6
தமிழ்- தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் நவீன் சந்திரா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படம் – போர் பின்னணியில் எம்முடைய மண்ணில் நடைபெற்ற திருமணத்தையும், திருமணத்திற்கு முன்னரான இரவு தருணத்தையும் சுவாரசியமாக விவரிக்கும் படைப்பு என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆவணப்பட இயக்குநரான சோமிதரன் முதன்முதலாக இயக்கி இருக்கும் திரைப்படம் ‘நீளிரா’. இதில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரட்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது . இந் நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. எம்முடைய முழு இளமைக் கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் கல்வி பயின்றோம். அந்தப் போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்த போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது. அந்தப் போருக்குள் தான் எம்முடைய மக்களின் திருமணமும் இருந்தது. அதுபோன்ற போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம். எங்களுடைய வாழ்க்கையில் போர் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? ஒரு திருமணம் எப்படி நடந்தது? என்பதை தான் இப்படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.
எம்மை பொறுத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்தப் படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி அச்சத்துடன் கழிந்த ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் ‘நீளிரா’. அந்த இரவும்… அந்த இரவின் படபடப்பும்… அந்த மக்களின் பதற்றமும்… பார்வையாளர்களுக்கு அணுக்கமாக இருக்கும்” என்றார்.