29
மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல் தலைவர் எல் மெஞ்சோ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த கடும் வன்முறையில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 25 பேர், மெக்சிகோ பொலிஸ் அதிகாரிகள் என்றும், 30 பேர் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி சிறப்பு இராணுவப் பிரிவினரால் எல் மெஞ்சோ சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அவரது தலைமையிலிருந்த Jalisco New Generation Cartel கும்பலைச் சேர்ந்தவர்கள் பழிவாங்கும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் கலவரங்களில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, குறைந்தது 20 மாநிலங்களில் வன்முறைகள் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டர் கும்பல் உறுப்பினர்கள் பல இடங்களில் சாலைகளை மறித்து போக்குவரத்தை முடக்கினர். கடைகள், வாகனங்கள் ஆகியவற்றை தீவைத்துச் சேதப்படுத்தியதுடன், பாதுகாப்புப் படையினருடன் நேரடி மோதலிலும் ஈடுபட்டனர். பல வங்கிகள் சேதமடைந்துள்ளதுடன், உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. காடுகள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதால், பல நகரங்கள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி – போதைப்பொருள் கும்பல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமையால் பதற்றம்
இதுவரை குண்டர் கும்பல் வன்முறைகள் குறைவாக இருந்த சில சுற்றுலா நகரங்களும் இம்முறை கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதாக உள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த 10,000 படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசு அறிவித்துள்ளது.
மெக்சிகோவில் மொத்தம் 31 மாநிலங்கள் உள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின்படி அந்நாட்டின் மக்கள்தொகை சுமார் 132 மில்லியன் ஆகும். குண்டர் கும்பல்களின் ஆதிக்கம் காரணமாக, ஆண்டுதோறும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவது தொடரும் பெரும் சமூக சவாலாகவே இருந்து வருகிறது.