மகா சேனா – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : மருதம் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மகிமா குப்தா, விஜய் சேயோன், ஆல்ஃபிரட் ஜோஸ், சுபாங்கி ஜா மற்றும் பலர்.
இயக்கம் : தினேஷ் கலைச்செல்வன்
மதிப்பீடு : 2/5
குரங்கிணி மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு காவலாக யாளீஸ்வரர் எனும் தெய்வம் அங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிலையை களவாடி விட வேண்டும் என அடிவாரத்தில் உள்ள மக்கள் திட்டமிடுகிறார்கள்.
இந்த தருணத்தில் குரங்கிணி மலைப் பகுதியைச் சார்ந்த செங்குட்டுவனுக்கும் அடிவார பகுதியை சார்ந்த கங்கா எனும் பெண்ணுக்கும் பால்ய பிராயத்திலே காதல் ஏற்படுகிறது.
ஆனால் கங்காவின் பெற்றோர்கள் உனது தந்தையை கொன்றவனின் மகன்தான் செங்குட்டுவன் என சொல்லி அந்த காதலுக்கு தடை விதித்து விடுகிறார்கள்.
அதன் பிறகு செங்குட்டுவன்( விமல்) பொம்மி ( சிருஷ்டி டாங்கே) எனும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இவர்களுக்கு அல்லி ( இலக்கியா) என்ற ஒரு பெண் பிள்ளை இருக்கிறார். செங்குட்டுவன் சேனா எனும் பெயரில் யானை ஒன்றையும் வளர்த்து வருகிறார்.
பிரதாப் ( ஜான் விஜய்) எனும் வனத்துறை அதிகாரியின் உதவியுடன் கிங் ஆஃப் காட்ஸ் ( கபீர் துஹான் சிங்) என்பவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள யாளீஸ்வரர் சிலையை அபகரிக்க பல்வேறு திரை மறைவு வேலைகளை செய்கிறார்.
இந்நிலையில் காமராஜ் ( ஆல்ஃபிரட் ஜோஸ்) எனும் பேராசிரியரின் தலைமையில் சுருளி ( யோகி பாபு) எனும் மலைப்பகுதி வழிகாட்டியின் உதவியுடன் கல்லூரி மாணவர்களும் , மாணவிகளும் மலையேற்றம் எனும் சாகச பயணத்திற்காக அந்த மலைக்கு வருகை தருகிறார்கள்.
திருவிழா – மாணவ மாணவிகளின் மலையேற்றம் – வனத்துறை அதிகாரிகளுடன் வில்லன்களின் திரை மறைவு சதி வேலை- செங்குட்டுவன் வளர்க்கும் யானைக்கு மதம் பிடிப்பது- என பார்வையாளர்கள் எளிதாக யூகிக்கும் வகையில் திரைக்கதை பயணிப்பதாலும்.. அவை காட்சிப்படுத்தலுக்கு தேவையான எழுத்துக்கள் எழுதப்படாததாலும்.. விஷுவல் ஸ்ட்ரென்த் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் காட்சி மொழியின் வலிமை.. பலவீனமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாலும் ..படம் பார்வையாளர்களுக்கு எதிர்பார்த்த அனுபவத்தை வழங்க தவறுகிறது.
செங்குட்டுவன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமலின் உடல் மொழிக்கும், அவர் ஏற்றிருக்கும் செறிவான கதாபாத்திரத்திற்கும் இடையேயான இடைவெளி ரசிகர்களை எரிச்சலுக்கு ஆளாக்குகிறது.
கதாபாத்திரத்தை உணர்ந்து எந்த ஒரு காட்சியிலும் விமல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பது அப்பட்டமாக தெரிவதால்.. விமல் மீது ரசிகர்களுக்கு கோபம் உண்டாகிறது. இதற்கு அவரை மட்டும் பொறுப்பாக்காமல்.. அவரை கையாள வேண்டிய இயக்குநர் மீது தான்….!?
பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார். மிகையான நடிப்பையே அதிமிகையாக திரையில் வழங்கும் ஜான் விஜயை இயக்குநர் கட்டுப்படுத்த தவறி இருக்கிறார். இந்தப் பட்டியலில் கபீர் துஹான் சிங் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் இடம் பிடிக்கிறது.
பாடல்களை விட பின்னணி இசை சற்று ஆறுதல் ரகம். யாளீஸ்வரர் சிலை வடிப்பு நேர்த்தியாக இருக்கிறது.
நிறைய விடயங்களையும்… பிரபலமான நட்சத்திரங்களையும்.. திரையில் தோன்ற வைத்தால்… படம் வெற்றி பெறும் என்ற இயக்குநரின் அவதானிப்பு எதிர்மறையான பலனையே அளித்திருக்கிறது.
மகா சேனா – கடந்து போகும் மழை பெய்யாத மேகக் கூட்டம்
The post மகா சேனா | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.