போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ்- திரண்டிருந்த மக்களை பார்த்ததும் செய்தது என்ன?
ஒரு மாதத்துக்கும் மேலான சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள போப் பிரான்ஸிஸ், மருத்துவமனை வெளியே திரண்டிருந்தவர்களை நோக்கி கை அசைத்தார்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இத்தாலி நாட்டின் ரோமில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிமோனியா தொற்று காரணமாக போப் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை ஆபத்தில் இருப்பதாக முன்னர் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பல இடங்களில் அவர் குணமடைய வேண்டி கத்தோலிக்கர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் பிரார்த்தனையில் ஈடுபட்ட புகைப்படம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 88 வயதான போப் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார். அவர் முழுமையாக குணமடையாவிட்டாலும், தற்போது அவருக்கு நிமோனியா இல்லையென்றும், உடல்நிலை இதே போல இருந்தால் விரைவில் பணிக்கு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதே நேரம், குறைந்தது அவருக்கு இரு மாதங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
போப் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாகவும்,
இது ரோம் நகரத்துக்கும் உலகுக்கும் சிறந்த பரிசு என ரோம் மேயர் ரோபர்டோ குவால்டியேரி பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளாக ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவராக போப் பிரான்சிஸ் இருந்து வருகிறார். தனது வாழ்நாளில் பல உடல்நலப் பிரச்னைகளை போப் சந்தித்துள்ளார். அவரது ஒரு நுரையீரலின் ஒரு பகுதி 21 வயதில் அகற்றப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.