உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி பலரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இம்மாத தொடக்கத்தில் தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். அதிலும், ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடும் மௌனி அமாவாசை தினமான இன்றைய கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் மட்டும் அங்கே சுமார் 10 கோடி பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படியே, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலரும் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துவிட்டதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறியுள்ளது.
சில இடங்களில் தடுப்புகளை மீறி மக்கள் சென்றதே நெரிசலுக்கு வித்திட்டதாக கும்பமேளா ஏற்பாடுகளை கவனிக்கும் அதிகாரி ஆகாங்ஷா ராணா தெரிவித்தார். எனினும், அங்கே நிலைமை கைமீறிப் போய்விடவில்லை என்றும் அவர் கூறினார்.
காயமடைந்த மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படும் வீடியோக்களை சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தில் பார்க்க முடிகிறது.
இதையடுத்து, மௌனி அமாவாசை நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் பல ஊடக தகவல்கள் கூறுகின்றன.
கும்பமேளாவில் இன்றைய தினத்தின் முக்கியத்துவம் என்ன?
குறிப்பிட்ட கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் அமைப்பின் அடிப்படையில், கும்பமேளாவுக்கான நீராடும் தேதிகள் மற்றும் நல்ல நேரங்கள் ஜோதிடர்களால் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்த நேரத்தில் குளிப்பதற்கு ஆறு புனிதமான நாட்கள் உள்ளன. அவை பின்வருமாறு,
13 ஜனவரி: பௌஷ் பூர்ணிமா
ஜனவரி 14: மகர சங்கராந்தி
ஜனவரி 29: மௌனி அமாவாசை
3 பிப்ரவரி: பசந்த பஞ்சமி
பிப்ரவரி 12: மாக் பூர்ணிமா
பிப்ரவரி 26: மகா சிவராத்திரி
ஜனவரி 14 மற்றும் ஜனவரி 29 மற்றும் 3 பிப்ரவரி ஆகிய நாட்களில் ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடுவர். இந்த மூன்று நாட்களும் புனித நாட்களாகக் கருதப்படுகின்றன.
அந்த 3 நாட்களிலும் கூட ஜனவரி 29-ம் தேதியான இன்றைய தினம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. கும்பமேளாவில் மிகப்பெரிய அளவில் மக்கள் இன்றைய தினம் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் பக்தர்கள் 10 கோடி புனித நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வளவு பெரிய விழா இது?
பரப்பளவு: 4,000 ஹெக்டேர்
160,000 கூடாரங்கள்
40,000 காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள்
15,000 துப்புரவு பணியாளர்கள்
அரை மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு 99 வாகன நிறுத்துமிடங்கள்.
ஆற்றின் மீது 30 மிதக்கும் பாலங்கள்
67,000 தெரு விளக்குகள்
150,000 கழிப்பறைகள்; 25,000 கழிவுத் தொட்டிகள்
200 தானியங்கி தண்ணீர் குழாய்கள் மற்றும் 85 குழாய் கிணறுகள், போன்ற பல்வேறு வசதிகள் இத்திருவிழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கும்பமேளாவை நடத்துவதற்கு 70 பில்லியன் ரூபாய் (812 மில்லியன் டாலர், 665 மில்லியன் யூரோ) செலவழிப்பதாக இந்திய அரசாங்கம் கூறியது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, இந்த நிகழ்வின் மூலம் மாநில அரசு 250 பில்லியன் ரூபாய் (2.9 பில்லியன் டாலர் ; 2.3 பில்லியன் யூரோ ) வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.