• Sat. Oct 5th, 2024

24×7 Live News

Apdin News

“மக்களை ஏமாற்றும் திராவிட கட்சிகள்…” – ரேஷன் பொருட்கள் குறித்து ஹெச்.ராஜா விமர்சனம் | Dravidian parties are cheating the people of Tamil Nadu on ration says bjp h raja

Byadmin

Oct 5, 2024


சென்னை: “4 பேர் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1,500 மதிப்பில் மத்திய அரசு அரிசி, பருப்பு வழங்குகிறது” என்று கூறிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஹெச்.ராஜா, தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா முன்னிலையில் எம்ஜிஆர் மக்கள் மன்ற நிர்வாகிகள் வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் இன்று பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ஹெச்.ராஜா பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஏழை மக்களுக்கான திட்டங்களை தரும் ஒரே தலைவர் பிரதமர் மோடி தான். கரோனா காலக்கட்டத்தில் இருந்து ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ அரசி, 1 கிலோ பருப்பு என மத்திய அரசு நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இலவசமாக வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால், 20 கிலோ அரிசி, 4 கிலோ பருப்பு கிடைக்கும். இதன் மதிப்பு இன்றைய தினம் ரூ.1,500 ஆகும். அந்த வகையில், 4 பேர் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1,500 மதிப்பில் மத்திய அரசு அரிசி, பருப்பு வழங்குகிறது.

ஆனால், திமுக ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் தான் கொடுக்கிறது. மேலும், 70 வயது தாண்டிய அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் சொன்னார். ஆனால், அது அறிஞர் அண்ணா தான் சொன்னார் என்பது போல் மாறிவிட்டது. தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுவே அடிப்படை.

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசை கேட்காமலேயே தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும், மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளும் மத்திய அரசின் முழு மானியத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு நபருக்கு மத்திய அரசு எத்தனை கிலோ அரசி, பருப்பு வழங்குகிறது என்பதை தமிழக அரசு ரேஷன் கடைகளில் எழுதி வைக்க வேண்டும்” என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஹெச்.வி.ஹண்டே, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, டால்ஃபின் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



By admin