போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி சனிக்கிழமை மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பிரார்த்தனை பாடல் பாடப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினெல்கள் குழுவின் டீன் கியோவனி படிஸ்டா ரே இந்த சடங்குகளை வழிநடத்துகிறார்.
சுமார் ஒன்றரை மணிநேரம் நீடிக்கும் இந்த நடைமுறை, எளிமையான முறையில் நடைபெற உள்ளது.
போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.
போப் பிரான்சிஸின் உடல் கடந்த மூன்று தினங்களாக செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகா தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, சுமார் 2,50,000க்கும் மேற்பட்டோர், போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அதன் அடுத்தகட்டமான போப் பிரான்சிஸின் இறுதி ஊர்வலம் இன்று உள்ளூர் நேரப்படி சுமார் 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30) தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச் சடங்கு இன்று நடக்கவுள்ளதால், அதிகாலை முதலே போப் உடலுக்கு அஞ்சலி செலுத்த பலரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
படக்குறிப்பு, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம்
திரண்ட மக்கள்
ஆனால், போப் பிரான்சிஸ் உடலுக்கு அருகே சென்று அஞ்சலி செலுத்துவது, வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. எனினும், கூடுமானவரை அருகிருந்து அவரின் உடலை காண விரும்பி பலரும் அங்கு வருகை தந்துள்ளனர்.
சமூகத்தில் பெரும் செல்வாக்கு கொண்டவர்கள் மட்டுமல்லாமல் விளிம்புநிலையில் உள்ள மக்களும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளனர். மேலும், சிறைவாசிகள் சிலரும் போப் பிரான்சிஸின் இறுதி ஊர்வலத்தைக் காண வந்துள்ளனர்.
“காலை 4.15 மணிக்கு இங்கு நாங்கள் வந்தோம்,” என நியூயார்க்கை சேர்ந்த கைட்லின் கூறுகிறார், இவர் தற்போது ரோமில் வசித்துவருகிறார்.
“போப்பின் பாரம்பரியம் மற்றும் அவர் செய்த அனைத்துக்காகவும் அவரை பெருமைப்படுத்துவதற்காக, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய அனுபவம் இது” என அவர் கூறினார்.
அயர்லாந்தில் உள்ள வாட்டர்ஃபோர்டை சேர்ந்த கேத்தரீன், தான் “அனைத்துவித வானிலைகளுக்கும் தயாராக இருப்பதாக” தெரிவித்தார். படுக்கை விரிப்புகள், சன்க்ரீம், ரெயின்கோட் என பலவற்றையும் அவர் எடுத்து வந்திருந்தார்.
உலகத் தலைவர்கள் வருகை
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன்
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக உலகத் தலைவர்கள் பலரும் வந்தவண்ணம் உள்ளனர். முன்னதாக, இந்தியாவின் சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை ரோம் சென்றடைந்தார், அவர் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் ரோமுக்கு வந்துள்ளனர். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற பின், அவர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அதேபோன்று, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடனும் ரோமுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, அவருடைய மனைவி ஒலேனா ஸெலென்ஸ்கா ஆகியோரும் ரோமுக்கு வருகை தந்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர், அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலெய் ஆகியோரும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெஞ்சு அகரவரிசைப்படி தங்கள் நாட்டின் முதல் எழுத்துக்கு ஏற்ப, சர்வதேச தலைவர்களுக்கு அங்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். சுமார் 170 அரசுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிச்சடங்கு எப்படி நடக்கும்?
பட மூலாதாரம், Getty Images
கடந்த 3 தினங்களாக செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகாவில் போப்பின் உடல் வைக்கப்பெட்டிருந்த சவப்பெட்டி அகற்றப்பட்டு, நுழைவுவாயிலுக்கு வெளியே உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
அதன் வெளியே நடக்கும் இறுதி ஊர்வலத்தில், அரசு தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி ஊர்வலம் முடிந்தபிறகு போப்பின் உடல் புனித மரியா பேராலயத்துக்குக் (Santa Maria Maggiore) கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
அதன்பின், 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.
பட மூலாதாரம், Vatican Media
படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் மரியாதை செலுத்திய போது
எளிய முறையில் இறுதிச் சடங்கு
போப் பிரான்சிஸின் இறுதி ஊர்வலம், வழக்கமானதாக அல்லாமல் அவர் முன்பே கேட்டுக்கொண்டபடி எளிமையான முறையிலேயே நடைபெற உள்ளது. என்றாலும், பல சடங்குகள் நிரம்பியதாகவே இந்த இறுதிச்சடங்கு இருக்கும்.
வழக்கமாக போப்பின் உடல்கள் இறுதிச் சடங்குக்கு முந்தைய தினம், சைப்ரஸ், ஓக் மரங்கள் மற்றும் ஈயத்தாலான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மூன்று சவப்பெட்டிகளில் வைக்கப்படும். இதில் சைப்ரஸ் சவப்பெட்டி பணிவையும் ஓக் சவப்பெட்டி மரியாதையையும் குறிக்கிறது. ஈய சவப்பெட்டி உடல் சேதமாகாமல் பாதுகாக்கிறது.
ஆனால், போப் பிரான்சிஸ் தன்னுடைய உடல், மரத்தாலான, துத்தம் கொண்டு உள்வேலைப்பாடுகள் செய்யப்பட்ட எளிமையான சவப்பெட்டியில் வைக்கப்பட வேண்டும் என கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.
மேலும், வழக்கமாக செயின்ட் பீட்டர் பசிலிகா ஆலயத்தில் அடக்கம் செய்யப்படாமல், செயின்ட் மரியா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என, போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். இதன்மூலம் நூற்றாண்டு வழக்கம் மாற்றப்படுகிறது.