படக்குறிப்பு, 8,000க்கும் மேற்பட்ட முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் கார்களுடன், போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனமாக இருந்தது ப்ளூஸ்மார்ட்கட்டுரை தகவல்
எழுதியவர், நிகில் இனாம்தார்
பதவி, பிபிசி செய்திகள்
இந்தியாவில் மின்னணு வாகனங்களை இயக்கும் பிரபல நிறுவனமான ப்ளூஸ்மார்ட், ஒரு காலத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் போட்டியாளராக இருந்தது. தற்போது புதிய வாகன முன்பதிவுகளை ப்ளூஸ்மார்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளதால், அதன் வளர்ச்சி திடீரென சரிந்துள்ளது.
8,000க்கும் மேற்பட்ட கார்களுடன், முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களால், போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனமான ப்ளூஸ்மார்ட், நன்கு பராமரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் தரமான ஓட்டுநர்களை உள்ளடக்கிய உயர்தர சேவையை உறுதிப்படுத்திய நிறுவனமாக கருதப்படுகின்றது.
மோசமாகப் பராமரிக்கப்படும் டாக்சிகள், முரட்டுத்தனமான ஓட்டுநர்கள், பதிவு செய்யப்படும் டாக்சிகளை அடிக்கடி ரத்து செய்வது போன்ற சிக்கல்கள் மற்ற பெரிய போட்டி நிறுவனங்களிடம் காணப்பட்டன.
ஆனால் ப்ளூஸ்மார்ட், மற்ற நிறுவனங்களை விட சற்று அதிகமான கட்டணத்திற்கு உயர்தரமான சேவையை வழங்கியதன் மூலம், “தரமான சேவை” என்பதை தனது முக்கிய அம்சமாக மாற்றியது.
ப்ளூஸ்மார்ட் நிறுவனம் மூடப்படலாம் என்ற தகவல்
இந்நிலையில் ப்ளூஸ்மார்ட் நிறுவனம் மூடப்படலாம் என்ற தகவல் வெளிவந்ததும், நூற்றுக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் தங்களது கோபத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கினர்.
“ப்ளூஸ்மார்ட்டை அடிக்கடி பயன்படுத்தும் ஒருவராக, இந்நிறுவனம் மூடப்படுவது குறித்து வெளியாகியுள்ள செய்தி என்னை கடுமையாக பாதிக்கிறது. பழக்கமான இன்னொரு சேவை, நிர்வாகக் குழப்பத்தால் மூடப்பட்டுவிட்டது,” என எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் பதிவிட்டார்.
ப்ளூஸ்மார்ட்டின் டிஜிட்டல் வாலட்டில் வைத்திருந்த பணத்தைத் திரும்ப பெற்றுவிட்டதாக பலர் கூறியிருந்தாலும், 90 நாட்கள் காத்திருக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டது குறித்து சிலர் கவலை தெரிவித்தனர்.
எனவே, 2019 இல் தொடங்கப்பட்டு, உலக அளவில் முக்கியமான முதலீட்டாளர்களிடமிருந்து மில்லியன்கணக்கான டாலர்களை நிதியாக திரட்டி, ஒவ்வொரு முக்கிய தொழில்நுட்ப விருது பட்டியலிலும் இடம் பெற்ற இந்நிறுவனம் எந்த இடத்தில் தவற விட்டது?
ப்ளூஸ்மார்ட்டின் நிறுவனர் அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர், தங்களுக்குச் சொந்தமான மற்றொரு நிறுவனத்திடமிருந்து கடன்களை திருப்பி, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கோல்ஃப் உபகரணங்களை வாங்குவதாக செபி ( Securities and Exchange Board of India- இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்) குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய மூன்று நகரங்களில் ப்ளூஸ்மார்ட்டின் சேவைகள் நிறுத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
ப்ளூஸ்மார்ட் நிறுவனத்திற்கு, கார்களை குத்தகைக்கு எடுப்பதற்காக இந்த கடன்கள் வழங்கப்பட்டன.
படக்குறிப்பு, ப்ளூஸ்மார்ட் நிறுவனம் மூடப்படலாம் என்ற தகவல் வெளிவந்ததும், நூற்றுக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் தங்களது கோபத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கினர்.
செபி கூற்றுப்படி, ப்ளூஸ்மார்ட்டின் வணிக மாதிரி எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதில் உள்ள குறைபாடுகளுடன், இந்த சிக்கலில் தீவிரமான நிதி நிர்வாக முறைகேடு உள்ளதாகவும் தெரிகிறது.
தனிப்பட்ட ஓட்டுனர்களிடம் இருந்து தங்கள் வாகனங்களை குத்தகைக்கு எடுக்கும் பாரம்பரிய நிறுவனங்களைப் போல் அல்லாமல், ப்ளூஸ்மார்ட் அதன் வாகனங்களை பிற நிறுவனங்களிடமிருந்து, குறிப்பாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சோலார் எரிசக்தி மற்றும் எலெக்டிரிக் வாகனக் குத்தகை நிறுவனமான ஜென்சல் என்ஜினியரிங் லிமிடெட் (GEL) நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்தது.
இந்த நிறுவனமும் ஜக்கி குடும்பத்தினரால் தான் நடத்தப்படுகிறது.
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள்
பட மூலாதாரம், Getty Images
கடந்த மாதம், க்ரெடிட் ரேட்டிங்(மதிப்பீட்டு) ஏஜென்சிகளான கேர் ரேட்டிங்ஸ் மற்றும் ஐசிஆர்ஏ ஆகியவை, ஜென்சல் என்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்துக்கு, ப்ளூஸ்மார்ட் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தத் தவறியதை கண்டறிந்ததை அடுத்து, ஜென்சல் என்ஜினியரிங் லிமிடெட் (GEL) இன் முதலீட்டு மதிப்பீட்டை குறைத்தன.
ஜென்சல் என்ஜினியரிங் லிமிடெட் ( ஜிஇஎல்) நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்த கடன் வழங்குபவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்தனர் என்றும் ஐசிஆர்ஏ கூறியுள்ளது.
ஜென்சல் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன்கள் குறித்த போலியான ஆவணங்களை உருவாக்கியதாகவும் அதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் கார்பரேட் நிர்வாகம் மற்றும் நிதி விவகாரம் குறித்து தீவிர கவலைகள் ஏற்பட்டுள்ளன.
அதன் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ளதால், ஜென்சல் என்ஜினியரிங் லிமிடெட், ப்ளூஸ்மார்ட் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவதற்காக வாங்கிய சுமார் 3,000 மின்சார வாகனங்களை சந்தையில் விற்க உள்ளதாக அறியப்படுகிறது, இதனால் ப்ளூஸ்மார்ட்டின் வணிகம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
ஜென்சல் என்ஜினியரிங் லிமிடெட் மற்றும் ப்ளூஸ்மார்ட் நிறுவனங்களின் விளம்பரதாரர்கள் ரேட்டிங் ஏஜென்சிகளின் (கேர் ரேட்டிங்ஸ் மற்றும் ஐசிஆர்ஏ) குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக மறுத்தனர்.
ஆனால், செபி (SEBI) விசாரணையைத் தொடங்குவதற்கு அந்தக் குற்றச்சாட்டுக்கள் போதுமானதாக இருந்தன.
பட மூலாதாரம், Getty Images
அந்நிறுவனத்தில் கடன் பிரச்னை மட்டுமல்லாமல் இன்னும் அதிக சிக்கல்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
“தனது செயல்பாடுகளை பராமரிப்பதில் மற்றும் தனியார் மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுவதில் ஜென்சோல் நிறுவனம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் விளம்பரதாரர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து செலவு செய்வது போல், அந்த நிறுவனத்தின் நிதிகள் அதனுடன் தொடர்புடைய தரப்பினருக்கு மாற்றப்பட்டு, நிறுவனத்திற்கு தொடர்பற்ற செயல்களில் செலவிடப்பட்டுள்ள” என செபி அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், “நிதி மாற்றம்”நடந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் ப்ளூஸ்மார்ட்டுக்கு குத்தகைக்கு விடுவதற்காக மின்சார வாகனங்களை வாங்கும் போது நடந்ததாக இருந்தாலும், இந்த பிரச்னை “தனிப்பட்டதாக இல்லாமல் பரவலான ஆபத்துகளையும்” உருவாக்கியுள்ளது. ( பிற துறைகள் அல்லது நிறுவனங்களையும் பாதிக்கக் கூடும்) என்றும் செபி கூறியது.
இதற்கு காரணம், ஜென்சோல் (GEL) நிறுவனத்தால் ப்ளூஸ்மார்ட்டிற்கு குத்தகைக்கு விடப்பட்ட கார்கள், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் (IREDA) போன்ற மாநிலக் கடன் வழங்குபவர்களின் நிதியில் வாங்கப்பட்டவை.
தற்போது அவர்களும் பெரும் நிதி இழப்புகளை எதிர்கொள்ளக்கூடும். செபி உத்தரவைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் நிறுவனர்கள் தற்போது ராஜினாமா செய்துள்ளனர்.
பங்குச் சந்தையில் விளம்பரதாரர்கள் எந்த நடவடிக்கையில் ஈடுபடுவதையும் ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ளது.
ப்ளூஸ்மார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் CTO உட்பட பல உயர் தலைவர்கள் கடந்த மாதம் ராஜினாமா செய்த பின்னர் இது நடந்துள்ளது.
தொடர்ச்சியாக ஏற்பட்ட நஷ்டங்கள்
இதன் விளைவாக, கடந்த ஆண்டில் ஜெல் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 90% வீழ்ச்சியடைந்ததன் மூலம், முதலீட்டாளர்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பும் ஏற்பட்டது.
இந்நிறுவனத்தின் சுயாதீன இயக்குநர்களுக்கும் “நம்பகமான பொறுப்பு உள்ளது, அவர்களும் பதிலளிக்க வேண்டும்” என்று சமூக செயலாளர் மற்றும் முதலீட்டாளரான அனிருத்தா மல்பானி தெரிவித்தார்.
கார்ப்பரேட் மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தை நடத்தும் அனில் சிங்வி பிபிசியிடம் பேசுகையில், இந்த சம்பவம் இந்தியாவின் தொடக்க நிலை நிறுவனங்களில் தொடர்ந்து ஏற்படும் நிர்வாக குறைபாடுகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது, அங்கு நிறுவனர்கள் பல முறை “குளறுபடிகளில் ” ஈடுபடுவது கண்டுபிடிக்கப்படுகிறது என்றார்.
மற்றொரு சிக்கலின் “விளைவாக” ப்ளூஸ்மார்ட்டுக்கு சேதம் ஏற்பட்டிருந்தாலும், அந்நிறுவனத்தின் வணிக மாதிரியின் வலிமை பற்றியும் கேள்விகள் உள்ளன.
தொடர்ச்சியாக ஏற்பட்ட நஷ்டங்கள், இத்துறையில் அதிகரிக்கும் போட்டி மற்றும் இந்திய நுகர்வோர் செலவுகளை குறைத்தல் ஆகியவை அந்நிறுவனத்துக்கு குளறுபடிகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைக்கு ஜெல் நிறுவனம், அதன் செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்து வருவதாகவும், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்ய ஒரு தணிக்கையாளரை நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ப்ளூஸ்மார்ட்டின் வாகன சேவைகள் மீண்டும் தொடங்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.