சென்னை: ‘பொதுமக்களிடம் அன்பளிப்போ, லஞ்சமோ வாங்காதீர்கள்’ என்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்..ரவி அறிவுரை கூறினார்.
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாணவர் சிவசந்திரன், அகில இந்திய அளவில் 23-ம் இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்தார்.
இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவ, மாணவிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து பாராட்டினார். ஆளுநர் மாளிகையில் உள்ள அன்னபூர்ணா அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து ஆளுநர் பேசியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவதும், வெற்றிபெறுவதும் எளிதான செயல் அல்ல. அந்த வகையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ள உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அதன்மூலம் பொது அறிவை தொடர்ந்து வளர்க்க முடியும்.
புத்தகங்கள் வாசித்து வந்தால் மற்றவர்களுடன் கலந்துரையாடும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படிப்பில் மட்டுமின்றி உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பொதுமக்களிடம் அன்பளிப்போ, லஞ்சமோ வாங்காதீர்கள். இவ்வாறு ஆளுநர் பேசினார்.