பட மூலாதாரம், Getty Images
“போட்டி ஒரு பக்கம், நட்பு ஒரு பக்கம். நட்பு எப்போதும் அப்படியே தான் இருக்கிறது.”
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா – பாகிஸ்தான் மகளிர் அணிகள் ஒருநாள் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் சந்தித்த போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை நிதா டார், இந்தியா- பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு இடையிலான நட்பு குறித்து இவ்வாறு கூறியிருந்தார்.
இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இடையிலான நட்பு பல ஆண்டுகளாக வலுவடைந்து வருவதாகவும் நிதா டார் கூறினார்.
ஆனால் அக்டோபர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளும் மீண்டும் மோதியபோது, அந்த நட்பு ஒரு பழைய கதையைப் போல தோன்றியது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்குப் பிந்தைய இந்தியா–பாகிஸ்தான் பதற்றத்தின் தாக்கம் துபையில் நடந்த ஆடவர் ஆசியக் கோப்பையைப் போலவே, இலங்கையில் நடந்த மகளிர் உலகக்கோப்பை போட்டியிலும் தெரிந்தது.
பாகிஸ்தானை 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. ஒருநாள் போட்டிகளில் இதுவரை 12 முறை இந்தியாவுடன் மோதியுள்ள பாகிஸ்தான் மகளிர் அணி ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கு முன்பாக இந்தியா பாகிஸ்தான் வீரர்களின் நட்புக்கு எடுத்துக்காட்டாக இணையத்தில் சில புகைப்படங்கள் வைரலாகின. ஆனால், இந்த போட்டிக்குப் பிறகு அது போன்ற எந்தவொரு புகைப்படமும் வெளிவரவில்லை.
அன்புக்கும் நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய புகைப்படம்
பட மூலாதாரம், PCB
2022-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மாரூப்பின் 6 மாத குழந்தை பாத்திமாவும் மைதானத்தில் இருந்தது.
போட்டி முடிந்ததும், இந்திய வீராங்கனைகளால் அக்குழந்தையை கைகளில் தூக்கி கொஞ்சாமல் இருக்க முடியவில்லை.
ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஷஃபாலி வர்மா உள்ளிட்டோர் பாத்திமாவை அள்ளி அணைத்துக் கொண்டனர். இந்திய அணியின் அனைத்து வீராங்கனைகளும் அக்குழந்தையுடன் புகைப்படங்கள் எடுத்தனர்.
பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தது.
ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாத்திமாவின் படத்தைப் பதிவிட்டு, பிஸ்மா மாரூப்பை ஒரு முன்னுதாரணம் என்று பாராட்டினார்.
“குழந்தை பெற்று 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது ஊக்கமளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு பிஸ்மா மாரூஃப் ஒரு முன்னுதாரணம். ஒட்டுமொத்த இந்தியாவும் பாத்திமாவுக்கு தனது அன்பை வெளிப்படுத்துகிறது”என்று பதிவிட்டிருந்தார்.
இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “என்ன ஒரு அழகான தருணம். கிரிக்கெட் மைதானத்தில் எல்லைகள் இருக்கலாம், ஆனால் மைதானத்திற்கு வெளியே அந்த எல்லைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Social Media
அந்தப் போட்டிக்குப் பிறகு, இதே அன்பைப் பற்றி பாகிஸ்தான் வீராங்கனை நிதா டார் பேசினார்.
“இந்திய அணியை நாங்கள் அரிதாகவே சந்திக்கிறோம். ஆனால் சந்திக்கும் போதெல்லாம் நல்ல முறையில் பேசிக் கொள்கிறோம். நாங்கள் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்கிறோம், அதை எதிர்காலத்திலும் தொடர முயற்சிக்கிறோம். போட்டி முடிந்ததும், இந்திய வீராங்கனைகள் எங்களிடம் வந்து பேசினார்கள். பிஸ்மாவின் குழந்தைக்கு அவர்கள் அளித்த அன்பு எங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது,” என்று அவர் கூறினார்.
பத்திரிகையாளர் அஹ்சன் இப்திகாரும் இந்திய வீராங்கனைகள் பாத்திமாவுடன் விளையாடிய போது எடுத்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.
அதில் “பாத்திமாவுடன் வீராங்கனைகள் புகைப்படம் எடுக்க முயற்சித்தது ஒரு அற்புதமான அனுபவம். அந்த அழகான தருணங்களை நான் படம் பிடித்ததில் பெருமை அடைகிறேன்”என்று கூறியிருந்தார்.
முன்னதாகவே ஊகிக்கப்பட்ட நிகழ்வுகள்
பட மூலாதாரம், Getty Images
போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே , ‘ஆசியக் கோப்பையில் நடந்தது போலவே, இந்த மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையிலும் இரு அணிகளின் வீராங்கனைகள் கைகுலுக்கி கொள்ள மாட்டார்கள்’ என்கிற யூகங்கள் ஊடகங்களில் எழத் தொடங்கிவிட்டன .
சனிக்கிழமை நடைபெற்ற போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் அவிஷ்கர் சால்வி பங்கேற்றார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் அளித்துள்ள தகவலின்படி, பாகிஸ்தான் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு செய்தியாளர் அவரிடம், “ஆசியக் கோப்பையில் தொடங்கிய சர்ச்சை இங்கும் தொடருமா?” என்று கேட்டார்.
பின்னர் அங்கிருந்த ஊடக மேலாளர், “இந்த வகையான கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்” என்று தெளிவாகச் சொன்னார்.
அதேபோல, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முன்பும், “அரசியல் அல்லது வீரர்கள் கை குலுக்கிக்கொள்வது தொடர்பாக எந்தக் கேள்விகளும் கேட்கப்படக் கூடாது, அவற்றுக்கு பதில் அளிக்கப்படாது” என்றும் அறிவிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் ஒரு செய்தியாளர் சனாவிடம், “சமீபத்திய பதற்றத்திற்கு மத்தியில், முன்னர் இருந்த நட்பை இழந்தது போல உணர்கிறீர்களா?” என்று கேட்டார்.
“ஆம், நிச்சயமாக. ஆனால் எங்களின் முக்கிய குறிக்கோள் விளையாடுவதுதான். அதில்தான் எங்கள் கவனம் இருக்கும்.மற்ற அணிகளுடன் நல்ல உறவைப் பேண முயற்சிப்போம்,” என்று பாத்திமா சனா புன்னகையுடன் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “முன்னர் பிஸ்மாவின் மகள் அனைவரையும் ஒன்றிணைத்தாள். அப்போது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தோம். வீராங்கனைகளாக, இதுபோன்ற தருணங்களை நாங்கள் விரும்புகிறோம்”என்றும் கூறினார்.
ஜூலனிடமிருந்து உத்வேகம் பெற்ற கைனாத் இம்தியாஸ்
பட மூலாதாரம், Instagram/ @kainatimtiaz23
இந்தியா–பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கிடையிலான நட்பு, 2022 உலகக் கோப்பையின் போது மட்டும் அல்ல, அதற்கு முன்பும் பல முறை வெளிப்பட்டுள்ளது.
2017 ஜூலை மாத போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் கைனத் இம்தியாஸ், இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமியுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“2005ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடந்தபோது, இந்திய அணியை முதன்முறையாக பார்த்தேன். அப்போது நான் போட்டியில் களத்தில் பந்து பொறுக்கும் சிறுமியாக (ball picker) இருந்தேன். அப்போது வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஜூலனைப் பார்த்தேன். அவரிடமிருந்து ஊக்கம் பெற்றேன். இப்போது, 12 ஆண்டுகள் கழித்து, நான் உலகக் கோப்பையில் விளையாடுகிறேன்”என்று எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகள் பல முறை இந்திய வீராங்கனைகளையும், ஆடவர் அணியினரையும் வெளிப்படையாகப் பாராட்டியுள்ளனர்.
2018ஆம் ஆண்டில், விராட் கோலி தனது 35வது ஒருநாள் சதத்தை அடித்தார். அவரது சதத்திற்கு வாழ்த்து தெரிவித்த, பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை சையதா நைன் பாத்திமா அபிடி , “விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக அற்புதமான கவனத்துடன் விளையாடுகிறார். 35வது சதம். என்ன ஒரு அற்புதமான பேட்டிங் திறன். அவர் உண்மையிலேயே சிறந்தவர்” என்று பதிவிட்டார்.
நட்பில் முறிவு
பட மூலாதாரம், Getty Images
பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு நடைபெற்ற ஆசியக் கோப்பையின் போது இரு நாடுகளின் ஆண்கள் அணிகள் மோதிய போட்டியில் ஒருவித இறுக்கமான சூழல் காணப்பட்டது.
சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பையில் வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளாததில் தொடங்கிய சர்ச்சை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மொஹ்ஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக் கொள்ளாதது வரை நீண்டது.
சாம்பியன் பட்டம் வென்று ஒரு வாரத்திற்கும் மேலாகியும், ஆசியக் கோப்பையை இந்தியா இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை.
இதேபோல், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், இந்த முறை இரு நாடுகளின் வீராங்கனைகளும் போட்டிக்கு முன்னும் பின்னும் ஒருவரையொருவர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என்றும் சில ஊகங்கள் எழுந்தன.
அதேபோல் டாஸ் நேரத்தின் போது ஹர்மன்ப்ரீத் கவுரும் பாத்திமா சனாவும் கண்களைப் பார்த்து பேசிக்கொள்ளவில்லை.
போட்டி முடிந்தபின்பும், இரு அணிகளின் வீராங்கனைகளும் கைகுலுக்கவோ, உரையாடவோ, நட்பைத் தொடர்வதற்கான முயற்சிகளையோ மேற்கொள்ளவில்லை.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு