-
- எழுதியவர், கணேஷ் போல், ஸ்ரீகாந்த் பங்காலே
- பதவி, பிபிசி மராத்தி
-
“விவசாயிகளின் பிள்ளைகளுக்கு சீக்கிரமே திருமணம் நடப்பதில்லை. அதனால்தான் விரக்தியில் ஏதேனும் ஒரு வழியை தேர்வு செய்கிறார்கள். எனக்கும் அதேதான் நடந்தது, நான் அவசரமாக ஒரு திருமணம் செய்து கொண்டேன். இதில் கிட்டத்தட்ட ரூபாய் 5 லட்சத்தை இழந்தேன்.”
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ஜுன்னர் நகரைச் சேர்ந்த சாகர், தனக்கு நடந்த போலித் திருமணம் பற்றி விவரித்தார்.
தற்போது மகாராஷ்டிராவில், குறிப்பாக அதன் கிராமப்புறங்களில், முப்பது வயதுக்கு மேற்பட்ட பல இளைஞர்களை, ஒரு கேள்வி தொடர்ந்து துரத்துகிறது: ‘எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?’
பொதுவாக பார்க்கையில், இன்றைய பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் மனநிலை என்பது, ‘கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயி தங்களுக்கு கணவர்/மருமகனாக வேண்டாம்’ என்பது போல் தெரிகிறது, ஆனால் இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது, திருமணம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரிப்பது, பெண்கள் வயல்களில் செய்ய வேண்டிய கடுமையான வேலைகள் மற்றும் கிராமப்புற சமூகத்தில் பெண்களின் சுதந்திரம் ஒடுக்கப்படுவது போன்ற காரணங்களால் பல பெண்கள் கிராமப்புறங்களில் திருமணம் செய்துகொண்டு வாழ்வதை விரும்புவதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், கிராமத்தில் திருமண வயதில் இருக்கும் ஆண்கள் திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதேசமயம், தாங்கள் திருமண வயதை கடந்துவிடுவோமோ என்று பயமும் அவர்களுக்கு இருக்கிறது.
சில குழுக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன. உண்மையில், அதுபோன்ற பல குழுக்கள் இருப்பதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகிறார்கள்.
கிராமங்கள் மற்றும் தாலுகாக்களில் திருமண வயதில் இருக்கும் பல ஆண்கள் ஒரு புதுவகையான மோசடிக்கு ஆளாகின்றனர்.
மறுபுறம், லட்சக்கணக்கான ரூபாய் இதில் மோசடி செய்யப்பட்டிருந்தாலும், ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் முன்வந்து புகார் அளிப்பதில்லை என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மகாராஷ்ட்ராவில் நடக்கும் இந்த வகையான ‘போலி திருமணம்’ என்றால் என்ன? இதன் பின்னால் உள்ள மோசடி கும்பல் எப்படி இயங்குகிறது?
‘பெண்ணிடம் தனியாக பேச என்னை அனுமதிக்கவில்லை’
ஜூன்னார் தாலுகாவில் வசிக்கும் சாகர், ஒரு விவசாயியாக நல்ல லாபத்தை ஈட்டி வருபவர். அவர் புனே மற்றும் மும்பையில் உள்ள ஏபிஎம்சி (APMC) சந்தைகளுக்கு காய்கறிகளை விற்பனை செய்கிறார்.
விவசாயத்தால் அவர்களது குடும்பத்தின் நிதி நிலைமை நன்றாக உள்ளது. ஆனால் அப்போதும் கூட, அவர்களால் சாகருக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பல முயற்சிகளுக்குப் பிறகு, இறுதியாக ஒரு தரகர் மூலம் சாகரின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பிபிசியிடம் பேசிய சாகர், “பல வருட முயற்சிக்குப் பிறகு, இறுதியாக மே 2023இல் நான் திருமணம் செய்துகொண்டேன். அப்போது, மணமகளின் குடும்பத்தினர் திருமணத்தை வெகு சீக்கிரமாக நடத்தி முடிக்க ஆர்வம் காட்டினர்.”
“இதற்கிடையில், அந்தப் பெண்ணிடம் தனியாக பேச என்னை அனுமதிக்கவில்லை. திருமணமான முதல் வாரத்தில் ஏதோ ஒன்று தவறு இருப்பதாக உணர்ந்தேன்” என்றார்.
பட மூலாதாரம், Sagar
இந்து மதத்தில், திருமணத்திற்குப் பிறகு, மணமகனின் வீட்டில் சத்யநாராயண பூஜை நடத்தப்படும். மேலும், பல கோயில்களுக்குச் சென்று தரிசனமும் செய்யப்படும்.
திருமணத்திற்குப் பிறகு சாகர் தன் வீட்டில் சத்யநாராயண பூஜையும் நடத்தினார். ஆனால் அவரது மனைவி பூஜையில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். தங்கள் இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்ததாக சாகர் கூறுகிறார்.
“வழக்கப்படி, என் பெற்றோர் வீட்டில் சத்யநாராயண பூஜை நடத்தினர். ஆனால் என் மனைவி அதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். பிறகு நாங்கள் அனைவரும் குழப்பமடைந்தோம்.”
“இறுதியாக நான் என் மனைவியிடம், உண்மையான காரணத்தை கேட்டபோது, அவள் தான் ஏற்கனவே திருமணமானவள் என்று சொன்னாள்.” இந்த சம்பவத்தை விவரிக்கும்போது சாகரின் முகத்தில் துக்கம் தெளிவாகத் தெரிந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை சாகர் உணர்ந்தார். இது மற்றவர்களுக்கு நடக்காமல் இருக்க காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணைக்குப் பிறகு, ‘தரகு’ என்ற பெயரில் பணம் பறித்த ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
இதுபோல் ஏமாற்றப்பட்டவர் சாகர் மட்டுமல்ல, பல இடங்களில் இது நடப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.
“எனக்கு நடந்தது பலருக்கு நடந்திருக்கிறது. கிராமப்புற ஆண்கள், சமூக அவமானத்திற்கு அஞ்சியே இவற்றை வெளியே சொல்வதில்லை. ஆனால், இவற்றுக்கு சமூகமே பொறுப்பு. நிர்வாகத்திற்கு இரட்டிப்பு பொறுப்பு உள்ளது,” என்று சாகர் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
மறுபுறம், “காவல்துறை நிர்வாகம் இந்த கும்பலுக்கு எதிராக மோசடி வழக்கை மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆனால், அவர்கள் சில நாட்களுக்குப் பிறகு ஜாமீன் பெறுகிறார்கள். இதன் காரணமாக, மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மீது போதுமான பயம் இல்லை” என்று சாகர் வருத்தப்படுகிறார்.
‘இடைத்தரகர் கும்பல்கள்’
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, மணமகன்களிடமிருந்து பணம் பறிப்பதற்கு இடைத்தரகர் கும்பல்கள் ஒரு சிறப்பு முறையைக் கொண்டுள்ளன.
“திருமணம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் தாய்க்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அந்தப் பெண்ணின் குடும்பத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் என்னிடம் கூறப்பட்டது.” என்கிறார் சாகர்.
தொடர்ந்து பேசிய அவர், “உண்மையில், என்னுடைய சூழ்நிலையும் மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால் நாங்கள் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டியிருந்தது. அதனால் நான் வங்கியில் இருந்து கடன் வாங்கி பெண்ணின் குடும்பத்தாருக்கு கொடுத்தேன்.”
“திருமணத்திற்கு முன்பு அவர்கள் என்னிடமிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டார்கள். அதன் பிறகு, திருமணத்தை நடத்த எனக்கு 20-25 ஆயிரம் ரூபாய் செலவானது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற வழக்குகள் இத்துடன் நிற்பதில்லை. பெரும்பாலான சமயங்களில், இந்த போலி திருமணங்களில், மணப்பெண் என்று விவரிக்கப்படும் பெண் திருமணத்திற்குப் பிறகு நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகி விடுவார்.
பாதிக்கப்பட்டவர்களும் காவல்துறையினரும், இதில் அந்தப் பெண் மட்டும் தனியாக இல்லை என்றும், இதன் பின்னணியில் ஒரு பெரிய கும்பல் ஒரு குறிப்பிட்ட முறையில் செயல்படுவதாகவும் கூறுகிறார்கள்.
“நாங்கள் அந்தப் பெண்ணிற்கு ரூ.10,000 மதிப்புள்ள வெள்ளி பொருட்களை வழங்கியிருந்தோம். அவருக்கு இரண்டரை தோலா (Tola- 11.66 கிராம்) மதிப்புள்ள தங்கத் தாலி, ஒரு நெக்லஸும் அணிவித்தோம். மொத்தத்தில், என்னிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது” என்று சாகர் கூறுகிறார்.
பீட் மாவட்டத்தில் உள்ள வத்வானி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் வர்ஷா வகாடே பிபிசி மராத்தியிடம் பேசுகையில், “பருவ வயதை அடைந்த சிறுமிகள், ‘தரகு’ கும்பலால் கண்காணிக்கப்படுகிறார்கள். கடந்த மாதம் (செப்டம்பர் 2025) இதேபோன்ற புகார் எங்களுக்கு வந்தது.” என்று கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “புகார்தாரர் அளித்த தகவலின்படி, திருமணம் நடந்த எட்டு நாட்களுக்குள் தனது தாய் வீட்டிற்குச் செல்லவேண்டுமென அந்தப் பெண் கூறியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில், அவளை அழைத்துச் செல்ல வந்தவர்கள் அந்நியர்கள். எனவே, மணமகன் குடும்பத்தினர், மருமகளை அந்நியர்களுடன் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில், அது ‘போலி திருமண வழக்கு’ என்று தெரிந்தது.” என்றார்.
வர்ஷா வகாடே மேற்கொண்ட அடுத்தகட்ட விசாரணையில், அந்தக் கும்பல் ஒரு குறிப்பிட்ட பாணியை பின்பற்றுவது தெரியவந்தது. மேலும், தனது காவல் பகுதியில் இதேபோன்ற இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
முதல் வழக்கில் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இடைத்தரகர்கள் குழுவில் குறைந்தது 7 முதல் 8 பேர் உள்ளனர். பெண்ணின் தாய், பெண், ஒரு இடைத்தரகர், உறவினர்கள் மற்றும் இரண்டு பேர், பெண்ணை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறுவார்கள்.
மோசடி கும்பலை சேர்ந்த ஒரு நபர் மணமகனின் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார். மணமகனின் தாய்வழி மாமா அல்லது உறவினர் ஒருவருடன் பேசி நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.
பின்னர் திருமண ஏற்பாடுகள் அவசரமாக செய்யப்படுகின்றன. திருமணத்திற்கு முன், பெண்ணின் தாய் அல்லது தந்தையின் பேரில் மருத்துவ காரணங்களை கூறி பணம் பறிக்கப்படுகிறது.
இரண்டாவது வகை, ‘மணப்பெண் பெற்றோர் இல்லாதவர், அவரை கவனித்துக் கொள்ளும் அத்தை/உறவினருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும்’ என்று கூறப்படுகிறது.
பின்னர், திருமணமான சில நாட்களுக்குள், அந்தப் பெண் நகைகள் மற்றும் பணத்துடன் ஓடிவிடுகிறார்.
சாகர் துணிச்சலாக காவல்துறையில் புகார் அளித்தார், ஆனால் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் பெரும்பாலோர் அப்படிச் செய்வதில்லை.
இது குறித்துப் பேசிய ஜுன்னார் காவல் துணைக் கண்காணிப்பாளர் தனஞ்சய் பாட்டீல், “இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் முன்வந்து புகார் அளிப்பது அவசியம். ஆனால் அவ்வாறு செய்வதால் ஏற்படும் சமூக அவமானத்திற்கு அவர்கள் பயப்படுகிறார்கள்” என்று கூறுகிறார்.
“இரண்டாவதாக, திருமணங்களில் நிதி மோசடி என்பது எப்போதும் ஒரு தனிப்பட்ட தவறாகவே கருதப்படுகிறது, பாதிக்கப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் போலி திருமணங்களை நிறுத்த விரும்பினால், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும்.” என்கிறார்.
‘பெண்களும் இந்த மோசடியால் பாதிக்கப்படுகிறார்கள்’
பிபிசி மராத்தியிடம் பேசிய சாகர் மற்றொரு முக்கியமான தகவலைக் கூறினார். “எனது மனைவி என்ற பெயரில் வந்தவரே, பாதிக்கப்பட்டவர் தான். ஒரு பெரிய கும்பல் அவரை இந்த மோசடிக்கு பயன்படுத்தியுள்ளது” என்றார்.
“அந்தப் பெண்ணுக்கு ஜுன்னார் தாலுகாவில் பல முறை திருமணம் நடந்துள்ளது. என்னைப் போலவே பல ஆண்கள் இதே வழியில் ஏமாற்றப்பட்டனர்” என்று சாகர் கூறுகிறார்.
“இங்க ஒரே ஒரு இடைத்தரகர் மட்டும் இல்லை, இதையெல்லாம் நடத்தும் ஒரு பெரிய கும்பல் இருக்கிறது. நான் அந்தப் பெண்ணிடம், ‘இதையெல்லாம் ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர், ‘எங்களுக்கு வேறு வழியில்லை’ என்றார். அவருக்கு முதலில் முறையாக ஒரு திருமணம் நடந்துள்ளது, ஆனால் அவருடைய கணவர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.” என்கிறார் சாகர்.
பாதிக்கப்பட்ட மற்றொரு இளைஞரிடமும் பிபிசி மராத்தி பேசியது.
பெயர் வெளியிட விரும்பாத அவர், “என் மனைவி என்னுடன் ஒன்றரை வருடங்கள் வாழ்ந்தார். என்னுடன் இருந்தபோது, நன்றாகவே இருந்தார். அவர் வீட்டில் உள்ள பணத்தை ஒருபோதும் தொட்டதில்லை. ஆனால் எப்போதாவது அவர் தன் அத்தையுடன் தங்க புனேவுக்குச் செல்வார்” என்றார்.
“இதற்கிடையே, அவர் மீண்டும் ஒரு திருமணம் செய்து கொண்டார். சில இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் இதைப் பற்றி எங்களுக்குத் தெரியவந்தது. நாங்கள் அவரிடம் விசாரித்தபோது, என்னை திருமணம் செய்வதற்கு முன்பே அவருக்கு ஒரு திருமணம் ஆகியிருந்ததும், எனக்குப் பிறகு வேறொரு திருமணம் செய்து கொண்டார் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. அப்போதுதான் ஒரு கும்பல் அவரைப் பயன்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன்.” என்று அந்த இளைஞர் கூறினார்.
இதுபோன்ற திருமண மோசடியில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றால், திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இளைஞர்கள் அவசரப்பட வேண்டாம் என்றும், பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய முழுமையான தகவல்களைப் பெற, பெண்ணின் சொந்த ஊருக்குச் சென்று போதுமான விசாரணைகளை மேற்கொள்ளவும் காவல்துறை அறிவுறுத்துகிறது.
எதில் கவனமாக இருக்க வேண்டும்?
“திருமணத்திற்கு முன்பு நாங்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் செல்லவில்லை. அந்தக் கும்பல் எனக்கு அவசரமாக திருமணம் செய்து வைத்தது, நானும் சம்மதித்தேன், அது தான் எங்களது மிகப்பெரிய தவறு,” என்று சாகர் பிபிசி மராத்தியிடம் கூறினார்.
ஆனால் பிற ஆண்கள் இதுபோன்ற தவறுகளைச் செய்யக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.
இத்தகைய மோசடிகளைத் தடுக்க சில முன்னெச்சரிக்கைகள் தேவை என்று காவல்துறை கூறுகிறது.
- அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரிக்கவும். கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பப் பின்னணி ஆகியவற்றைச் சரிபார்க்கவும்.
- பெண்ணின் வீடு அல்லது கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரிக்கவும்.
- உள்ளூர் மக்களிடம் பேசுங்கள். குடும்பம், அந்தப் பெண் பற்றிய தகவல்களை கிராம மக்களிடமிருந்து பெறுங்கள்.
- ஆன்லைன் சுயவிவரங்கள் மற்றும் தகவல்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும். சந்தேகத்திற்குரிய எதையும் நீங்கள் கண்டால் எச்சரிக்கையாக இருங்கள்.
- யாராவது ஒரு பிரச்னையைக் காரணம் காட்டி பணம் கேட்டால், கவனமாக இருக்கவும்.
- திருமணம் ஒரு இடைத்தரகர் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறதா என்பதை விசாரிக்கவும்.
- இடைத்தரகர் யார், அவர்களின் அனுபவம் என்ன? அவர்கள் இதற்கு முன்பு எத்தனை திருமணங்களை வெற்றிகரமான ஏற்பாடு செய்திருக்கிறார்கள்? இதையெல்லாம் சரிபார்க்கவும்.
‘ஒரு முக்கிய சமூகப் பிரச்னை’
கிராமப்புறங்களில் திருமணத்திற்கு ஆண்கள் சிரமப்பட காரணம், பெண்கள் மற்றும் பெற்றோரின் அதிக எதிர்பார்ப்புகள் தான். மணமகனுக்கு நல்ல வேலை, வீடு மற்றும் மரியாதைக்குரிய குடும்பம் இருக்க வேண்டும் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. ஆனால் சமூக ஆர்வலர் ரேணுகா காட் கருத்துப்படி, இது முக்கிய காரணம் அல்ல.
“மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. இதன் காரணமாக, திருமணம் செய்து கொள்ள பெண்கள் இல்லாததால் பல இளைஞர்கள் திருமணமாகாமல் உள்ளனர். மறுபுறம், கிராமத்தில் திருமணம் செய்துகொண்டு வாழும் ஒரு பெண் கிராமப்புற வாழ்க்கை முறை, விவசாய வேலை, வீட்டு பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் வீட்டுப் பொறுப்புகளின் சுமைகளின் கீழ் வாழ வேண்டியுள்ளது” என்று அவர் கூறுகிறார்.
ஒரு பெண் வேலைக்குச் சென்றால் பரவாயில்லை, ஆனால் அவள் வீட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டைப் பொறுப்பு பெரும்பாலும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் படித்த பெண்கள் நகரத்தில் வாழ விரும்புகிறார்கள் என்கிறார் காட்.
இளம் எழுத்தாளர் ஸ்வேதா பாட்டீலின் கூற்றுப்படி, கிராமப்புறங்களில் பெண்களின் சுதந்திரம் பெரும்பாலும் அடக்கப்படுகிறது, அதனால்தான் அவர்கள் கிராமப்புற திருமண வாழ்க்கையை விரும்புவதில்லை.
பட மூலாதாரம், Getty Images
பிபிசி மராத்திக்காக எழுதிய ஒரு கட்டுரையில், “கிராமங்கள் மாறினால், கிராமவாசிகளின் மனப்பான்மையும் மாறும். அதன் விளைவாக, திருமணத்திற்கு ஒரு கிராமத்து விவசாயி வேண்டாம் எனச் சொல்லும் பெண்களின் மனப்பான்மையும் மாறும். கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில், அனைத்தும் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படுகின்றன, குறைந்தபட்சம் அந்த வீட்டின் மருமகளுக்கு எல்லா விதிகளும் பொருந்துகின்றன.” என்று ஸ்வேதா பாட்டீல் கூறுகிறார்.
“என் அக்காவுக்கு இது மாதிரி ஒரு பெரிய வீட்டில் கல்யாணம் ஆனது. அவர் தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, முற்றத்தைத் துடைத்து, ரங்கோலி கோலம் போடவேண்டும். மாதவிடாய் அல்லது உடல்நிலை சரியில்லை என்றாலும், அதிக நேரம் தூங்கக் கூடாது என விதிகள் மிகவும் கண்டிப்பாக இருக்கும்.” என்றும் அவர் கூறுகிறார்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 (2015-2016) படி, இந்தியாவில் 41 சதவீத பெண்கள் மட்டுமே முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். கிராமப்புறங்களில் இந்த சதவீதம் இன்னும் குறைவாக உள்ளது.
“நகரத்தில் எல்லாம் சிறப்பாக இல்லை தான், ஆனால் குறைந்தபட்சம் நகரத்தில் சுதந்திரமாக வாழ வாய்ப்புகள் உள்ளன. கிராமத்தில் ஒரு மருமகள் ஜீன்ஸ் அணிந்து இரவில் தனது கணவருடன் சினிமாவுக்குச் சென்றால், மாமியார் அதை விரும்புவார்களா? பிரச்னை ஆடைகளைப் பற்றியது அல்ல, மாறாக சுதந்திரமாக வாழ்வது பற்றியது. பெண்கள், தங்கள் கணவர்கள் நிதி ரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்களாகவும், புரிதல் உள்ளவர்களாகவும், குடும்பத்தை நேசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மோசமானதா?” என்று ஸ்வேதா கேள்வியெழுப்புகிறார்.
“கிராமப்புற குடும்பங்களில், பெண்கள் இன்னும் குடும்ப மரபுகளைப் பின்பற்ற வேண்டும், பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும், வீட்டு வேலைகளில் பங்கேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன, படித்த பெண்கள் இதை ஏற்றுக்கொள்வது கடினம்” என்றும் அவர் கூறுகிறார்.
ஒருபுறம், இது நிதிசார்ந்த மற்றும் உளவியல் ரீதியிலான துரோகத்தின் கதை, மறுபுறம், உரிய வயதில் திருமணம் செய்துகொள்ள முடியாமல் ஆண்கள் தவிப்பதும் ஒரு முக்கிய சமூகப் பிரச்னையாக மாறியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு