அட்டைப் படத்தில் அழகான பெண், மிடுக்குடன் தான் வாழ்வியலில் எதிர் நோக்கும் பிரச்சனைகளைச் சொல்ல வருவது போல் இருக்கிறது. நானும் பெண்களின் வாழ்வியலில் எழுத்தாளர் என்ன கூறுகிறார் என்று பார்க்கவுள்ளேன். விண்ணில் கால் வைத்து விமானத்தை ஓட்டி வீரகாவியமாகி நின்றவர்களும் பெண்கள் தான். அன்றிலிருந்து இன்றுவரை உலகத்தில் நடந்து கொண்டு இருக்கிற யுத்தங்களால் அதிகளவில் பாதிக்கப் படுவர்களும் பெண்களே.
தாயகத்தில் ஏற்பட்ட போரும் இடப்பெயர்வுகளும், முள்ளி வாய்க்கால் அவலங்களும் எங்கள் இனத்தை பெரியளவில் பாதித்தது. இதனால் பெண்கள் வாழ்வியலில் பல விதமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதிலிருந்து இன்று வரை மீண்டு வர முடியா நிலை. இந்தப் போரினால் காப்பகங்கள் உருவாகின. கணவன் மாரை இழந்த குடும்பங்கள் உருவாகியதும் இதனாலே. துன்பியலில் சிக்கி மீள முடியாமல் இருக்கும் பெண்களின் வெவ்வேறு பரிணாமங்களை எழுத்தாளர் அழகான மொழி நடையில் உணர்ச்சி ததும்ப இந்நூலில் தந்துள்ளார்,
போர்ச்சூழலானது தாயாக, சகோதரியாக, மனைவியாக பெண்ணை எப்படி எல்லாம் பாதித்தது என்பதை இவரின் கதைகளூடாக அறிய முடிகிறது. இருப்பிடங்களை இழந்தபின் படும் துன்பியல் கொடுமையானது. கணவன் இன்றி வருமானம் இன்றி உறவுகளை இழந்து உடலாலும், உள்ளத்தாலும் வலிமை இழந்து வருந்துகின்ற நிலை. இந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தை ஆணும் பெண்ணும் சேர்ந்து வழிநடத்துவதே மிகக் கடினம். யாவரும் யதார்த்தத்தில் சந்தித்த சந்தித்துக் கொண்டு இருக்கிற பிரச்சனைகளை எளிமையான எழுத்து நடையில் எல்லோராலும் விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதியுள்ளார். வாசித்துக் கொண்டு போகும் போது பாத்திரங்களுக்கு என்ன முடிவு ஏற்படப் போகுதோ என்ற பதட்டத்தை ஏற்படுத்தினாலும் நிறைவில் மனமகிழ்வையே தருகின்றன.
பெண்கள் வாழ்வியலில் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படிச் சொல்கிறார் என்று இவரின் சில கதைகளிலிருந்து நான் பார்க்கவுள்ளேன். ‘விதியோடும் மதியோடும்’ என்ற கதை மூலம் தாய்ப் பாசத்தை சொல்கிறார். கணவனை இழந்த நிலை, பல துன்பங்கள் பிரச்சனைகளின் மத்தியில் மகனை படிக்கவைக்க முயற்சிக்கிறாள். மகன் படிக்கவுமில்லை, வேலை செய்யவும் இல்லை. இருந்த வயலையும் விற்று, கடனும் பட்டு, அவனின் விருப்பத்துக்கு அமைய வெளிநாட்டுக்கு மகனை அனுப்புகிறாள். அவன் கடனும் அடைக்க வில்லை, தாயிடம் சொல்லாமல், திருமணம் செய்து, தாயுடன் தொடர்பும் இல்லாமல் இருந்து விட்டு, 10 வருடங்களின் பின் தாயின் வீட்டை விற்று பணம் எடுப்பதற்காக வருகிறான். வீட்டை விற்க தாய் முடியாது என்றதும் தாயை விட்டுச் செல்கிறான். பெற்ற மகனின் குரலைக் கேட்க ஏங்கும் தாயின் பாசம் துன்பத்தையே தருகிறது. ஆனாலும் அந்த தாய் சொல்கிறாள் “எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் இருந்தேன், இப்போது அது தெரிந்த நிம்மதி என்றும், நான் போன பிறகு வீட்டை விற்க வருவான், அப்போதாவது அவன் கையால் கொள்ளி வைக்கட்டும்”. இந்த வரிகள் மனதை நெகிழ வைத்தது.
‘தூறல்கள் மழையாகலாம்’ என்ற கதையில் மைதிலி என்னும் இளம் பெண் போரில் கணவனை, குழந்தையை இழக்கிறாள். மாமியாருக்கு துணையாக இருப்பதற்காக மறுமணம் செய்ய மறுக்கிறாள். ஆனால் மாமியாரோ மருமகளை வாழவைப்பதற்காக மருமகளின் தொடர்பை அறுத்து முதியோர் இல்லம் செல்கிறார். இங்கு இழப்புகளின் மத்தியிலும் ஒருவருக்கொருவர் சளைக்காது காட்டும் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறதல்லவா?
‘தீதும் நன்றும்’ என்ற கதையில் ஒரு தாய் தன் மகனை பொத்திப் பொத்தி வளர்க்கிறார். தமிழ் பாடசாலைக்குப் போய் தமிழ் படிப்பது மகனுக்கு கஷ்டம் என்று தமிழ்ப் பள்ளிக்கே அனுப்பவில்லை. தாய் நாட்டில் இருக்கும் பேரன் பேத்தி உறவுகளிடம் (அங்கே நுளம்பு கடி , வசதி குறைவு என்ற காரணத்தினால்) மகனை கூட்டிச் செல்வதில்லை. தானே பார்த்துப் பார்த்து மகனுக்கு பெண் தேடி திருமணமும் செய்து வைக்கிறார். அதன் பின்பும் விடவில்லை. தன் பிள்ளை தனக்கு பிறகு தான் மற்றவர்களுக்கு என்று மகனின் தேவைகளையும் தானே செய்து அவர்களிடையே தலையிட்டு உரிமை கொண்டாடுகிறார். கடைசியில் மகனும் மருமகளும் திடீரென அமெரிக்காவிற்கு இருக்கப் போய் விடுகிறார்கள். அந்த பிரிவைத் தாங்க முடியாமல் தாய் மிகவும் வேதனைப் படுகிறார். இதற்கு காரணம் தாயின் வளர்ப்பே. ஊர் நாடு சொந்தம் பந்தம் பாசம் இல்லாமல் சுயநலமாக வளர்த்தன் விளைவே. நாம் எதைச் செய்கிறோமோ அதுவே எமக்கு திருப்பி கிடைக்கும் என்பதை நூலாசிரியர் இந்த கதை மூலம் அழகாக சொல்கிறார்.
‘உறவின் தேடல்’ என்ற கதையில் 18 வயதான வளர்ப்புப்பிள்ளை, விபத்தில் பெற்றோரை இழக்கிறான். தாயில்லாத வீட்டில் இருக்கமுடியாமல் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாயின் தாயை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். பாட்டியின் மூலம் தாயை காண்கின்ற திருப்தி, பாசம் வெளிப்படுகிறது.
‘எதிர்கால கனவுகள்’, ‘அணலிடை பூக்கள்’ என்ற கதைகளில் புலம்பெயர் தேசங்களில் அதுவும் பெண்கள் தாயகத்தில் வாழ்வியலில் பெண்களுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளுக்கு உதவ முன்வருவதை காட்டியுள்ளார். போரினால் கணவனை இழந்து கைகளை இழந்து வாழ்வாதாரத்துக்காக போராடும் பெண்களுக்கு உதவுகிறார்கள். சிறுதொழில்கள் வீடுகட்ட உதவி பிள்ளைகளின் படிப்புக்கு உதவுதல் போன்ற பல உதவிகளை வெளிநாடுகளில் இருக்கும் பெண்கள் செய்வதை இந்த கதைகளில் அறியமுடிகிறது. இது எங்கள் பண்பாட்டுடன் சேர்ந்த இயல்பாகவே பார்க்கப்பட வேண்டியது. இதன் மூலம் பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு மற்றைய பெண்களும் உதவி செய்ய முன்வருவார்கள்.
‘முள்பாதை’ என்ற கதையில் இடப்பெயர்வுகளால் வாழ்விடமில்லாது நாளாந்த வருமானத்தை நம்பி வாழும் குடும்பங்களின் பிரச்சனைகளும், கணவனை நம்பியிருக்கும் பெண்களின் நிலையு ம், அவர்கள் எதிர்நோர்க்குகின்ற பிரச்சனைகளையும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களின் விருப்பு வெறுப்புக்கு இடமில்லாத நிலையும், தீர்வுகளை எடுக்கமுடியாது நிலையையும் இந்த கதைகளில் காணமுடிகிறது. மற்றும் வன்னிப் பிரதேசங்களில் குடும்பப் பெண்கள் எதிர்நோக்குகின்ற உணவுப் பிரச்சனைகளும் இங்கு கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக போர்க் காலச் சூழலினால் பாதிக்கப்படாத நகர வாழ்க்கையில் வாழும் பெண்ணின் நிலையையும் ‘விடியும் பொழுது’ என்ற கதையில் எழுதி இருக்கிறார். இந்த கதையில் கணவன் படித்தவர் ஆனாலும் புரிந்துணர்வு அற்றவர். பெண்களை மதிக்காதவர், தான் செய்தது சரி என்பவர், தானே முடிவுகளை எடுப்பவர். அந்த பெண்ணும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறாள் ஆனாலும் அவளால் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. ” கோபப்படாமல் மெல்லமாக கதையுங்கோ” என்றால் “எதிர்த்துக்கதையாதே! ” என்று சொல்வார். வீட்டு வேலைகளில் உதவி இல்லை, பிள்ளைகளும் அவர் விருப்ப படியே நடக்க வேண்டும், படிப்பிலும் மகனை மெடிசின் படி என்று வற்புறுத்துதல். மகள் தன்னால் முடியாது என்று மறுத்ததும், உன் வளர்ப்பு சரி இல்லை என்று மனைவி மீதே பழி சுமத்துதல். கணவனை மாற்ற முடியாது என்று குடும்ப நிம்மதிக்காக அவள் தன்னையே மாற்றிக்கொண்டாள். பிள்ளைகள் விருப்பத்திற்கு திருமணம் செய்ய விடவில்லை, பின்பு கணவர் இறந்து விடுகிறார், பிள்ளைகள் காலம் கடந்து தான் திருமணம் செய்கிறார்கள். பெண்ணின் 70 வயதில் பிள்ளைகளும் அவளை விட்டுச் சென்று விட்டார்கள். அப்போதுதான் அவள் யாருக்கும் பயப்படாமல், தான் விரும்பியபடி இனி வாழும் வாழ்க்கையை எனக்காக வாழவேண்டும் என்று முடிவெடுக்கிறாள். தன் வயதொத்த தோழிகளுடன் மனம் விட்டு சிரிக்க ஒரு இடம் நோக்கிச் செல்கிறாள்.
இப்படியாக இவரது கதைகள் பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளைக் கூறி அவற்றிற்கு சில தீர்வுகளையும் நிறைவாக வைக்கிறார். இவரின் எழுத்துக்கள் மூலம் வாசகர்களுக்கு பிரச்சனைகளை அறியமுடிகிறது. தாங்களும் உதவ வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படலாம்.
சமூகத்தில் இருந்து கொண்டே சமூக அக்கறையோடு பாத்திரங்களோடு இணைந்து பாத்திரங்களின் உணர்வை வெளிப்படுத்துபவையாக இருக்கிறது. சில இடங்கள் கண்ணீர்த்துளிகளை வரவைத்து. ஆழமாக மனதில் பதியக்கூடிய வகையில் விமல் பரம் அவர்களின் நூல் அமைந்துள்ளது என்றே கூறலாம். மேலும் இவரது படைப்புகள் வரவேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறேன்.
அகல்யா நித்தியலிங்கம்
தமிழ் ஆசிரியர், லண்டன் தமிழ் நிலையப் பாடசாலை
(இலண்டனில் இடம்பெற்ற தீதும் நன்றும் நூல் வெளியீட்டில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.)
The post போரில் பெண்கள் எதிர்கொண்ட அவலங்களைப் பேசும் ‘தீதும் நன்றும்’ | அகல்யா நித்தியலிங்கம் appeared first on Vanakkam London.