கும்ப மேளாவை நினைக்கும்போது, நம் மனதில் முதலில் தோன்றுவது நாகா துறவிகளின் (சாதுக்கள்) கூட்டம்தான், எண்ணற்ற துறவிகள் நீராட விரையும் காட்சி… அதுவும், ‘ஆண்- துறவிகள்’…
கும்ப மேளாவில் பெண் துறவிகளும் உள்ளனர். ஆனால், அப்படி எவ்வளவு பேர் உள்ளனர்? கும்ப மேளா அமைப்பில் அவர்களுக்கான இடம்தான் என்ன? என் மனதில் இதுபோன்று பல கேள்விகள் இருந்தன.
நாகா துறவிகள் கும்ப மேளாவுக்கு எப்படி தயாராகின்றனர் என்பதை தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். அதேநேரம், பெண் நாகா துறவிகள் குறித்த எண்ணற்ற கேள்விகளும் என் மனதை துளைத்துக்கொண்டிருந்தன.
கும்பமேளாவில் நீங்கள் எங்கு பார்த்தாலும் , ஆண் துறவிகள் நம் பார்வையில் தென்படுகின்றனர். அவர்கள் தங்களது குடிசைகளில் அமர்ந்திருக்கின்றனர், அரங்கை சுற்றிவருகின்றனர் அல்லது வெளியே சுற்றித் திரிகின்றனர்.
ஒரு நாகா பெண் துறவியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான பிறகு, இதுபோன்ற பெண் துறவிகள் இருக்கிறார்களா என்ற எனது ஆர்வம் மேலும் தூண்டப்பட்டது.
பெண் நாகா துறவிகள் இருக்கின்றனரா?
பிரயாக்ராஜில் கும்பமேளாவில் பெண் துறவிகள் தொடர்பான கேள்விகள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, எனது தடங்கள், துறவிகளுக்காக கட்டப்பட்ட சன்னியாசினி அகாராவுக்கு இட்டுச் சென்றது. அது மைவாடா என்றும் அழைக்கப்படுகிறது.
அங்கே நான் சாத்வி ராதேனந்த் பாரதியை சந்தித்தேன். சாத்வி ராதேனந்த் பாரதி தனது 12ஆவது வயதில் சந்நியாசம் பெற்றவர். ஆனால் அவர் தனது கல்வியை நிறுத்தவில்லை. தற்போது அவர் பிஹெச்டி படித்துக்கொண்டிருக்கிறார்.
அவரது பேச்சில் ஆங்கில வார்த்தைகள் இயல்பாக வந்தன. கல்வி பெறுவதற்கு பெண்களுக்கு எந்த தடையும் இருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
ஆனால், பெண் நாகா துறவிகள் குறித்து கேட்டபோது, “நாகா துறவிகளாவதற்காக நாங்கள் தீட்சை பெற்றுள்ளோம். இப்போது எங்களை காண எல்லோரும் வருகிறார்கள், அதனால் நாங்கள் இதுபோன்ற காவி உடை உடுத்துகிறோம். அதே நேரம், சக்தி பீடத்தில் அமரும்போது ஆண்கள் சாம்பலை பூசிக்கொள்வதைப் போல் நாங்களும் சாம்பலில் குளிக்க வேண்டும். உடைமைகளை கைவிட்டபின் ஆண்களுக்கு கோவணம் தரப்படுவதைப் போல், மனதும், உணர்வும் கட்டுப்பாடுடன் இருக்க உடலை முழுமையாக மூடும் வகையிலான உடைகளை அணிவோம்.” என்றார்.
தாங்கள் நாகாக்களாக இருந்தாலும், பெண் துறவிகள் நிர்வாணமாக அலைவதற்கு அனுமதி இல்லை என, மைவாடாவின் துறவிகள் தெரிவிக்கின்றனர். “பெண்கள் திகம்பர (நிர்வாண) கோலத்தில் இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் ‘மாய்’களில் (துறவிகளில்) யாரும் நிர்வாணமாக இருக்க முடியாது. அவர்கள் உடை உடுத்த வேண்டும்,” என்கிறார் தஸ்னமி சன்னியாசினி ஜுன அகாராவின் தலைவர் ஶ்ரீ மஹந்த் ஆராதனா கிரி.
‘பாரத் மே கும்ப்’ என்ற புத்தகத்தை எழுதிய அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஊடக படிப்புகளுக்கான மையத்தில் பாட ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தனஞ்செய் சோப்ராவிடம் பெண் சாதுக்கள் குறித்து பேசினோம்.
இவர் கடந்த பல ஆண்டுகளாக கும்ப மேளா குறித்து ஆய்வு செய்து, பல கும்ப மேளாக்களை நெருக்கமாக பார்த்திருக்கிறார்.
“மைவாடாவில் இருக்கும் பெண் சாதுக்கள் சைவ சன்னியாசினி, அவதுதினி, நாகா சாது அல்லது சாத்வி என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆண் நாகா சாதுக்களைப் போல் நிர்வாணமாக இருப்பதில்லை. அதேபோல், எல்லா நாகா சாதுக்களும் நிர்வாணமாக இருப்பதில்லை. பெண் சாதுக்கள் திகம்பரமாக (நிர்வாணமாக) இருக்கமுடியாது.” என்கிறார் அவர்.
பெண்களுக்கு தனி அரங்கு உள்ளதா?
கும்ப மேளாவில் தோன்றும் சாதுக்கள் ஏதாவது ஒரு அகாராவுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். தற்போது அதிகாரப்பூர்வமாக 13 அகாராக்கள் உள்ளன.
இந்து மதத்தில் மொத்த ஆன்மீக உலகமே, சைவம், வைணவம் என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகிறது. விஷ்ணுவை நம்புகிறவர்கள் வைணவர்கள், சிவனை நம்புகிறவர்கள் சைவர்கள்.
13 அகாராக்கள் இதேபோன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை சைவ அகாடாக்கள், வைணவ அகாடாக்கள் மற்றும் சீக்கிய மதத்தின் தாக்கத்தால் இருதரப்பும் சார்பு இல்லாத அகாடாக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அகாடாக்களில் கும்பமேளாவில் முதலில் நீராடுவது யார் என்பது உள்ளிட்ட பல சச்சரவுகள் இருந்திருக்கின்றன. தற்போது மோதல்களை தடுக்க இந்த 13 அகாடாக்கள் மற்றும் கும்பமேளா ஆகியவற்றை ‘அகில பாரத அகாடா பரிஷத்’ கட்டுப்படுத்துகிறது. இது தொடர்பாக தகவல் அளித்த பேராசிரியர் தனஞ்செய் சோப்ரா, “இந்த அகில பாரத அகாடா பரிஷத் 1954-ல் உருவாக்கப்பட்டது. அகாடாக்களுக்கிடையில் மோதல்களை தடுக்க, அகாடா பரிஷத் என்ற இந்த ஒருங்கிணைப்பு தளம் உருவாக்கப்பட்டது” என்றார்.
ஆனால், இந்த அகாடாக்களில் பெண்களுக்கென தனி அகாடா இல்லை. தற்போது கும்ப மேளாவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு அகாடாவை பார்க்கமுடிகிறது. ஆனால், அந்த அகாடாவுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்பதுடன் அது ஒரு அகாடாவாக கூட கருதப்படுவதில்லை. இருப்பினும் இந்த அகாடா, ஊடக செய்திகளில் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த அகாடாவின் மஹாமண்டலேஸ்வர் பதவியை நடிகை மம்தா குல்கர்னி ஏற்றுக்கொண்டதால் அது செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
பெண்களுக்கான சன்னியாசினி அகாரா எப்போது தோன்றியது என்பது குறித்து எந்த சாத்வியாலும் மிகச் சரியான தகவல்களை தர முடிந்ததில்லை. தற்போதைய தலைவர் ஶ்ரீ மஹந்த் ஆராதனா கிரியால் கூட சொல்லமுடியவில்லை. வெளியே வைக்கப்பட்டிருந்த பதாகையை சுட்டிக்காட்டிய அவர், “இது பழைய மாய் (சாத்வி). இவர்களிடமிருந்துதான் மைவாடா படிப்படியாக வடிவம் பெற்றது” என்றார்.
அதில் பல சாதுக்களின் புகைப்படங்களும் பெயர்களும் இருந்தன. பிரமாலின் ஶ்ரீ 1008 மஹந்த் பிரம்மகிரிஜி, பிரம்மகிரி ஶ்ரீ மகந்த் பூத்கிரிஜி, பிரம்மலின் ஶ்ரீ மஹந்த் பாரத் கிரி, ஶ்ரீ மஹந்த் விஜய் கிரி போன்றவர்கள் பழமையான முக்கிய சாதுக்கள்.
ஒரு சுதந்திரமான, ஆனால் தன்னாட்சி இல்லாத அரங்கு
பத்திரிகையாளர் தீப்தி ராவத், ‘கும்ப் மேளா: எ பெர்ஸ்பெக்டிவ்’என்ற தனது புத்தகத்தில் மைவாடாவின் வரலாறு பற்றிய தகவல்களை அளித்துள்ளார்.
“திரிகால் பவண்டாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெண்களுக்கு தனியாக ஒரு அகாடா தேவை என ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருந்தார். ஆயிரக்கணக்கான சாதுக்கள் தம் பின் இருப்பதாக கூறிய திரிகால் பவண்டா, பெண்களுக்கு ஒரு தனி அகாடா தேவை என வலியுறுத்தினார். அவர் தம்மைத் தாமே ‘பரி அகாடாவின்’ உலக குருவாக பிரகடனப்படுத்திக்கொண்டார். பெண்களுக்கு தனியாக அகாடா என்ற பாரம்பரியம் இல்லை என அகடா பரிஷத் மற்றும் சாதுக்கள் கூறுகின்றனர். அனைத்து சங்கராச்சாரியர்களும் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தனர். திரிகால் பவண்டாவின் கோரிக்கை எழுந்தபின்னர், 2013 பிரயாக் கும்ப மேளாவில் சாதுக்களுக்கான ‘மைவாடா’ என்ற அமைப்பை சைவத்தை சார்ந்த ஶ்ரீ பஞ்சதஷ்னம் ஜுன அகாண்டா உருவாக்கியது.”
இது தொடர்பான தகவல்களை அளித்த பேராசியர் தனஞ்செய் சோப்ரா, “புதிய அகாடாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அகாரா பரிஷத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது. திரிகால் பவண்டா பெண்களுக்காக ‘பரி அகாடா’ என்ற புதிய அகாடாவை உருவாக்கினார். அது தனியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், பெண்களுக்கு அனைத்து அகாடாக்களிலும் படிப்படியாக இடம் அளிகப்படுவதால் தனி அகாடாவுக்கு தேவையில்லை என கூறி, திரிகால் பவண்டாவின் கோரிக்கையை அகில் பாரதிய அகாரா பரிஷத் நிராகரித்தது. 13 அகாடாக்களில் சிலவற்றில் பெண்களே இல்லை, அதேநேரம் மற்ற அகாடாக்களில் சிறியளவிலோ, பெரியளவிலோ பெண்களுக்கு இடம் இருக்கிறது. ஆனால், இதுவரை பெண்களுக்கென தனியான எந்த அகாடாவுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை,” என கூறினார்.
தீப்தி ராவத் கூறுகையில், “தனி பெண்கள் சங்க கோரிக்கைக்கு திரிகால் பவன்கள் பலம் சேர்த்ததால், 2013ஆம் ஆண்டில் மைவாடாவுக்கு ‘தஸ்னம் சன்யாசினி அகாரா’ என்ற பெயரும், தனிக் கொடியும் வழங்கப்பட்டது. நோக்கம் அதுவேதான், எனவே பெண்கள் சங்கத்துக்கு தனி கோரிக்கை இருக்கக் கூடாது.”
பேராசியர் தனஞ்சய் சோப்ரா சற்றே மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறார். “பழைய அகாராவில் ஆரம்பம் முதலே அனைவரையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. அவர்கள் மைவாடாவை உருவாக்கினர். அவர்கள் கின்னார் அகாராவை தங்களுடன் நடத்திச் செல்கின்றனர். அவர்களிடம் அதிக எண்ணிக்கையிலான நாகா சாதுக்களும் உள்ளனர். எனவே, திரிகால் பவண்டாக்களின் கோரிக்கைகள் வலிமை பெறாமல் தடுப்பதற்காகத்தான் மைவாடாக்கள் உருவாக்கப்பட்டன என நான் நினைக்கவில்லை. இருப்பினும், பெண்களுக்கு ஒரு தனி அகாரா வேண்டும் என்ற கோரிக்கையை அகாரா பரிஷத் நிராகரித்தது உணமைதான்.”
பெண் சாதுக்களுக்கு எப்படி தீட்சை வழங்கப்படுகிறது?
தீட்சை வழங்குவதற்கு ஆண், பெண் இருவருக்கும் ஒரே முறைதான் பின்பற்றப்படுகிறது. இருப்பினும், காம இச்சை எழுவதை தடுக்க, நாகா சாதுக்களாக விரும்பும் ஆண் சாதுக்கள் ‘டேங்டாட்’ எனும் சடங்கின்படி தங்களது ஆண் உறுப்பை சிதைத்துக்கொள்கின்றனர்.
சன்னியாசினி அகாராவின் சர்வதேச தலைவராக இருக்கும் ஶ்ரீ மஹந்த் 1008 பாரதி மகராஜை தொடர்புகொள்ள முயன்றோம்.
ஆனால் ‘நேர்காணல்களில் தம்மால் இதுபோல் பேசமுடியாது,’ என்ற காரணத்தைத் தெரிவித்தார். அண்மையில் சந்நியாசம் பெற்ற ராதேனந்த் பாரதி இந்த தகவலை தரமுடியும் என அவர் கூறினார்.
பெண்களுக்கு எப்படி தீட்சை அளிக்கப்படுகிறது என்பது பற்றிய தகவலை அளித்த ராதேனந்த் பாரதி, “தீட்சை அளிக்கும் முறை ஆண், பெண் இருபாலாருக்கும் ஒன்றேதான். இந்த உலகை விலக்கிக் கடவுளை அடைய விரும்புவோர் குருமகராஜிடம் செல்ல வேண்டும். அதன் பின்னர், அந்த சீடர் அகாடாவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். அவருக்கு சமயம். அர்த்தம், காமம், மோட்சம் மாற்றும் அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது.”
“அதன் பின்னர், சீடரின் தயார்நிலையை சோதித்த பின்னர், அடுத்து வரும் கும்ப மேளாவில் தீட்சை வழங்க முடிவு செய்யப்படுகிறது. அதன்படி, முதலில் ஐந்து சன்ஸ்கார்கள் செய்யப்படுகின்றன. இதில், ஐந்து குருக்கள்- மந்திர குரு, விபூதி குரு, லங்கோட்டி குரு, ருத்ராக்ஷா குரு மற்றும் ஜனே குரு ஆகியோர் ஒவ்வொரு சடங்கையும் செய்கின்றனர். இதில் முடி மழிக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் பெண் சாதுக்களுக்கு லங்கோட்டுக்கு பதிலாக பாகம்பரி உடை வழங்கப்படுகிறது. இந்த தீட்சை வழங்கும் நாட்களில் உண்ணா நோன்பு கடுமையாக பின்பற்றப்படுகிறது. இறுதியாக ஒருவர் தனது பெற்றோருக்கும், தனக்கும் பிண்டான் (மூதாதையர்களின் நினைவாக பிண்டம் கொடுப்பது) செய்யவேண்டும்.”
மாதவிடாயின்போது பெண் சாதுக்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்?
ஆண் சாதுக்களில், நாகா சாதுக்களாக தீட்சை பெற்றவர்கள் “டேங்டாட் சன்ஸ்காருக்கு” உட்படுத்தப்படுகிறார்கள், அதன்படி, ‘திகம்பர் குரு’ ‘நாக சாதுக்களின்’ ஆண் உறுப்பை ஒரு நிலையில் பிடித்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை கூறி மூன்று முறை வலுவாக அடித்து ஆணுறுப்பை செயலற்றதாக்குகின்றனர்.
நாகா சாதுக்களிடம் காம இச்சை ஏற்படுவதை தடுப்பதுதான் இதன் நோக்கம். இருப்பினும், பெண்களுக்கு காம இச்சை ஏற்படாமல் தடுக்க என்ன சடங்கு செய்யப்படுகிறது என இயற்கையாகவே என்னுள் கேள்வி எழுந்தது.
இது குறித்து பல சாதுக்களிடம் கேட்டேன். “சாதுக்களின் காம இச்சையை கட்டுப்படுத்த அதுபோல் எந்த சடங்கும் இல்லை. அது போன்ற கட்டுப்பாடு கிடைக்க, ஒருவர் தங்களது காம இச்சையை தியானத்தால்தான் கொல்ல வேண்டும். அதிக தவம் செய்யும்போது, அவர்கள் கூடுதல் பலனடைவார்கள். அதன்மூலம், அவர்கள் உலக வாழ்விலிருந்து விலகிக்கொள்ள்முடியும்,” என சர்வதேச தலைவர் ஶ்ரீ மகந்த் மாதா பிரேம் கிரி தெரிவித்தார்.
“மனதில் காமம் தலைதூக்காமல் இருப்பதற்காக பெண் சாதுக்களின் கருப்பை நீக்கப்படுவதாகவும், ஆண் சாதுக்களில் ஆணுறுப்பு சேதப்படுத்தப்படுவதாகவும் பல மறைந்த மூத்த பெண் சாதுக்கள் எங்களிடம் சொல்லியிருக்கிறார்கள்,”என்றார் ராதேனாந்த் பாரதி.
புதிதாக தீட்சை பெற்ற ராதேனந்த் பாரதி கருப்பை நீக்கம் குறித்து குறிப்பிட்டாலும், மற்ற சாதுக்கள் அதுகுறித்து பேசுவதை தவிர்த்தனர். மைவாடாவில் மூத்த சாத்விகளில் ஒருவரான ஶ்ரீ மஹந்த் மை ஒம கிரி இந்த கேள்வியை கேட்டு கோபப்பட்டர். அதேநேரம், ராதேனந்த் பாரதி வெளிப்படையாக பதிலளித்தார். “இப்போது 2025ஆம் ஆண்டு தொடங்குகிறது. சுதந்திரமும் ஒரு பிரச்னை. இன்னமும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு ஒருவர் பந்தாராவுக்குள் செல்ல முடியாது, கடவுள்கள் அருகேயோ குரு மகராஜ் அருகேயோ செல்ல முடியாது” என்றார்.
பெண்களுக்கு இரண்டாம் இடம் அளிக்கப்படுவது குறித்து மைவாடாவின் சாத்விகள் கூறியது என்ன?
ஶ்ரீமகந்த் மை ஒமா கிரி, மைவாடாவில் மூத்த சாத்வி கேமரா முன் பேசுவதற்கு முன் ஒரு தலைப்பாகையை அணிந்துகொண்டார்.
தலைப்பாகை அணிந்துகொள்வது ஆணாதிக்கத்தின் அடையாளம் என கருதுகிறாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை, தலையில் தலைப்பாகை அணிந்த சிறிது நேரத்தில் அவர் சொன்னார், “மஹந்த் பதவியின் பெருமை இதுதான்.” பெண்கள் இரண்டாம் தரமாக நடத்தப்படுவது பற்றிய கேள்விக்கும் அவர் கிண்டலாக பதிலளித்தார்.
“மற்ற துறைகளில் பெண்களுக்கு இரண்டாம் இடம் இருப்பது போல் ஆன்மீக உலகிலும் இருப்பதாக நினைக்கிறீர்களா?” என பதிலளித்தார். சன்னியாசினி அகாராவில் இருந்த எந்த சாத்வியும் இந்த கேள்வி குறித்து தெளிவாக பதிலளிக்கவில்லை.
ஶ்ரீ மகந்த் ஆராதானா கிரி தற்போது தஸ்னமி சன்னியாசினி ஜூன அகாராவின் தற்போதைய தலைவர். ஒரு சாத்வியின் பதவிக்காலம் கும்ப மேளாவிலிருந்து கும்பமேளாவுக்கு மூன்றாண்டுகள் என அவர் தெரிவித்தார்.
“குரு மகராஜின் குழு எங்களை தங்களுக்கு சமமானவர்களாக கருதுகின்றனர். அதனால் அவர்கள் எங்களுக்கு பல பொறுப்புகளை கொடுக்கின்றனர். எங்களை அவர்கள் தங்களுக்கு சமமாக கருதாவிட்டால், அவர்கள் மை பொறுப்புகளை தந்திருக்கமாட்டார்கள்.”
அவருக்கு பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் முடிவுகள் எடுப்பதில் எந்த அளவு செல்வாக்கு இருக்கிறது என கேள்வி எழுப்பியபோது, “எங்களது மூத்த நிர்வாகிகள்தான் இது தொடர்பாக முடிவுகள் எடுப்பவர்கள். நாங்கள் அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுகிறோம்.” என தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய பேராசிரியர் தனஞ்செய் சோப்ரா, “வைணவ மற்றும் உடசாலா அகாடாக்களில் மைவாடா போன்ற கிளைகள் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் சில அகாண்டாக்களில் சன்னியாசினிகள் நிச்சயம் இருக்கிறார்கள், மற்றும் சில அகாண்டாக்கள் அண்மையில் பெண்களை சேர்க்கத் தொடங்கியிருக்கின்றன. சில அகாண்டாக்களில் தொடக்கம் முதலே பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.” என்றார்.
பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்து குறித்து அவர் கூறுகையில், “இதுவரை பெண்கள் ஶ்ரீமஹந்த் பொறுப்புவரை உயர அனுமதிக்கப்படுகிறார்கள். இதுவரை அவர்கள் மஹாமண்டலேஸ்வர், மண்டலேஸ்வர் அல்லது ஆச்சார்யா போன்ற உயர் பதவிகளை அடைய அனுமதிக்கப்படவில்லை. பழைய அகாராவிலேயே பெண்களுக்கு ஶ்ரீமஹாந்த் பொறுப்பு வரை வழங்கப்பட்டது. வேறு எந்த அகாராவும் பெண்களை இந்த பொறுப்பு வரை செல்ல அனுமதித்ததாக நான் கேள்விப்பட்டதில்லை.”
“சர்வதேச தலைவர், தலைவர் அல்லது செயலாளர் போன்ற பொறுப்புகள் எல்லாம் நிர்வாகப் பொறுப்புகள்.. மஹந்த், ஶ்ரீ மஹந்த், அஸ்தகெளஷல் மஹந்த், மண்டலேஸ்வர், மஹாமண்டலேஸ்வர் போன்ற பொறுப்புகள் சன்னியாசி அல்லது ஆன்மீக பதவி. அவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் உள்ளது. ஶ்ரீ மஹந்த் என்ற பதவிக்கு கொஞ்சம் அதிகாரம் உள்ளது. மைவாடாவின் ஶ்ரீ மஹந்த் பழைய அகாராவிலும் இடம்பெற்றுள்ளார். முடிவுகள் எடுப்பதில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு, இடமளிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஏனென்றால் முடிவுகள் எடுப்பதில் 2013-ல் அமைக்கப்பட்ட மைவாடாவுக்கு அதிக இடமில்லை என்பது தெளிவு.”
கும்பமேளாவில் பங்கேற்கும் பெண்கள் அதிகம்; ஆனால் ஆண் சாதுக்களுடன் ஒப்பிடுகையில் பெண் சாதுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சாதுக்கள் மட்டுமல்ல, மஹந்த்கள், மஹாமண்டலேஸ்வர், மற்றும் ஆச்சார்யா போன்ற முக்கிய பொறுப்புகளை அடைந்த பெண்களும் மிகவும் அபூர்வம்.
மைவாடாவில் நாங்கள் சந்தித்த சாத்விகள் சனாதன பாரம்பரியத்தை பின்பற்றி திருமணம் மற்றும் குடும்ப அமைப்புகளை விட்டு வந்தவர்கள். சிலர் சிறுமிகளாக இருந்தனர், சிலர் கணவரை இழந்தவர்கள் மற்றும் சிலர் கைவிடப்பட்டவர்கள். பெரும்பாலானவர்கள் ஒற்றை பெண்களாகவே இருக்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு