• Mon. Feb 24th, 2025

24×7 Live News

Apdin News

‘மக்கள் யாரும் சண்டையிடவில்லை’ – திருப்பரங்குன்றம் மலை வழக்குகளை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கருத்து | High Court dismissed Thiruparankundram cases and explained the issue

Byadmin

Feb 19, 2025


மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், “திருப்பரங்குன்றத்தில் மக்கள் யாரும் சண்டையிடவில்லை. ஆனால், நீங்கள் மக்களை சண்டை போட வைத்துவிடுவீர்கள்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி சார்பில் பிப்.4-ல் மலையை காக்கும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரையில் 144 தடையாணை பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணியைச் சேர்ந்த சுந்தரவடிவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்லும் வாகனங்களைத் தடுக்கும் வகையில் போலீஸார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு உயர் நீதிமன்ற அனுமதியின் பேரில் பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நிலுவையில் இருந்த இரு மனுக்களும் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று (பிப்.19) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை இரு தரப்பினரும் உரிமை கோரி வருவதால் மலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “திருப்பரங்குன்றத்தில் மக்கள் யாரும் சண்டையிடவில்லை. ஆனால், நீங்கள் மக்களை சண்டை போட வைத்துவிடுவீர்கள்” என கருத்து தெரிவித்தனர்.

இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில், “கோயில் வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிரதான மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளது. மனுதாரர்கள் உச்ச நீதிமன்றம்தான் செல்ல வேண்டும்” எனக் கூறப்பட்டது. அரசு தரப்பில், “மனுதாரர்கள் ஜனவரி 29-ல் மனு அளித்துவிட்டு, அடுத்த 3 நாளில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மற்றொரு வழக்கு: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலைக்கு ஆட்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள ஜெயின் கோயில், உமையாண்டார் குடைவரைக் கோயில் உள்ளிட்ட கோயில்களை பாதுகாக்கவும், மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்ட பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.



By admin