0
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி, அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ANI செய்தி நிறுவனம் தெரிவித்ததன்படி, பராமதி பகுதியில் தரையிறங்க முயன்றபோது குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தின் தாக்கத்தால் விமானம் முழுமையாக சேதமடைந்ததாகவும், அஜித் பவார் உள்ளிட்ட விமானத்தில் பயணித்த மேலும் சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகனான அஜித் பவார்(வயத் 67), மராட்டிய துணை முதல்-மந்திரியாக 6 முறை பதவி வகித்தவர் ஆவார். மாநிலத்தின் நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் அஜித் பவார் இருந்துள்ளார்.
சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் அஜித் பவார் தனித்து செயல்பட்டார். அவரது பிரிவையே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மராட்டியத்தில் பா.ஜ.க. கூட்டணி அரசில் 3-வது பெரிய கட்சியாக அஜித் பவாரின் கட்சி உள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விவரங்களை அதிகாரப்பூர்வ தரப்புகள் உறுதிப்படுத்தி வருகின்றன.
மேலும், இந்த துயரச் சம்பவம் மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.