பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஓர் அரசு பழங்குடியினர் விடுதியில் தங்கியுள்ள பல மாணவிகள், விடுமுறை முடிந்து விடுதிக்குத் திரும்பும்போது, சிறுநீரை வைத்துச் செய்யப்படும் கர்ப்பப் பரிசோதனைக்குத் தாங்கள் உட்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு விதிகளில் அத்தகைய நிபந்தனை எதுவும் இல்லாதபோதிலும், தாங்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
மகாராஷ்டிராவின் பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையர் லீனா பன்சோத், இதுபோன்ற எந்தப் பரிசோதனையும் நடத்தப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இத்தகைய பரிசோதனையை நிறுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பின்னரும்கூட, இந்த நடைமுறை தொடர்வதாக மாணவிகள் கூறுகின்றனர்.
மகாராஷ்டிராவின் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்படும் ஓர் அரசு விடுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவியான சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பிபிசி மராத்தியிடம் பேசியபோது, “நாங்கள் ஏன் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்? நான் முதலாம் ஆண்டு கல்லூரிப் படிப்புக்கு வந்ததில் இருந்தே, இதைச் செய்யவில்லையெனில் விடுதியில் தங்க அனுமதிக்கப்பட மாட்டோம் என்று மேடம் கூறி வருகிறார்,” என்று தெரிவித்தார்.
அவர் உள்பட, இந்த விடுதியைச் சேர்ந்த பல மாணவிகள் இதே குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
ஆஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும், “ஏழு அல்லது எட்டு நாட்கள் விடுப்பில் சென்று திரும்பும்போது, நாங்கள் சிறுநீர் கர்ப்பப் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும்,” என்றார்.
அவருடன் இருந்த மற்றொரு மாணவியான ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), “விடுமுறை முடிந்து மாணவிகள் வீட்டிலிருந்து திரும்பும் போதெல்லாம் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இது பற்றி விடுதி சார்பில்தான் எனக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்றார்.
மேற்கொண்டு பேசிய அவர், “அதைச் செய்யாமல் அவர்கள் உடல் தகுதிச் சான்றிதழ் வழங்குவதில்லை. இதற்கென்றே ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதைப் பின்பற்றிய பின்னரே உடல் தகுதிச் சான்றிதழை வழங்குகிறார்கள்,” என்றும் தெரிவித்தார்.
விடுமுறைக்குப் பிறகு தங்களிடம் உடல் தகுதிச் சான்றிதழ் கேட்கப்படுவதாகவும், தாங்கள் கர்ப்பப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவதாகவும் இந்த மாணவிகள் கூறுகின்றனர்.

சர்ச்சையின் பின்னணி என்ன?
அரசு விதிமுறைகளின்படி, விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு கர்ப்பப் பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமில்லை. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
“நாங்கள் கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன் முடிவு நெகட்டிவ் என்று இருந்தால் மட்டுமே நாங்கள் விடுதியில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறோம்,” என்று கூறுகிறார் சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
மாணவிகள் இதைச் செய்யாமல், மீதமுள்ள பிற பரிசோதனைகளை மட்டும் செய்து உடல் தகுதிக்கான மருத்துவப் பரிசோதனையை முடித்துக்கொண்டால் என்ன நடக்கும்?
அதுகுறித்துப் பேசிய மாணவி ஆஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), “கர்ப்பப் பரிசோதனை கட்டாயம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதைச் செய்யவில்லையெனில் எங்களை விடுதிக்குள் அனுமதிக்க மாட்டார்கள்,” என்றார். ஆஷாவும் நவம்பர் 24ஆம் தேதியன்று இந்தப் பரிசோதனையைச் செய்துகொண்டார்.
“எனக்கு மருத்துவப் பரிசோதனைக்கான ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதோடு, கர்ப்பப் பரிசோதனைக் கருவி ஒன்றும் கொடுக்கப்பட்டது. அந்தக் கருவியுடன் நான் ஒரு அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு ஒரு மருத்துவரிடம் சென்று, அவர் முன்னிலையில் நான் எனது சிறுநீரை அந்தக் கருவியில் ஊற்ற வேண்டும்.
அந்தக் கருவியில் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்தால், அவர்கள் அதைப் பதிவு செய்வார்கள். பிறகு, அந்தப் படிவத்தில் ஆசிரியையின் கையொப்பம் மற்றும் முத்திரை பதிக்கப்படும். அதைக் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்,” என்று விவரித்தார்.
பட மூலாதாரம், Getty Images
‘இது மிகவும் அவமானகரமானது’
இந்தச் செயல்பாடுகளை மாணவிகள் மிகவும் ‘அவமானகரமானது’ என்று விவரிக்கின்றனர்.
“நாங்கள் இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளோம். ஆனால், அதற்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை,” என்கிறார் சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு மாணவி, தான் பலமுறை இந்தப் பரிசோதனைகளைச் செய்துள்ளதாகக் கூறினார். கிட்டத்தட்ட அனைத்து மாணவிகளுமே இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தனர்.
“இந்தச் சூழல் மாணவிகளின் கல்வியைப் பாதிப்பது மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது,” என்கிறார் ஆஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
மேற்கொண்டு பேசிய அவர், “இது நிறுத்தப்பட வேண்டும். இதைப் பார்க்கும் மக்கள் எங்களை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். ‘திருமணமாகாத நாங்கள் ஏன் இந்தப் பரிசோதனையைச் செய்கிறோம்?’ என்ற கேள்வியுடன் நோக்குகிறார்கள்,” என்றும் குறிப்பிட்டார்.

‘ஆசிரமப் பள்ளி மாணவிகளுக்கும் இதே அனுபவம்’
இதேபோன்ற புகார், புனே மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஆசிரமப் பள்ளியில் இருந்தும் வந்துள்ளது.
மகாராஷ்டிராவின் மலை மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக ஆசிரமப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
மகாராஷ்டிரா பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை, அரசு நிர்வகிக்கும் 552 ஆசிரமப் பள்ளிகளை நடத்தி வருகிறது. இவற்றில் 412 ஆசிரமப் பள்ளிகள், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளிலும், 140 பள்ளிகள் அத்தகைய பகுதிகளுக்கு வெளியேயும் அமைந்துள்ளன.
இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள ஆசிரமப் பள்ளி ஒன்றில், மாணவிகளுக்கு கட்டாய கர்ப்பப் பரிசோதனை செய்யப்படுவதை பெற்றோர் ஒருவர் உறுதிப்படுத்தினார். அது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று விசாரித்தபோது, அங்கிருந்த ஒரு மருத்துவரும் அவரிடம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.
அங்கு படிக்கும் ஒரு மாணவியின் தாயார் இதுகுறித்துக் கூறுகையில், “மாதவிடாய் ஏற்படும் மாணவிகள் மட்டுமே மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்கு ஒரு கிட் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கருவி மூலம் சிறுநீர் பரிசோதிக்கப்படுகிறது. பின்னர், அதில் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என எது வருகிறதோ அதை படிவத்தில் குறிப்பிடுகிறார்கள்,” என்று விவரித்தார்.
மேலும் பேசிய அவர், “இதில் அரசுக்கும் சில பொறுப்புகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் இந்தப் பரிசோதனையைச் செய்ய 150-200 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. அந்தச் செலவை ஒவ்வொரு முறையும் பெற்றோர்தான் ஏற்க வேண்டியுள்ளது,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாகத் தகவல் பெறுவதற்காக, நாங்கள் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றோம்.
அங்கு, பெயரைக் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய மருத்துவர் ஒருவர், “ஆசிரமப் பள்ளியின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் கர்ப்பப் பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு வருகிறார்கள். அதன் முடிவுகள் எங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஆசிரமப் பள்ளியின் படிவத்திலும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆசிரமப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை மாணவிகள் படிக்கின்றனர்,” என்று தெரிவித்தார்.
கர்ப்பப் பரிசோதனையின்போது மாணவிகளுடன் யார் வருகிறார்கள் எனக் கேட்டபோது, “சில நேரங்களில் பெற்றோர் வருவார்கள். சில நேரங்களில் தாத்தா, பாட்டிகள் வருகிறார்கள். சில நேரங்களில் மாணவிகள் தனியாகவே வருகிறார்கள்,” என்றார்.
பரிசோதனையை நிறுத்துமாறு எழுந்த கோரிக்கை
மாணவர் அமைப்பான ‘ஸ்டூடன்ட் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ (எஸ்.எஃப்.ஐ) இந்தப் பரிசோதனையை நிறுத்துமாறு கோருகிறது.
“நாங்கள் கர்ப்பப் பரிசோதனையைச் செய்துகொள்ளச் செல்லும்போது, அங்குள்ள மக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அங்குள்ள மருத்துவர்கள் பார்க்கும் விதம்கூட ஒரு மனரீதியான சித்திரவதைதான்,” என்று எஸ்.எஃப்.ஐ-இன் புனே மாவட்டத் தலைவர் சமஸ்கிருதி கோடே கூறினார்.
மேற்கொண்டு பேசிய அவர், “நாங்கள் இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறோம். மாணவிகளுக்கு கர்ப்பப் பரிசோதனை செய்வதென்பது அவர்களை மனரீதியாக சித்திரவதை செய்வதற்குச் சமம். அத்தகைய நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
மாநில மகளிர் ஆணையத்தின் பங்கு
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், புனேவில் உள்ள ஒரு விடுதியில் கர்ப்பப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த விவகாரத்தை மாநில மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டு, அந்த நடைமுறைக்குத் தடை விதித்தது.
மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சகான்கர் பிபிசி மராத்திக்கு அளித்த பேட்டியில், “ஒரு சமூக ஊடக பதிவு மூலம் எனக்கு ஒரு புகார் வந்தது. பழங்குடிப் பெண்களுக்கான அரசு விடுதி ஒன்றில் கர்ப்பப் பரிசோதனை நடத்தப்படுவதாக அதில் கூறப்பட்டு இருந்தது,” என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசியவர், அந்தப் புகார் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார். “அதைத் தொடர்ந்து, நான் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், வாகாட்டில் உள்ள அந்த விடுதிக்குத் திடீரென வருகை புரிந்தேன். அப்போது மாணவிகளைத் தனியாக அழைத்து விசாரித்தபோது, அவர்களில் சிலருக்கு கர்ப்பப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது,” என்றும் குறிப்பிட்டார்.
“இது சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மாணவிகள் படிக்கும் காலத்தில் அவர்களை இத்தகைய பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது, அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைப்பதற்குச் சமம்,” என்கிறார் ரூபாலி சகான்கர்.
மேலும், “சுற்றறிக்கையிலும் சட்டத்திலும் இதுபோன்ற எந்த விதியும் இல்லை” எனக் கூறிய அவர், “மாணவர் சேர்க்கையின்போதும் இந்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென்ற எந்த விதியும் இல்லை. சம்பந்தப்பட்ட துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.

பழங்குடியினர் நலத்துறை மற்றும் சுகாதாரத் துறை கூறுவது என்ன?
இது தொடர்பாக பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையம் செப்டம்பர் 30ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அரசு விடுதிகளில் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின்போது, மாணவிகளை கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்று அந்த அறிக்கை அறிவுறுத்தியது.
இது தொடர்பாகப் பேசிய திட்ட அதிகாரி பிரதீப் தேசாய், “நாங்கள் எந்தப் பெண்ணையும் கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்கவில்லை,” என்று தெளிவுபடுத்தினார்.
ஆனால், இவை ஒருபுறம் இருந்தபோதிலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தாங்கள் கர்ப்பப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியிருந்ததாகப் பல மாணவிகள் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்துப் பேசிய பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையர் லீனா பன்சோத், “இதுபோன்ற எவ்விதப் பரிசோதனையும் நடத்தப்படக் கூடாது என்று பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. அப்படிப்பட்ட கட்டாயம் எங்கும் இல்லை,” என்று கூறினார்.
புனே மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரியான மருத்துவர் நாகநாத் எம்பல்லே, “சிறுநீர் கர்ப்பப் பரிசோதனை நான்கு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக” கூறினார். மேலும், அதற்கு முன்னதாக, “மாணவிகள் விடுதியில் இருந்து வீட்டிற்குச் செல்லும்போது அந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளும்படி கேட்கப்பட்டதாக” அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு