• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

“போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைத்தது திமுக அரசின் ஆணவத்தை காட்டுகிறது” – வானதி சீனிவாசன் | bjp mla Vanathi Srinivasan slams dmk government over women wing protest

Byadmin

Jan 3, 2025


கோவை: ஜனநாயக முறையில் போராடுபவர்களை, அதுவும் பெண்களை ஆட்டு மந்தைகளுடன் அடைத்து வைப்பது திமுக அரசின் அதிகார ஆணவத்தை, குரூர மனப்பான்மையைக் காட்டுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியின் புகாரில் குறிப்பிட்டுள்ள ‘சார்’ என்பவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. யாரோ முக்கியப் புள்ளி ஒருவரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய பிறகு தான் கைது செய்வார்கள். ஆனால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூட திமுக அரசு அனுமதிப்பதில்லை. ஆர்ப்பாட்டம் நடத்த வருபவர்களை காரை விட்டு இறங்கக்கூட விடாமல் கைது செய்கிறார்கள். துண்டு பிரசுரம் கொடுத்தால்கூட கைது செய்கின்றனர். இந்த அளவுக்கு அடக்குமுறையை ஏவிவிடும் அளவுக்கு திமுக அரசுக்கு அச்சம் ஏன் என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு, பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் இருந்து சென்னை வரை பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரையில் நீதிக்காக அணி திரண்ட பாஜக மகளிரணியினரை காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். அங்கு நூற்றுக்கணக்கான ஆடுகளையும் அடைத்து வைத்துள்ளனர். இது திமுக அரசின் கொடூர மனநிலையைக் காட்டுகிறது.

கொடூர ஆட்சியாளர்களுக்கு அடையாளமாக இன்றும் கூறப்படும் பாசிச ஹிட்லர் தான் இப்படி கொடூரமாக சிந்தித்து மக்களை வாட்டி வதைத்தார் என வரலாற்றில் படித்திருக்கிறோம். அதை இன்று திமுக ஆட்சியில் நேரடியாகப் பார்க்கிறோம். அரசுக்கு எதிராக, அநீதிகளுக்கு எதிராகப் போராடுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமை. போராடும் உரிமை உள்ள நாடுதான் ஜனநாயக நாடாக இருக்க முடியும்.

போராடுபவர்களை அதுவும் பெண்களை ஆட்டு மந்தைகளுடன் அடைத்து வைப்பது திமுக அரசின் அதிகார ஆணவத்தை, குரூர மனப்பான்மையைக் காட்டுகிறது. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.



By admin