• Sat. Jan 18th, 2025

24×7 Live News

Apdin News

போக்குவரத்து தலைமை காவலர் பணியின்போது உயிரிழப்பு: அரசு மரியாதையுடன் உடல் தகனம் | Traffic head Constable dies on duty cremated with state honors

Byadmin

Jan 18, 2025


பொன்னேரி: பணியின் போது உயிரிழந்த சென்னை – மணலி போக்குவரத்து தலைமை காவலரின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று திருவொற்றியூரில் தகனம் செய்யப்பட்டது.

சென்னை – திருவொற்றியூர் சக்தி கணபதி நகரை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (45). இவர், ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட மணலி போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். ஜெய்கிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ஜெய்கிருஷ்ணன் நேற்று முன்தினம் மணலி மார்க்கெட் சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்த ஜெய்கிருஷ்ணனை சக போக்குவரத்து போலீஸார் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் ஏற்கெனவே உடல் நலக்குறைவால் ஜெய்கிருஷ்ணன் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜெய்கிருஷ்ணனின் உடல் சென்னை – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து ஆவடி காவல் ஆணையர் சங்கர், கூடுதல் காவல் ஆணையர் பவானீஸ்வரி, செங்குன்றம் துணை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் உள்ளிட்டோர் நேரில் தலைமை காவலர் ஜெய்கிருஷ்ணனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், தலைமை காவலர் ஜெய்கிருஷ்ணனின் உடல், திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் சமாதி அருகே மாநகராட்சி மின் மயானத்தில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.



By admin