• Mon. Jan 26th, 2026

24×7 Live News

Apdin News

போருக்குப்பின் இறந்தவன் | டர்சன்

Byadmin

Jan 26, 2026


 

கண் முன்னே குண்டு மழை பொழிய
கந்தகத்தின் காரநெடி நெஞ்சினில் நிறைய
என்னவென்று அறியாமல் கால் போன போக்கிலே
ஓடித்திருந்தத காலம் அது
அன்றேதோ பிழைத்துவிட்டேன் …
ஆனால் அதன்பின்னே இறந்துவிட்டேன்

காதுகளை கிழித்து
அன்று ஒளிமயமாய் தெரிந்ததங்கே
விளையாட்டு பொருள் அல்ல
பலலட்சம் உயிர் கொன்று
இனமொன்றை வதம்செய்த
எமன் என்று தெரிந்ததும் இறந்துவிட்டேன்

சத்தங்கள் சற்றோய
அணி அணியாய் விரைந்ததெல்லாம்
எல்லாம் விரைவோட்ட போட்டியல்ல……
உயிர் காக்க இடம் தேடி
அரை உயிரோடு அள்ளிக்கொண்டு
பதறி அடித்துச் சென்றவை என்று தெரிந்தவுடன் இறந்துவிட்டேன்.

கடைசென்ற என் அன்னை
உரைப்பையில் உணவோடு
எமக்கெனவும் நொறுக்குத்தீன்
கொண்டுவர மகிழ்ந்திருந்தேன்….
ஆனால்
இடம்பெயர்ந்த இடம்உள்ள கடையுடைத்து
பொருள்தேடும் ஆண்களுக்கு மத்தியிலே
குண்டுகளும் கூவிச்செல்ல
உயிர்ப்பணயம் வைத்தவளும் உணவளித்தாள் என்றே
இன்று தெரிந்தவுடன் இறந்துவிட்டேன்..

போரதுவும் நடந்தேற
தினம்தினம்தான் பயணமென
தாயவளின் பின்னே திரிகையிலே தெரியவில்லே
இராணுவமும்‌ முன்னேற
பின்னோக்கி சனம் ஓட
தேவையெல்லாம் மூட்டைகட்டி
சைக்கிளொன்றில் வைத்தபடி
தங்கையையும் சுமந்துகொண்டு சென்றிருந்தாள்
என்றதனை தெரிந்தவுடன் இறந்துவிட்டேன்..

வழியெங்கும் விளையாட்டு
பொருளோடு எம்பாடு
சிதறிநின்ற அவற்றையெல்லாம்
சிரிப்போடே சேகரிக்க விரைந்திருந்தேன்…
ஆனால்
எமக்குமுன்னே அங்கிருந்த குழந்தைகளை
தோட்டாக்கள் தின்றபின்னே
எஞ்சியவை அவையென்றே அறிந்தவுடன் இறந்துவிட்டேன்..

விறகொடிக்க சென்ற நண்பன் திரும்பவில்லை மறுபடியும்
அவர்களிடம் சரணடைந்தான் என்று கேட்டு அறிந்திருந்தேன்
உடல் கூட‌ கிடைக்கவில்லை
அவன் திரும்பிட ஓர் வாய்ப்புமில்லை
என்னதானோ நடந்திருக்கும் தெரிந்தவுடன் இறந்துவிட்டேன்

சுவரொட்டியும் சோகப்பாடலும்
முன்வர,
வீரரவர் உடலுக்கு மலர்தூவ
போட்டிபோட்டு விரைந்துநின்றேன்….
ஒருவர் அல்ல இருவர் அல்ல,
ஒரு இனமே தன் உயிரை விடுதலைக்காய்
ஈத்ததென அறிந்தவுடன் இறந்துவிட்டேன்.

அவ்வழியில் வந்த இனம்
உரிமைஇழந்துவிட்டு போராட்டம் மறந்துவிட்டு
போதையென்றும் மாயையென்றும்
மாளுவதை கண்கொண்டு காணுகையில் இறக்கின்றேன்…
அன்றே இறந்திருக்கலாமோ நினைக்கின்றேன்.

டர்சன்

The post போருக்குப்பின் இறந்தவன் | டர்சன் appeared first on Vanakkam London.

By admin