படக்குறிப்பு, குஜராத் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான சஹில் மஜோத்தி இரு ஆண்டுகளுக்கு முன்பு கணினி பொறியியல் படிப்பதற்காக ரஷ்யா சென்றார்.கட்டுரை தகவல்
ரஷ்ய படைகளின் சார்பில் சண்டையிட்டதாக இந்தியாவை சேர்ந்த ஒருவரை யுக்ரேன் சிறைபிடித்துள்ளது, யுக்ரேன் – ரஷ்யா போரில் இந்தியர் ஒருவர் இவ்வாறு காவலில் வைக்கப்படுவது இதுவே முதன்முறை.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான சஹில் மஜோத்தி இரு ஆண்டுகளுக்கு முன்பு கணினி பொறியியல் படிப்பதற்காக ரஷ்யா சென்றார். கடந்த ஏப்ரல் மாதம் போதை வழக்கு ஒன்றில் தன் மகன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக அவருடைய தாயார் கூறுகின்றார்.
இந்த போதைப்பொருள் வழக்கில் சிறை தண்டனையை தவிர்ப்பதற்காக மஜோத்தி ரஷ்ய ராணுவத்தில் இணைந்ததாக, கடந்த செவ்வாய்கிழமை அன்று யுக்ரேன் ராணுவம் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாங்கள் விசாரித்து வருவதாகவும் யுக்ரேனிடமிருந்து தங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக, ரஷ்ய அரசாங்கம் தன் பதிலை தெரிவிக்குமாறு பிபிசி கேட்டுக்கொண்டுள்ளது.
பிபிசி குஜராத்திக்கு மஜோத்தியின் தாயார் ஹசினா மஜோத்தி கூறுகையில், தன் மகன் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்யா சென்றதாக தெரிவித்தார்.
மாஸ்கோவுக்கு செல்வதற்கு முன்பாக, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் மூன்று மாத மொழி பயிற்சியையும் நிறைவு செய்துள்ளார், அவர் சமையல் பாத்திரங்களை கூரியர் அனுப்பும் நிறுவனத்தில் பகுதிநேரமாக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மஜோத்தி விநியோகம் செய்ய வேண்டியிருந்த பார்சலில் யாரோ ஒருவர் போதைப்பொருளை போட்டுவிட்டதாக அவரின் தாயார் குற்றம் சாட்டுகிறார்.
“அதனுடன் சேர்த்து என் மகனை பிடித்த போலீஸார் வழக்கு பதிந்தனர்,” என ஹசினா கூறுகிறார்.
ஹசினாவின் கூற்றுப்படி, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஆறு மாதம் சிறையில் இருந்துள்ளார், பின்பு அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினர் ரஷ்யாவில் ஓர் வழக்கறிஞரை நியமித்துள்ளனர், ஆனால் அதன்பின் மஜோத்தி ரஷ்ய ராணுவத்தில் எப்போது, எப்படி சேர்ந்தார் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
“யுக்ரேனுக்கு என் மகன் எப்படி சென்றான் என எனக்கு தெரியவில்லை. வைரல் வீடியோ மூலமாகவே எனக்கு இது தெரியவந்தது,” என ஹசினா கூறுகிறார்.
யுக்ரேன் ராணுவத்தின் 63வது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை (Mechanized Brigade) வெளியிட்ட காணொளியில், ரஷ்ய ராணுவத்தில் ஊதியத்துடன் பணியாற்றுவது அல்லது சிறையில் காலம் கழிப்பது என இரு வாய்ப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக கூறுகிறார் மஜோத்தி.
ராணுவத்தில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு தன்னை விடுதலை செய்வதாக தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
வெவ்வேறு நபர்கள் தன்னிடம் சில நூறாயிரம் முதல் பல மில்லியன் ரூபிள் வரை (ரஷ்ய பணம்) வழங்குவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் அந்த பணத்தை தான் இதுவரை பெறவில்லை என்றும் மஜோத்தி காணொளியில் கூறுகிறார்.
2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 நாட்கள் தனக்கு பயிற்சி வழங்கப்பட்டு ஓராண்டு கழித்து செப்டம்பர் 30 அன்று போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 1 அன்று, தன் கமாண்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன்பின்னர் ரஷ்ய படையினரிடமிருந்து பிரிந்து விட்டதாகவும் கூறுகிறார். அப்போதுதான் யுக்ரேனிய படையின் பதுங்கிடத்தைக் கண்டு அங்கு உதவி கேட்டதாக கூறுகிறார்.
மஜோத்தி இந்த தகவல்களை கூறும் காணொளி எடுக்கப்பட்ட நாள் மற்றும் இடத்தை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
பட மூலாதாரம், Ukrainian army/Facebook
படக்குறிப்பு, 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 நாட்கள் தனக்கு பயிற்சி வழங்கப்பட்டு ஓராண்டு கழித்து செப்டம்பர் 30 அன்று போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் மஜோத்தி கூறுகிறார்.
இந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை, குஜராத்தின் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) ஆமதாபாத்தில் உள்ள ஹசினாவையும் அவருடைய சகோதரரையும் விசாரித்தது. மஜோத்தி பிறந்த சில காலத்திலேயே ஹசினா அவரின் கணவரை பிரிந்துவிட்டதாகவும் தன் தாய்வழி உறவினர்களுடன் வாழ்ந்துவரும் அவர், தையல் வேலை செய்து குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்துவருவதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
மஜோத்தி கைது செய்யப்பட்டு அதன் பின் ரஷ்யாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை ATS அதிகாரிகள் உறுதிசெய்தனர். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவருடன் குடும்பத்தினருக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
மோர்பியில் உள்ள மஜோத்தி படித்த பள்ளியின் ஆசிரியர்கள் அவரை, “சராசரியாக படிக்கக்கூடிய மாணவர்” என்றும், ஆனால் கல்வியின் மூலம் தன் தாயின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஊக்கம் கொண்டவர் என்றும் கூறினர். பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் பேசினர்.
“இதுதொடர்பாக அரசு தலையிட்டு, மஜோத்தி நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, உள்ளூர் தலைவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
“இவரைப் போன்று இளைஞர்கள் பலர் போருக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர்,” என கசம் சும்ரா கூறுகிறார். ” வேலைகளுக்காக வெளிநாடு சென்றுள்ள இளம் இந்தியர்களை நாடு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்களை பணியமர்த்துவதாக ஏற்கெனவே வளர்ந்துவரும் கவலைகளுக்கு மத்தியில் மஜோத்தியின் கைது நிகழ்ந்துள்ளது. மாணவர் விசா அல்லது வருகையாளர் (visitor) விசாக்களில் சென்றுள்ள 150க்கும் மேற்பட்டோர், ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம், ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் 27 பேரை விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என, இந்திய அதிகாரிகள் வலியுறுத்தினர்.
யுக்ரேனில் நடைபெறும் போரில் ஈடுபடுவதற்கு எதிராக தங்கள் நாட்டு மக்களை இந்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளது.
“இந்திய குடிமக்கள் அனைவரும் ரஷ்ய ராணுவத்தில், பணியாற்றுவதற்கான அழைப்பிலிருந்து விலகி இருக்குமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். ஏனெனில் ரஷ்ய ராணுவம் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் போரிடுகிறது,” என இந்திய அரசு கடந்த மாதம் தெரிவித்திருந்தது.