• Mon. Aug 18th, 2025

24×7 Live News

Apdin News

போர்நிறுத்தம் பற்றிய டிரம்பின் மனமாற்றம் யுக்ரேன், ஐரோப்பாவில் ஏமாற்றத்தை தந்திருக்கும்

Byadmin

Aug 18, 2025


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்தித்த கோப்பு புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பும், ஜெலன்ஸ்கியும் திங்கட்கிழமை சந்திக்கவிருக்கின்றனர்

அலாஸ்காவின் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இதுதான் பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதுடன் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இல்லாத நிலையில் இதுவே மிகவும் ஏற்கத்தக்க முடிவு என கொள்ளலாம்.

ஆனால் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்ற நிலைப்பாட்டிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாறியது யுக்ரேனிலும், ஐரோப்பாவிலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஒரு விரிவான தீர்வு மூலம் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம் என்றும், அதில் ரஷ்யாவின் நலன்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதே ரஷ்யாவின் நீண்டகால நிலைப்பாடாக இருந்திருக்கிறது. இது யுக்ரேன் அடிபணிந்து செல்லவேண்டும் என்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்திருப்பதாக தோன்றுகிறது.

அதுமட்டுமின்றி, கிழக்கு டொன்பாஸில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இருந்து யுக்ரேன் படைகள் வெளியேற வேண்டும் என்றும், அதற்கு பதிலாக தெற்கில் உள்ள ஜபோரிஷ்யா மற்றும் கெர்சன் பகுதிகளில் எல்லைகளை தற்போதிருக்கும் நிலையிலேயே வைத்திருக்க தயார் என்பதும் ரஷ்யாவின் கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

“ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையேயான பயங்கரமான போரை முடிவுக்கு கொண்டுவர சிறந்த வழி, நேரடியாக ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு செல்வதுதான்,” என டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் எழுதினார்.

“போர் நிறுத்தங்கள் பெரும்பாலும் நீடிக்காது,” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

முதலில் எந்த நிபந்தனையுமின்றி போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற யுக்ரேனின் முக்கிய கோரிக்கைக்கு நேர் எதிராக உள்ளது.

முக்கியமாக போர்க்களத்தில் தான் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதாக நம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்பின் நிலைப்பாடு போர்க்களத்தில் கூடுதல் நேரத்தை பெற்றுத் தருகிறது

“யுக்ரேனில் ரஷ்ய நடவடிக்கைகளுக்கு உடனடி கட்டுப்பாடுகளை தவிர்ப்பதுதான் புதினின் நோக்கமாக இருந்திருந்தால், அவர் அதில் வெற்றி பெற்றதாகத் தோன்றுகிறது,” என்கிறார் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் ராணுவ அறிவியல் துறையின் இயக்குநர் மேத்யூ சவில்.

ரஷ்யாவின் பிராந்திய கோரிக்கை ஏற்க முடியாதது என சென்டர் ஃபார் யூரோபியன் ரிஃபார்மின் துணை இயக்குநரும் முன்னாள் பிரிட்டிஷ் தூதருமான இயன் பாண்ட் சொல்கிறார்.

“புதின் தன்மீது போர் தொடுப்பதை நிறுத்துவதற்காக மட்டும் டொனெட்ஸ்க் மாகாணத்தின் கோட்டை நகரங்களை விட்டுக்கொடுக்க ஜெலென்ஸ்கி ஒப்புக்கொள்வார் என்று டிரம்ப் நினைத்தால், அவருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டிருக்கவேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

“இது தற்போதைய நிலையை பற்றியும், யுக்ரேனின் புவியியலையும் பற்றி அவருக்கு எவ்வளவு குறைவாக புரிதல் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.”

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நேற்று இரவு நடந்த சுருக்கமான பத்திரிகையாளர் சந்திப்பில், தானும் டிரம்பும் எட்டியிருக்கும் முன்னேற்றத்திற்கு (விவரிக்கப்படாதவை) தடையாக இருக்க வேண்டாம் என யுக்ரேனையும், ஐரோப்பியர்களையும் புதின் எச்சரித்தார்.

ஆனால், யுக்ரேன் மற்றும் அதன் நட்பு நாடுகளைப் பொறுத்தவரை, அலாஸ்கா பேச்சுவார்த்தையின் முடிவை தீர்மானிப்பதற்காக கடந்த ஒருவாரமாக அவர்கள் எடுத்த தீவிர ராஜதந்திர முயற்சிகளின் பலன்களை டிரம்ப் சீர்குலைத்துவிட்டார்.

டிரம்பின் கருத்துக்கள் அவருடன் கடைசியாக பேசியவரின் கருத்துக்களை எதிரொலிப்பவையாக இருக்கும் என்பதற்கு இது மற்றும் ஒரு நினைவூட்டலாக உள்ளது.

தங்கள் முயற்சிகள் பலனளித்தனவா அல்லது புறக்கணிக்கப்பட்டனவா என்பதை அறிய ஐரோப்பிய தலைவர்கள் இன்று காலை சிறிது நேரம் மூச்சை பிடித்துக்கொண்டு காத்திருந்திருப்பர்.

உச்சி மாநாட்டிற்கு முன் கூறியபடி, டிரம்ப் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். இருவரும் ஒரு மணி நேரம் பேசினர், பின்னர் ஐரோப்பிய தலைவர்களும் இணைந்தனர்.

ஜெலென்ஸ்கி இந்த அழைப்பு “நீண்டதாகவும்,ஆழமானதாகவும் இருந்ததாக” கூறினார். பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் நடந்த மோசமான சந்திப்புக்கு பிறகு, திங்கட்கிழமை அவர் வாஷிங்டனுக்கு முதல் முறையாக செல்லவிருப்பதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

அதன்பிறகு நிறைய நடந்துள்ளது. அந்த சந்திப்பால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யவும், வெள்ளை மாளிகையில் உள்ள மனம்போல் நடக்கிற மற்றும் நிலையற்றதன்மையுள்ள தலைவரை கையாள சிறந்த வழிகளை ஜெலென்ஸ்கிக்கு கற்பிக்கவும் யுக்ரேனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் தீவிரமாக பணியாற்றியுள்ளன.

“அழைப்புக்கு நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்,” என்றும் “அமெரிக்காவின் வலிமை, தற்போதைய நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்,” என்றும் ஜெலன்ஸ்கி தனது பதிவில் கூறினார்.

ஆனால், டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவுக்கு பிறகு வெளியிட்ட பதிவில் ஜெலென்ஸ்கி மிகவும் அவசரமான தொனியை வெளிப்படுத்தினார்.

“உயிரிழப்புகள் விரைவில் நிறுத்தப்பட வேண்டும். போர்க்களத்தில், வானில், மற்றும் எங்கள் துறைமுக உள்கட்டமைப்புக்கு எதிராகவும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகுலுக்கும் காட்சி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, போர் நிறுத்தம் இல்லாமல் திரும்பினால் தான் மகிழ்ச்சியடைய மாட்டேன் என்று அலாஸ்காவுக்கு செல்லும் வழியில் டிரம்ப் கூறினார், ஆனால் பின்னர் சமூக ஊடகத்தில், “போர் நிறுத்தங்கள் பெரும்பாலும் நீடிக்காது” என்று பதிவிட்டார்

ஐரோப்பாவின் “டிரம்ப் விஸ்பரர்கள்” என்று அழைக்கப்படும் டிரம்பிடம் செல்வாக்குள்ளவர்களாக கருதப்படுபவர்கள் கடந்த வாரத்தில் நிறுத்திய இடத்திலிருந்து இன்று காலைதொடர்ந்தனர்.

யுக்ரேனின் எதிர்காலம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் யுக்ரேனை சேர்த்துக்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர், ஆனால் வழக்கமாக செய்வதைப் போல் டிரம்பின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கவும் தவறவில்லை.

” இதுவரை இல்லாத அளவு ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டுவருவதை அதிபர் டிரம்பின் முயற்சிகள் நெருக்கமாக்கியுள்ளன,” என பிரிட்டன் பிதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்தார்.

மேலும், ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால், யுக்ரேனுக்கு “வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை” ஐரோப்பாவுடன் இணைந்து வழங்கும் அமெரிக்காவின் “வெளிப்படைத்தன்மைக்கும்” அவர் வரவேற்பு தெரிவித்தார்.

போர் இறுதியில் முடிவடையும் பட்சத்தில், அந்த உத்தரவாதங்களின் தன்மை இதுவரை விவரிக்கப்பட்டதை விட மிகவும் விரிவாக விளக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடத்திய காணொளி காட்சியின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், புதினை சந்திப்பதற்கு முன்பாக, புதன்கிழமை அவருடன் ஐரோப்பிய தலைவர்கள் காணொளி காட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்

யுக்ரேனின் முக்கிய ராணுவ, பொருளாதார, மற்றும் அரசியல் ஆதரவாளராக ஐரோப்பா உருவெடுத்துக்கொண்டிருந்தாலும், அமெரிக்காவின் கணிசமான ஆதரவு இல்லாமல் யுக்ரேனின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வது கடினம் என்பது அனைவருக்கும் தெரியும்.

நேட்டோவின் பிரிவு 5 (கூட்டு பாதுகாப்பு உட்பிரிவு)-ஆல் தூண்டப்பட்ட ஆனால் நேட்டோவுக்கு உட்படாத உத்தரவாதங்கள் இன்று காலை டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுக்கு இடையேயான உரையாடலில் விவாதிக்கப்பட்டதாகக் பல செய்திகள் குறிப்பிட்டன.

யுக்ரேன் மீது ரஷ்யா மற்றொரு தாக்குதலை நடத்தினால் அமெரிக்கா செயல்படத் தயாராக இருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

யுக்ரேன் நேட்டோவில் உறுப்பினராக இல்லாமல் இத்தகைய பாதுகாப்பைப் பெறுவது “நம்பகத்தன்மையற்றது” என்று நேட்டோவின் முன்னாள் அமெரிக்க தூதரான இவோ டால்டர் கூறினார்.

“யுக்ரேனை பாதுகாக்க ரஷ்யாவுக்கு எதிராக போருக்கு செல்ல அதிபர் டிரம்ப் தயாராக இருக்கிறார் என்று நான் நம்பவில்லை,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

டிரம்பின் இன்றைய குட்டிக்கரணத்தை தொடர்ந்து, ஐரோப்பிய தலைநகரங்களில் மூளைகள் அதிவேகமாக செயல்படும் சத்தத்தையே நீங்கள் கிட்டத்தட்ட கேட்டுவிடலாம்.

லண்டனில், அரசு நம்பிக்கையான அல்லது தைரியமான முகத்தை காட்ட முயல்கிறது.

“போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தத்தை ஒரே நேரத்தில் அல்லது விரைவாக அடுத்தடுத்து செய்ய முடிந்தால், அது நிச்சயமாக நல்லது,” என பிரிட்டன் பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“ஆனால் நாம் அனைவரும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.”

விமானத்தில் புறப்பட தயாரான நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப், உடனடி போர் நிறுத்தம் என்ற கருத்தை விட்டு விலகியுள்ளார். இது, கடந்த காலத்தில் போர் நிறுத்தங்கள் எவ்வாறு தோல்வியடைந்தன என்ற புதினின் சர்ச்சைக்குரிய விளக்கதால் தூண்டப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அலாஸ்காவில் நடந்த பகுதி உச்சி மாநாடு, புதினுக்கு ஏற்கனவே செலவில்லாத வெற்றியாக இருந்தது. எல்மென்டோர்ஃப்-ரிச்சர்ட்சன் விமானப்படை தளத்தில் அமெரிக்க ராணுவ வலிமையின் தெளிவான காட்சிகளுக்கு மத்தியில்தான் என்றாலும் சர்வதேச அரங்கில் புறக்கணிக்கப்பட்டவராக இருந்தவர் அரசுமுறை பயணத்தின் சில அம்சங்களுடன் மீண்டும் மேடைக்கு திரும்பியிருக்கிறார்.

ரஷ்யா மீதான அமெரிக்க தடைகளை அதிகரிப்பதைப் பற்றி சிந்திக்கவே இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகலாம் என டிரம்ப் கூறியிருப்பதால் தடைகள் அதிகரிக்கும் என்ற அச்சுறுத்தலும் குறைந்திருக்கிறது.

இவை அனைத்தும், திங்கட்கிழமை வாஷிங்டனிலும், பின்னர் இறுதியாக டிரம்ப் மற்றும் புதினுடன் ஒரே அறையில் இருக்கும்போதும் ஜெலென்ஸ்கி எதை எதிர்கொள்வார் என்பதைப் பற்றி ஏராளமான கேள்விகளை எழுப்புகின்றன.

” வாஷிங்டனில் ஜெலென்ஸ்கி மீண்டும் எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்வார் என்று நான் சந்தேகிக்கிறேன்,” என்று இயன் பாண்ட் கூறினார்.

யுக்ரேனுக்கு என்ன ஆலோசனை என்று டிரம்பிடம் ஃபாக்ஸ் நியூஸின் சீன் ஹன்னிட்ட கேட்டார்.

“ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்,” என்று அவர் நேரடியாக பதிலளித்தார். “ரஷ்யா ஒரு பெரிய சக்தி, அவர்கள் (யுக்ரேன்) இல்லை.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin