மதுரை: போதைப் பொருள் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானல் பாம்பர்புரத்தைச் சேர்ந்த மணி என்பவரை காரில் நூறு கிராம் போதை காளான் வைத்திருந்த வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மணி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போதை காளான் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதமாவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பறிமுதல் செய்யப்பட்ட போதை காளான் பரிசோதனை அறிக்கை அதிகபட்சமாக 30 நாளில் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட அந்த போதை காளானின் பரிசோதனை அறிக்கை குறிப்பிட்ட நாளில் தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. இந்த குறைபாடு காரணமாக மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் தமிழக கூடுதல் உள்துறைச் செயலர் மற்றும் தமிழக தடயவியல் இயக்குனர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. அவர்கள் போதை காளான் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக பின்பற்றுவது குறித்து பதிலளிக்க வேண்டும்.
இதுபோன்ற வழக்குகளில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பரிசோதனை அறிக்கை வராவிட்டால் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின் படி குறிப்பிட்ட நாட்களுக்குள் பரிசோதனை அறிக்கையை பெற்று தாக்கல் செய்ய வேண்டும். போதைப் பொருள் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளார்.