- எழுதியவர், அல்பேஷ் கர்கரே
- பதவி, பிபிசி மராத்திக்காக
-
மும்பை காவலர் ஒருவரின் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மகன், ஒரு சிக்கலான குற்றத்தை எவ்வாறு தீர்த்தார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மும்பையின் நெரிசலான தாதர் ரயில் நிலையத்தில் ஒரு சூட் கேஸில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர், காது கேளாதவர்களாகவும், வாய் பேச முடியாதவர்களாகவும் இருந்தனர். இதனால், மும்பை காவல்துறை இந்த வழக்கை தீர்ப்பதிலும், விசாரணையிலும் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
இறுதியாக, ஒரு மும்பையை சேர்ந்த காவலர் ஒருவரின் மகன் இந்த வழக்கின் மர்மத்தைத் தீர்த்தார்.
இந்த வழக்கு மும்பையில் உள்ள பைதுனி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பைதுனி காவல்துறை, தாதர் ரயில்வே காவல்துறை மற்றும் மும்பை காவல்துறையைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் விசாரணை நடத்தின.
என்ன நடந்தது?
சம்பவம் நடந்தது தாதர் ரயில் நிலையத்தில். அன்று 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஆகும்.
நேரம் இரவு 11:50 மணி இருக்கும். ரயில் நிலையத்தில் மக்கள் தங்களுக்கான ரயில்களைப் பிடிக்க அவசர அவசரமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.
அது தாதர் ரயில் நிலையம் என்பதால், வழக்கம் போல் உள்ளூர் ரயில்களும், விரைவு ரயில்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
திங்கள்கிழமை இரவு தாதரில் இருந்து சாவந்த்வாடி செல்லும் துடாரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக பயணிகள் 11வது நடைமேடையில் காத்திருந்தனர்.
துடாரி எக்ஸ்பிரஸ் நடைமேடைக்கு வந்ததும், பயணிகள் ரயிலில் ஏற விரைந்தனர்.
அந்த 11வது நடைமேடையில் ஐந்து, ஆறு ஆகிய பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில், இரண்டு பேர் துடாரி எக்ஸ்பிரஸில் ஏறச் சென்றார்கள்.
அவர்கள் இருவரிடமும் சக்கரங்கள் கொண்ட ஒரு சூட்கேஸ் இருந்தது. அதனை ரயிலில் ஏற்ற அவர்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டனர். பெட்டியின் அதிக எடை காரணமாக இருவரும் தங்களது உடைமைகளை ரயிலில் ஏற்றுவதற்குள் சோர்ந்துவிட்டனர், வியர்வையில் அவர்களது உடைகள் நனைந்தன.
அந்த சமயத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையை சேர்ந்த சந்தோஷ் குமார் யாதவ் மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் மாதவ் கேந்திரா நடைமேடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த இருவரின் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள், இருவரையும் தடுத்து நிறுத்தி பெட்டியை திறக்கச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் தயக்கம் காட்டினார்கள். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் , பெட்டியின் மோசமான நிலையைப் பார்த்து, அதைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, திறந்து பார்த்த பிறகு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அதில் இரத்த வெள்ளத்தில் ஒரு உடல் இருந்தது. அந்த உடலின் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. உடனடியாக காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்ய முயன்றனர். ஆனால், அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார், மற்றவர் பிடிபட்டார்.
காவல்துறையினர் அந்த நபருடன் பையையும் கைப்பற்றி உடலை மருத்துவமனைக்கு அனுப்பினர். குற்றம் சாட்டப்பட்டவர் பைதோனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கினர். கைது செய்யப்பட்ட நபர், காது கேளாதவர். இதன் காரணமாக, ஆரம்பத்தில் அவரிடமிருந்து எந்த தகவலையும் காவல்துறையினரால் பெற முடியவில்லை. அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர்.
சைகை மொழி அறிந்த ஒருவரை தேடிய காவல்துறை
இந்த வழக்கில் காவல்துறை அதிக ஈடுபாடு காட்டினாலும் கூட, குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
சம்பவம் நிகழ்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, நள்ளிரவில், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மக்களின் சைகை மொழியை அறிந்த ஒருவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
ஆனால், நள்ளிரவு ஆகிவிட்டதே, இப்போது யார் வருவார்கள்? இந்த வழக்கின் மர்மத்தை தீர்ப்பது எப்படி? என்று கேள்விகள் எழுந்தன. சைகை மொழி அறிந்த ஒருவரைத் தேடி, பைதுனி காவல்துறையின் ஒரு குழு சென்றது.
அந்தக் குழு நள்ளிரவில், ஆர்.ஏ.கே கித்வாய் மார்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு சோதனைச் சாவடி பகுதியை அடைந்தனர். அந்த நேரத்தில், ஆர்.ஏ.கே கித்வாய் மார்க் காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடே ரவுப் பணியில் இருந்தார்.
சோதனைச் சாவடியில் இருந்த காவலர்கள் தாதர் காவல்துறையின் வாகனத்தில் இருந்தவர்களிடம், “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டுள்ளனர்.
ஒரு வழக்கு தொடர்பாக உதவி பெற, சைகை மொழி அறிந்த ஒருவரைத் தேடி ‘சாதனா வித்யாலயா’ என்னும் பள்ளிக்கு செல்வதாக தாதர் காவல்துறை தெரிவித்துள்ளது.
அப்போது, அங்கு இருந்த கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடே, “இந்த நேரத்தில் யாரும் கிடைக்க மாட்டார்கள். ஆனால், என் மகனும் அந்தப் பள்ளியில்தான் படித்தான், அவன் உங்களுக்கு உதவ வாய்ப்பு உள்ளதா என பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.
பைதோனி காவல்துறையினர், சத்புடேவிடம் உடனடியாக உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அதிகாலை 2 மணிக்கு, மேலதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி சத்புடே தனது வீட்டிற்குச் சென்றார். சிறிதும் தாமதிக்காமல், தனது மகன் கௌரவ் சத்புடேவை பைதோனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
கௌரவ் மூலம் கிடைத்த முக்கியமான தகவல்கள்
அதிகாலை 2 மணிக்கு குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்பு கொள்ள காவல்துறை குழு கௌரவிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்தது. கௌரவ் சைகை மொழியில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.
கைதான நபர் தனது பெயர் ஜெய் சாவ்தா என கூறினார். இதன் பின்னர் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைத்தது, ஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு, விசாரணைக்குத் தேவையான முக்கியமான தகவல்கள் கிடைத்தன. இது குற்றப் பின்னணி, இணை குற்றவாளிகள் மற்றும் குற்றத்தின் நோக்கம் பற்றிய விரிவான தகவல்களை காவல்துறைக்கு வழங்கியது.
பிபிசி மராத்தியிடம் பேசிய கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடே, “நானும் என்னுடைய மகனும், இந்திய குடிமக்களாக எங்களது கடமையை நிறைவேற்றினோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கௌரவ், சாதனா வித்யாலயாவில் 10ஆம் வகுப்பு வரை படித்தார், மேலும் மஸ்கான் டாக் லிமிடெட்டில் ‘பைப் ஃபிட்டர்’ படிப்பை முடித்தார். அவர் தற்போது வீட்டில் இருக்கிறார். என் காவல்துறை சகாக்களுக்கு இந்த வழக்கில் உதவி தேவைப்பட்டதும், என் மகன் உடனடியாக உதவினான். கௌரவின் முயற்சியால், இந்த வழக்கு பற்றிய முழு தகவலையும் காவல்துறையினரால் பெற முடிந்தது. கௌரவ் மாற்றுத்திறன் கொண்ட ஒருவராக இருந்தாலும், எந்தவொரு வேலையையும் சிறப்பாகச் செய்வார். அவர் புத்திசாலி.” என்றார்.
விசாரணையில் தெரியவந்தது என்ன?
விசாரணையின் போது, தப்பித்து ஓடிய குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் ஷிவ்ஜித் சிங் என்பது தெரிய வந்தது. அவர் உல்ஹாஸ் நகரில் வசிக்கிறார் என்பதும் தெரியவந்தது. உள்ளூர் காவல்துறை மற்றும் ரகசிய தகவல் அளிப்பவர்களின் உதவி மூலம் இரண்டாவது குற்றவாளியான ஷிவ்ஜித் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.
ரயில் நிலையத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டவர், அர்ஷத் சாதிக் அலி ஷேக் (வயது 30) என அடையாளம் காணப்பட்டது. அர்ஷத், சாண்டாக்ரூஸின் கலினா பகுதியில் வசித்துவந்தவர். அர்ஷத்தும், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர் என காவல்துறை தெரிவித்தது.
விசாரணையின் போது, ஷிவ்ஜித் சிங் மற்றும் ஜெய் சாவ்தா ஆகியோர் அர்ஷத் சாதிக் அலி ஷேக்கைக் கொன்றதாக ஒப்புக்கொண்டனர்.
பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உடலை கொங்கனுக்கு எடுத்துச் சென்று அப்புறப்படுத்த முடிவு செய்தனர். அர்ஷத்தின் உடலை ஒரு பெட்டியில் அடைத்து, துடாரி எக்ஸ்பிரஸ் மூலம் கொங்கனுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
அப்போதுதான், காவல்துறையினர் சந்தேகமடைந்து இருவரையும் அழைத்துச் சென்றதால், முழு சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையின் போது ஒப்புக்கொண்டனர்.
கொலையின் மர்மம் அங்கு முடிவடையவில்லை, கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடேவின் மகன் கௌரவ், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பேசிய பிறகு மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலைக் கூறியிருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரு வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்தவர்கள். இதில் உலகின் பல நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அடங்குவர்.
அர்ஷத்தைக் கொல்ல கொலையாளிகள் குழுவில் உள்ள மூன்று மாற்றுத்திறனாளிகளின் உதவியைப் பெற்றனர். கொலை நடந்த நேரத்தில், மூன்று மாற்றுத்திறனாளிகளும் வீடியோ அழைப்புகளில் பேசிக்கொண்டனர். பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளியும் இதில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கௌரவிடம் தெரிவித்தனர்.
இந்த கொலை ஏன் செய்யப்பட்டது?
அர்ஷத் ஷேக், ருக்சனா என்ற பெண்ணை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ருக்சனாவும் வாய் பேச முடியாதவர்.
அர்ஷத் சின்ன சின்ன வேலைகளைச் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒரு நாள் பைதோனியில் ஒரு வசதியான வீட்டில் வசித்து வந்த ஜெய் சாவ்தா மற்றும் ஷிவ்ஜீத் ஆகியோருடன் அர்ஷத் நட்பு கொண்டார்.
பின்னர், ஜெய் மற்றும் அர்ஷத்தின் நட்பு மேலும் வளர்ந்தது. அது வீட்டிற்கு வந்து போகும் அளவுக்கு வலுப்பட்டது. இதில் அர்ஷத்தின் மனைவி ருக்சனாவுக்கு ஜெய் சாவ்தாவுடன் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் இருவருக்கும் இடையே ஒரு தடையாக இருந்த அர்ஷத்தை கொல்ல ஜெய் ஒரு சதித்திட்டம் தீட்டினார்.
அவரை கொல்ல நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.
இதற்காக, ஜெய் தனது நண்பர் ஷிவ்ஜித்தின் உதவியைப் பெற்றார். அர்ஷத்தை பைதோனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்ததாகவும், அவருக்கு மது அருந்த கொடுத்ததாகவும், அவர் அதிகமாக போதையில் இருந்தபோது சுத்தியலால் குத்திக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காவல்துறையினரால் அர்ஷத்தின் மனைவி உள்பட மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, அர்ஷத்தின் மனைவியைப் பற்றிய ஆதாரங்களைக் கண்டறிந்த பின்னர் அவரையும் பைதோனி போலீசார் கைது செய்தனர்.
பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டதால், அவரைக் காவலில் எடுக்க காவல்துறையினர் விரும்பினர். இதனால் அந்நாட்டின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர காவல்துறையினர் முயற்சித்தனர்.
இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை நான்கு மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இருப்பினும், பல நாட்கள் விசாரணைக்குப் பிறகு, பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை காவல்துறையினர் மீட்டனர்.
பலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர், மேலும் உறுதியான ஆதாரங்களுடன், மேலும் விசாரணை நடத்தப்பட்டு, ஜெய் பிரவீன் சாவ்தா, ஷிவ்ஜித் சிங் மற்றும் ருக்சானா ஷேக் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இந்த கொலை வழக்கைத் தீர்க்க அனைத்து காவல்துறை குழுக்களும் கடுமையாக உழைத்தன.
கிட்வாய் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜேஷ் சத்புடே மற்றும் அவரது மகன் தங்கள் கடமைகளை உண்மையாகச் செய்ததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டனர். முக்கியமாக, கௌரவின் உதவியுடன், தாதர் ரயில் நிலையத்தில் நடந்த கொலை வழக்கை ஆரம்பத்திலிருந்தே தீர்க்க முடிந்தது. இது சம்பந்தமாக, பல சைகை மொழி நிபுணர்களின் உதவியும் பெறப்பட்டது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு