மக்கள் பிரச்சினைக்காக அல்லாமல், தனது திரைப்படம் ஓட பிரதமரை சந்தித்தவர் விஜய் என கோவை துடியலூரில் நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆவேசமாக பேசினார்.
அவர் பேசியதாவது: நாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளோம். பொட்டு வைப்பது, சாமி கும்பிடுவதில் கூட பிரச்சினை உள்ளது. 100 முறை என்னை சங்கி என்று அழைக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லா கடவுளும் ஒன்று தான். அதை வழிபடும் விதம் தான் வேறு.
சமீபத்தில் மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பேசிய விஜய், ‘நான் உச்சத்தில் இருக்கும்போது வந்தவன், பிழைப்பு தேடி வரவில்லை’ என்று பேசியுள்ளார். பிரதமரை நோக்கி சொடக்கு போட்டு பேசுகிறார். இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்கிறார். ஆனால், இதே விஜய் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பூனைக்குட்டியை போல் கையை கட்டி அமர்ந்திருந்தார்.
அப்போது விஜய் பிரதமரை சந்தித்தது எதற்காக?. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவா? மீனவர் பிரச்சினை குறித்து பேசவா? எதுவும் இல்லை. தன்னுடைய தலைவா என்ற படம் ஓடுவதற்காக பிரதமரை பார்த்துவிட்டு, இப்போது பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு பேசுகிறார்.
அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி. அவரைப் பார்த்து கைநீட்டி, சொடக்கு போட்டு பேச அருகதை வேண்டும். தமிழக முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரிகமா? எனக்கு வரும் கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் எனத் தோன்றுகிறது. அதை நாம் ஓங்கி ஓட்டாக குத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.