• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

பொள்ளாச்சி: 16 வயது சிறுமி மற்றும் பாட்டி கொலை – திருமண வற்புறுத்தல் குற்றச்சாட்டில் இளைஞர் கைது

Byadmin

Feb 24, 2026


கோவை, கொலை, போக்சோ

பட மூலாதாரம், TN Police

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடம் தரலாம்)

பொள்ளாச்சி அருகே உரிய வயதை எட்டாத பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், சிறுமியையும், அவருடைய பாட்டியையும் இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற நிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்த அந்த இளைஞர், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

இதே சம்பவத்தில் கல்லூரி மாணவியான சிறுமியின் அக்காவும் காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை செய்த இளைஞர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இளைஞரின் தொந்தரவால் கல்வியை தொடர முடியாத சிறுமி!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2 மகள்கள். அவர்களில் 18 வயதுடைய மூத்த மகள் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். 16 வயதுடைய இளைய மகள் பள்ளிப்படிப்பை முழுதாக முடிக்காமல் வீட்டில் இருந்துள்ளார்.

நெகமம் காவல்துறையினர் அளித்த தகவலின்படி, இளைய மகளை கப்பளாங்கரை என்ற கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் (வயது 24) என்ற இளைஞர், பல ஆண்டுகளாக பின் தொடர்ந்து, காதலிப்பதாகக் கூறி வந்துள்ளார். அவருடைய தொந்தரவு காரணமாக, அந்தப் பெண் பிளஸ் 1 வகுப்பிற்குப் பின் பள்ளிப்படிப்பையும் தொடர முடியவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். தற்போது 16 வயதை எட்டியிருந்த அந்தப் பெண்ணை, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணும், அவருடைய வீட்டாரும் மறுத்துவந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 23 அன்று இரவு, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்த அபிஷேக், இருளில் மறைந்திருந்து, கத்தியால் அந்தப் பெண்ணை தாக்கினார். அதைத் தடுக்க வந்த, அந்தப் பெண்ணின் தந்தை வழி பாட்டியையும், அந்தப் பெண்ணின் சகோதரியையும் கத்தியால் தாக்கியுள்ளார். இவர்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கோவை, கொலை, போக்சோ

பட மூலாதாரம், Getty Images

அங்கு செல்லும் வழியிலேயே அந்தப் பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாட்டியும் உயிரிழந்தார். காயமடைந்த சகோதரி தற்போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து, நெகமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் கொலை செய்த இளைஞர் அபிஷேக் தப்பியோடிய நிலையில், அவரைப் பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால் அதற்குள் அன்று நள்ளிரவிலேயே நெகமம் காவல் நிலையத்திற்கு வந்து அவர் சரணடைந்து விட்டதாக காவல்துறையினர் பிபிசியிடம் தகவல் தெரிவித்தனர்.

நெகமம் காவல்துறையினர் பிபிசியிடம் பகிர்ந்த தகவலின்படி, அபிஷேக், பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அந்த பெண் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து பேருந்தில் செல்லும் போது இருவரும் சந்தித்துள்ளனர். அதன்பின் அந்த இளைஞர் காதலிப்பதாகக் கூறியதும், அவருடனான நட்பை அந்த பெண் விலக்கிக் கொண்டுள்ளார். மீண்டும் தொந்தரவு கொடுத்து வந்ததால் அந்த பெண்ணை அவருடைய பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் இருக்க வைத்துள்ளனர். அதன்பின்னும் அந்த இளைஞர், அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து தொந்தரவு கொடுத்துள்ளார், என தங்களுக்கு தெரிய வந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

கொலை மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு!

கோவை, கொலை, போக்சோ

பட மூலாதாரம், Getty Images

தன்னுடைய பெற்றோருடன் வந்து, அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணின் பெற்றோர், அவளுக்கு இன்னும் திருமண வயதே வரவில்லை என்றும், தங்களுக்கு மூத்த பெண் இருப்பதையும் சுட்டிக்காட்டி, திருமணத்துக்கு மறுத்துள்ளனர். பின்பும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த நிலையில், திருமண வயது வந்ததும் திருமணம் செய்து தருவதாக பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய நெகமம் காவல் ஆய்வாளர் மசூதா பேகம், ”அந்தப் பெண்ணின் பெற்றோரைப் பார்த்து, அவரை உடனே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அபிஷேக் அடிக்கடி கேட்டுவந்துள்ளார். அவர்களும் திருமண வயது வந்ததும் பார்க்கலாம் என்று கூறியுள்ளனர். உண்மையில் இவருடைய தொந்தரவுக்கு பயந்தே, அந்தப் பெண்ணை பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டு, மூத்த மகளை மட்டும் படிக்க வைத்துள்ளனர்.” என்றார்.

“சம்பவம் நடந்த நாளன்று, கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் அபிஷேக் வந்திருக்கிறார். இரவு ஏழே கால் மணிக்கு, அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் தாவிக்குதித்து வந்துள்ள அவர், அந்தப் பெண் கழிப்பிடத்திற்கு வெளியே வந்த நேரத்தில் கத்தியால் தாக்கி உள்ளார். அதைத் தடுக்க வந்த பாட்டியையும், அவளுடைய அக்காவையும் தாக்கியுள்ளார்.” என்று மேலும் விளக்கினார்.

மூவரையும் கத்தியால் தாக்கிய பின்பு, அந்த இளைஞர் தப்பியோடியுள்ளார். அன்று இரவு 12 மணியளவில், நெகமம் காவல் நிலையத்திற்கு வந்த அபிஷேக், தான் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகக் கூறி சரணடைந்துள்ளார். அவரை உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது.

”தற்போது அந்த இளைஞரின் உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டாலும், முழுமையாக குணமான பின்பு, அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 18 வயது நிறைவடையாத சிறுமியை, திருமணத்துக்கு கட்டாயப்படுத்தி, கொலை செய்திருப்பதால், அந்த இளைஞர் மீது கொலை வழக்குடன் போக்சோ சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார் காவல் ஆய்வாளர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூத்த பெண், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சீரான உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதே தகவலை காவல்துறையினரும் உறுதிப்படுத்தினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முக்கிய குறிப்பு:

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் உதவி பெறலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்– 1800-599-0019

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin