மேலும், காவல் துணை தலைவராக சேலம் சரகத்திலும், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையிலும் பணிபுரிந்துள்ளதோடு, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் காவல் தலைவர், காவல் கூடுதல் இயக்குநர் மற்றும் காவல் இயக்குநர் போன்ற பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் நேற்று ஓய்வு பெற்ற நிலையில், அப்பதவிக்கு, காவல்துறை தலைமையகத்தின் டிஜிபியாக இருந்த வினித் தேவ் வாங்கடே-வை நியமித்து உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.