• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

Byadmin

Jan 21, 2026


போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களினால் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை   அதிகரித்த நிலைமையில் காணப்படுவதால் சகல  சிறைச்சாலைகளில் நெரிசல் நிலை காணப்படுகிறது.பயன்பாட்டில் இல்லாத அரச கட்டிடங்களில் தற்காலிகமாக  சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளை தடுத்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல முன்வைக்க கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பல்லேகலே, தும்பர ஆகிய சிறைச்சாலைகளில் தற்போது  2246 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த சிறைச்சாலைகளில் 699 சிறைக்கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். இடப்பற்றாக்குறை காரணமாகவே இந்த நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலையின் புதிய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தி தற்போது சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய தும்பர சிறைச்சாலையை புனரமைப்பதற்கு  4363 மில்லியன் ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இந்த நெருக்கடி நிலை காணப்படுகிறது. போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களினால் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை   அதிகரித்த நிலைமையில் காணப்படுவதால் சகல  சிறைச்சாலைகளில் நெரிசல் நிலை காணப்படுகிறது.

அரச இரசாயன பகுப்பாய்வாளர்  சேவையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறையினால் போதைப்பொருள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் காணப்படுகிறது. இதனால் சிறைச்சாலையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவதில்  தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே  அரச இரசாயன  பகுப்பாய்வாளர் சேவைக்கு 52 பேரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 32 பேரை சேவையில் இணைத்துக் கொள்வவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

The post போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர் appeared first on Vanakkam London.

By admin