மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
”லக்னோவிலிருந்து மும்பைக்குச் செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணிகள் தீ விபத்து ஏற்பட்டதாக நினைத்தனர்.” என பூசாவல் பிரிவு ரயில்வே செய்தி தொடர்பாளர் பிபிசி மராத்தியிடம் கூறினார்.
”இதன் காரணமாக பல பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினர். அதே நேரத்தில் கர்நாடக எக்ஸ்பிரஸ் மறுபுறம் வந்து கொண்டிருந்தது, பல பயணிகள் மீது அந்த ரயில் மோதியது. ” என அவர் தெரிவித்தார்
”இந்த சம்பவத்தில் 12 பயணிகள் காயமடைந்தனர், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என மாவட்ட ஆட்சியர் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
”புஷ்பக் எக்ஸ்பிரஸ் லக்னோவிலிருந்து மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினலுக்கு சென்று கொண்டிருந்தது. மஹேஜி மற்றும் பர்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே யாரோ சங்கிலியை இழுத்துள்ளனர். அந்த நேரத்தில், ஒரு பெட்டியில் இருந்து பயணிகள் தண்டவாளத்தில் இறங்கினர்.இதற்கிடையில், மறுபுறம் வந்து கொண்டிருந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மீது மோதியது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என மத்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் ஸ்வப்னில் நீலா தெரிவித்துள்ளார்