“முப்பது நாட்களுக்கும் மேலாக வேலையில்லை. வீட்டில் ரேசன் அரிசி இருக்கிறது. ஆனால், மளிகைப் பொருட்களை வாங்க பணம் இல்லை. இந்த வேலையை நம்பியே இருக்கிறோம். முதலமைச்சர் நினைத்தால் எளிதில் பிரச்னை தீர்ந்துவிடும்” எனக் கூறுகிறார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஜோதி.
இவருக்கு மூன்று குழந்தைகள். சென்னை மாநகராட்சியின் துய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து கடந்த 30 நாட்களைக் கடந்தும் இவர் போராடி வருகிறார்.
“எதாவது ஓர் இடத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து பேசினாலே காவல்துறை விரட்டுகிறது” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
செப்டெம்பர் 4 அன்று சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் ஆலோசனை நடத்துவதற்காக கூடிய தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்தது.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்வது ஏன்? தனியார் நிறுவனத்தின் கீழ் வேலை பார்ப்பதற்கு அவர்கள் தயக்கம் காட்டுவது ஏன்?
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவை தவிர 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாரிடம் சென்னை மாநகராட்சி ஒப்படைத்தது.
இங்கு பணியாற்றிய சுமார் 1,900 தூய்மைப் பணியாளர்களும் மத்திய அரசின் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் சம்பளம் பெற்று வந்தனர். இந்தநிலையில், மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 1 முதல் 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வந்தனர்.
“பத்து ஆண்டுகளுக்கு மேலாக படிப்படியாக சம்பள உயர்வு பெற்று 23 ஆயிரம் பெற்று வருகிறோம். தனியாரிடம் சென்றால் 16,950 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக தருகின்றனர். இதனை ஏற்கப் போவதில்லை” எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் பிபிசி தமிழிடம் பேசியிருந்தனர்.
சென்னை மாநகராட்சியின் நுழைவுவாயில் முன்பாக நடந்த போராட்டம், நீதிமன்ற உத்தரவின் பேரில் கலைக்கப்பட்டது. அப்போது, தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கையாண்ட விதம் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
‘போராட்டக் களத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் உள்பட 13 பேரைக் காணவில்லை’ எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணையின்போது, வழக்கறிஞர் கு.பாரதி உள்பட ஆறு பேர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும் மற்றவர்களை விசாரித்துவிட்டு அனுப்பியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் ஆறு பேர் மீதும் ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரும் மறுவிசாரணை வரும் வரையில் ஊடக நேர்காணல்களை அளிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது.
தொடரும் கைது சம்பவங்கள்
இந்தநிலையில், சென்னையில் உள்ள மாநகராட்சிப் பூங்காங்களில் பணிக்குச் செல்லாத தூய்மைப் பணியாளர்கள் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வியாழக் கிழமையன்று சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திரண்டனர்.
“ஆனால், நாங்கள் ஏதோ போராட்டம் நடத்துவதற்காக கூடியதாக நினைத்து காவல்துறை கைது செய்தது. போராட்டம் நடத்துவதற்காக அங்கே கூடவில்லை. வாழ்வாதாரத்தைப் பற்றி ஆலோசிக்கவே அங்கு வந்தோம்” எனக் கூறுகிறார், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்.
அப்போது தூய்மைப் பணியாளர் ஜோதி என்பவரிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், ‘உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம். அங்கு சென்று பேசுங்கள்’ எனக் கூறியுள்ளது.
ஆனால், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதைப் படம் பிடித்த செய்தியாளர்களையும் காவல்துறை மிரட்டிய காட்சிகள் இணையத்தில் பரவியது.
அப்போது மேரி என்ற தூய்மைப் பணியாளருக்கு கையில் காயம் ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
‘சுதந்திரமாக இருக்க முடியவில்லை’
“எங்களைப் பேசவிடாமல் அதிகாரிகள் தடுக்கின்றனர். தொழிலாளர்களுக்காக யாரும் குரல் கொடுக்கக் கூடாது என நினைக்கின்றனர். எங்களால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை” எனக் கூறுகிறார், தூய்மைப் பணியாளர் ஜோதி.
தனியார் நிறுவனத்திடம் வேலைக்குச் செல்லுமாறு மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறும் ஜோதி, ” பத்து தூய்மைப் பணியாளர்கள் கூடி நின்றாலே அங்கு போலீஸ் வந்துவிடுகிறது. ஒரு நபரைக் கைது செய்வதற்கு எட்டு போலீஸார் வருகின்றனர்” எனவும் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலைக்குச் செல்லாமல் உள்ளனர். வேலையில்லாமல் பலரும் வறுமையில் தவிப்பதாகக் கூறுகிறார், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்.
” வீட்டுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும். குடும்பத்தில் மளிகைப் பொருள், எரிவாயு சிலிண்டர், செல்போன் கட்டணம் என இதர செலவுகளை எதிர்கொள்ள முடியவில்லை” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
‘கந்துவட்டிக்கு ஆளாகும் நிலை’
தூய்மைப் பணியில் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாகக் கூறும் ஜோதி, “பெண்கள் சிரமப்படுவதை இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. வேலையைப் பொறுத்தவரை கடந்த ஜூலை 31 அன்று இருந்த நிலையே தொடர வேண்டும் என நினைக்கிறோம். எங்களைச் சந்தித்துப் பேசக் கூட யாரும் தயாராக இல்லை” என்கிறார்.
“குடும்பத்தை நடத்த முடியாமல் நிறைய பேர் கந்துவட்டி பெறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். பலரும் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிரமத்தில் உள்ளனர்” என்கிறார், சுரேஷ்.
“பணி நிரந்தரம் என்பது பிரதான கோரிக்கையாக இருந்தாலும் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளராகவே தொடர வேண்டும் என நினைக்கிறோம். தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றவர்களும் அங்கு தொடர முடியாமல் வெளியில் வந்துவிட்டனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி சொன்னது என்ன?
தனியார் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலைக்குச் சென்றால் ஓய்வூதியம் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் ஆகஸ்ட் 11 அன்று செய்தி அறிக்கை மூலம் தெரிவித்தது.
அந்த அறிக்கையில், தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதிய முறையின்கீழ் இதுவரை கிடைக்காத பணிப் பாதுகாப்பும் பல சலுகைகளும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி,
- வருங்கால வைப்பு நிதி
- மருத்துவ காப்பீடு,
- போனஸ்
- பண்டிகை கால சிறப்பு உதவிகள்
- திருமண உதவித் தொகை, கல்வி, உயர்கல்வி உதவித் தொகை
- விபத்து மரணம், இயற்கை மரணத்துக்கு காப்பீடு மூலம் நிவாரண இழப்பீடு நிதி
- ஆண்டுதோறும் உடல் பரிசோதனை
‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும் பணிப் பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை புரிந்து கொண்டும் வழக்கு மற்றும் தீர்ப்பை எதிர்நோக்கி பணிக்குத் திரும்ப வேண்டும்’ எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
“ஆனால், களநிலவரம் அவ்வாறு இல்லை” எனக் கூறுகிறார், உழைப்போர் உரிமை இயக்கத்தின் நிர்வாகி ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் வாங்கியதைப் போல தனியாரும் 23 ஆயிரம் சம்பளத்தை வழங்க உள்ளதாகக் கூறினர். அதை நம்பி சென்றபோது, பணி நியமன உத்தரவில் 16,950 ரூபாய் தான் மட்டுமே வழங்க உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது” எனக் கூறுகிறார்.
“அதையும் ஆறு மாதங்களுக்கு மட்டும் எனக் கூறிவிட்டு, ‘பணியில் திருப்தி இருந்தால் மட்டுமே வேலை தரப்படும்’ எனவும் நிபந்தனையாக தெரிவித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு இப்படியொரு கட்டுப்பாடு தேவையா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பட மூலாதாரம், Getty Images
25 நிபந்தனைகள்
‘சென்னை என்விரோ சொல்யூசன்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ள பணி உத்தரவில், 25 நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், ‘16950 ரூபாய் சம்பளத்தில் இருந்து பி.எஃப், இஎஸ்ஐ என சட்டரீதியான பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம், சலுகைகள், வசதிகள் ஆகியவற்றை அவ்வப்போது மாற்றியமைக்கவும் அதிகாரம் உள்ளதாக பணி நியமன உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஏழாவது நிபந்தனையாக, ‘பணியில் சேர்ந்த தேதியில் இருந்து ஆறு மாத காலத்துக்கு பரீட்சார்த்த முறையில் பணியில் இருப்பீர்கள். பணியில் தங்களின் ஒட்டுமொத்த திருப்திகரமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கையின் அடிப்படையில் இது நீட்டிக்கப்படலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘எந்தவொரு செயலுக்கும் அல்லது கடமை மீறலுக்கும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமற்ற, நடவடிக்கை மூலம் எந்த அறிவிப்பும் இழப்பீடும் இன்றி வேலையிலிருந்து உடனடியாக நிறுத்துவதற்கு நிர்வாகத்துக்கு உரிமை உண்டு’ எனக் கூறப்பட்டுள்ளது.
“தனியாரிடம் வேலைக்குச் சென்றவர்களுக்கு அதிக கெடுபிடிகள் காட்டப்பட்டுள்ளன. இதனால் பலர் வேலையில் இருந்து நின்றுவிட்டனர். சிலர் தங்கள் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கூறியதைக் கேட்டு பணியில் சேர்ந்தனர். அவர்களும் விலகிவிட்டனர்” எனக் கூறுகிறார், தூய்மைப் பணியாளர் சுரேஷ்.
தூய்மைப் பணியாளர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக, சென்னை என்விரோ செல்யூசன்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. அவரிடம் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பட்டியலிட்டும், உரிய விளக்கத்தைப் பெற முடியவில்லை.
‘தவறாக வழிடத்துகின்றனர்’ – சென்னை மாநகராட்சி துணை மேயர்
சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. “சம்பளம் தொடர்பாக ராம்கி நிறுவனம் (சென்னை என்விரோ செல்யூசன்ஸ்) தரப்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி தரப்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்கிறார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 761 ரூபாய் தருமாறு கூறியதை தனியார் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறும் மகேஷ்குமார், “அதற்கு மாறாக செயல்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது. இது தவறான தகவல். தூய்மைப் பணியாளர்களை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர்” எனக் கூறினார்.
தனியார் நிறுவனம் தரப்பில் 16,950 ரூபாய் சம்பளம் மற்றும் 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்துக் கேட்டபோது, “தனியார் நிறுவனங்கள் தரப்பில் நிபந்தனைகள் வைப்பது வழக்கமானது. அது இல்லாமல் வேலை தருவதற்கு வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.
“இதுதொடர்பான வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தொழிலாளர் சட்டம் சொல்வதை அரசாங்கத்தால் மீற முடியாது. அங்கு அவர்களின் கருத்தைக் கூறலாம்” என்கிறார்.
தொடர்ந்து பேசிய மகேஷ்குமார், “தூய்மைப் பணியாளர்களை சில சங்கங்கள் தவறாக வழிடத்துகின்றன என்பது எனது தனிப்பட்ட கருத்து. சுமார் 1900 பேரில் ஆயிரம் பேர் வரை தனியாரிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டனர். இது அவர்களுக்கான சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டார்.
” தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்தாலும் அவர்களுக்கு எந்தவித சலுகைகளும் இல்லை. ஆனால், இங்கு தொழிலாளர் நலச்சட்டத்தின்படி அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றன. அதை அவர்கள் ஏற்பது தான் நல்லது” எனவும் துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்தார்.
“பணி நிரந்தரம் தொடர்பாக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கேட்கிறோம். ஆனால், பணி நிரந்தரம் கூட தேவையில்லை. சென்னை மாநகராட்சியின் தொழிலாளியாக தொடர்ந்தால் போதும். முதலமைச்சர் நினைத்தால் இது சிறிய பிரச்னை. ஆனால், கேட்பதற்கு தயாராக இல்லை” என்கிறார், தூய்மைப் பணியாளர் ஜோதி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.