0
பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மக்குமார என்பவர், இதற்கு முன்னர் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் குற்றவியல் குற்றச்சாட்டு ஒன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பூஞ்செடிகளை நடுவதாகக் கூறினார். ஆனால் தேர்தலின் பின்னர் மக்கள் காண்பது பூஞ்செடிகளை அல்ல, கஞ்சாச் செடிகள் நடப்பட்டிருப்பதையே ஆகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுக்கு எதிராக கஞ்சா செய்கை தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அந்த கஞ்சா செய்கையை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார். ஆனால் தற்போது தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டு வீட்டில் உள்ளார்.
பொலிஸ் அதிகாரி முறைப்பாடு செய்திருந்தும், நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அவருடன் இருந்தவர்களோ பொலிஸுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் கூட பதிவு செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
இந்த நிலைமை குறித்து ஆராய்ந்தபோது, சாந்த பத்மகுமார என்பவர் எம்பிலிபிட்டிய பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபரின் பணிக்கு இடையூறு விளைவித்து, அவரைத் துன்புறுத்த முயன்ற வழக்கில் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
அந்த சிறைத்தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், 20,000 ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. தற்போது பொலிஸ் அதிகாரி செய்துள்ள முறைப்பாடு தொடர்பில் சட்டம் சரியாக அமுல்படுத்தப்பட்டால், அந்த ஒத்திவைக்கப்பட்ட தண்டனையின் அடிப்படையில் அவர் சிறை செல்ல வேண்டியிருக்கும். ஆனால், அவரைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
ஒரு ஊடக நிறுவனத்தை தடை செய்ய முயற்சிப்பதும் வரலாற்றில் இல்லாத ஒரு செயலாகும். எனவே, சட்டத்தின் முன்னால் குற்றவாளியாகக் கருதப்படும் இவரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதில் அரசாங்கம் முறையான பொறிமுறையைக் கையாளவில்லை எனக் குற்றம் சுமத்தினார்.
முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு ஹெக்டேயர் வயலுக்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நஷ்டஈடு போதுமானது அல்ல என்றும், ஒரு ஹெக்டேயர் செய்கைக்காக அதனைக் காட்டிலும் அதிக செலவு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரைவாசி சேதமடைந்த விவசாயிகளுக்கு இதுவரை எவ்வித நஷ்டஈடும் வழங்கப்படவில்லை என்றும், கடந்த காலங்களைப் போல ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட சேதங்களை மதிப்பிட்டு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கடத்தல்காரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கம், நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளைத் தவிக்க விட்டுள்ளதாகச் சாடிய அவர், ஜனாதிபதி ஒரு விவசாயியின் மகன் என்றால் இந்தத் துயரத்தைப் புரிந்துகொண்டு விவசாயிகளுக்கு உடனடியாக நியாயமான நஷ்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.