3
கொழும்பு சுகததாச அரங்கில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு இட்டுச்சென்ற இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக ஒன்றரை நிமிடம் மீதம் இருந்தபோது நிறுத்தப்பட்டது. ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் போட்டிருந்தன.
இதற்கு போட்டி ஏற்பாட்டளர்களின் அசமந்தபோக்கே காரணம் என இரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்தக் காலப்பகுதியில் வேளையோடு இருள் சூழ்வதை அறிந்திருந்தும் ஏற்பாட்டாளர்கள் போட்டியை 40 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பித்தமையும் பேரொளி மின்விளக்குகளை பயன்படுத்துவதற்கு முன்கூட்டியே அனுமதி பெறாதமையும் அவர்களது அசமந்தப்போக்கை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியதாக இரசிகர்கள் கூறினர்.
மேலும் சுகததாச அரங்கின் பிரதான பார்வையாளர் கூடத்தின் மேல் மாடிக்கான டிக்கட் கட்டணமாக 800 ரூபா அறவிடப்பட்டபோதிலும் தங்களுக்கு முழுமையான போட்டியை கண்டுகளிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது எனவும் இதற்கான பொறுப்பை இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் ஏற்கவேண்டும் எனவும் இரசிகர்கள் குறிப்பிட்டனர்.
ஸாஹிரா கல்லூரிக்கும் ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரிக்கும் இடையில் மிகவும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவித்த கால்பந்தாட்ட இறுதிப் போட்டியே ஒன்றரை நிமிடம் மாத்திரம் மீதம் இருக்கும்போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டது.
போட்டியின் 89ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசெய்னி அணிக்கு ப்றீ கிக் ஒன்று மத்தியஸ்தர் மதுஷன்கவினால் வழங்கப்பட்டது. அப்போது அரை இருள் சூழ்ந்திருந்ததால் ஸாஹிரா அணி தரப்பில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டத்தைத் தொடர்வது நியாயமல்ல என சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் சுமார் 22 யார் தூரத்திலிருந்து வழங்கப்பட்ட அந்த ப்றீ கிக் தீர்மானம் மிக்கதாக அமைவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது. ஏனேனில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் போட்டிருந்த நிலையில் ஹமீத் அல் ஹுசெய்னிக்கு கோல் போடக்கூடிய இலக்கிலிருந்தே ப்றீ கிக் வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும் ஸாஹிரா அணியினர் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டத்தை தொடர்வது சாத்தியம் இல்லை என சுட்டிக்காட்டியது நியாயமானது என உணர்ந்த கள மத்தியஸ்தர் போட்டியை நிறுத்தி, பேரொளி மின்விளக்குகளை ஒளிரச் செய்யுமாறு ஏற்பாட்டாளர்களிடம் கோரினார்.
ஆனால், ஏற்பாட்டாளர்கள் கையடக்கத் தொலைபேசிகளில் யார் யாரிடமோ பேசினார்களே தவிர இரவு 7.25 மணிவரை போட்டியை அவர்களால் போட்டியை தொடரமுடியாமல் போனது.
இந் நிலைவில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவடைந்து ஒரு வாரத்திற்கு பின்னர் இந்தப் போட்டியின் கடைசி ஒன்றரை நிமிடத்தை விளையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தின் பதில் செயலாளர் என். எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.
சுகததாச விளையாட்டரங்க வெளி நுழைவாயிலும் பிரதான அரங்கில் கண்ணாடியிலான நுழைவாயிலும் பார்வையாளர்களால் சேதமாக்கப்பட்டதால் ஆட்டத்தை தாமதித்து ஆரம்பிக்க நேர்ந்ததாகவும் அதுவே போட்டி இடைநிறுத்தப்பட காரணம் எனவும் அவர் கூறினார்.
ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியின் 7ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசெய்னி வீரர் எம். எப். எம். அர்ஹம் 7ஆவது நிமிடத்தில் கோல் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.
ஆனால், 25ஆவது நிமிடத்தில் ஸாஹிரா அணித் தலைவர் பரீக் அஹமத் கோல் நிலையை சமப்படுத்தி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அடுத்த 5ஆவது நிமிடத்தில் எம். எப். அப்துல்லா அலாதியான கோல் ஒன்றைப் போட்டு ஹமீத் அல் ஹுசெய்னியை மீண்டும் முன்னிலையில் இட்டார்.
இடைவேளையின்போது ஹமீத் அல் ஹுசெய்னி 2 – 1 என முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் இரண்டு அணியினரும் வேகம், விவேகம், மிகச்சிறந்த பந்து பரிமாற்றம், புரிந்துணர்வு ஆகிய அனைத்தையும் ஒருங்கே பிரயோகித்து இரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு இட்டுச் சென்றனர்.
போட்டியின் 65ஆவது நிமிடத்தில் பரீக் அஹமதின் கோணர்கிக்கின்போது ஹமீத் அல் ஹுசெய்னி வீரர்கள் அடைந்த தடுமாற்றத்தைப் பயன்படுத்தி எம். எம். எம். சுஹெய்ப் கோல் நிலையை 2 – 2 என சமப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் வெற்றிகோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர். ஆனால் இரண்டு தரப்பினரும் இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டனர்;.
இதனிடையே மைதானத்தில் இருள்சூழ்ந்த வண்ணம் இருந்தது. போட்டியின் 89ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசெய்னி அணிக்கு வழங்கப்பட்ட ப்றி கிக் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக உதைக்கப்படமல் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.