• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

“மக்கள் வரவேற்கிறார்கள்; சிலர் வயிறு எரிகிறார்கள்…” – திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் | Tamil Nadu Chief Minister MK Stalin letter to DMK Party Members

Byadmin

Nov 12, 2024


சென்னை: “திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். திமுக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்.” என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்த ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, தமிழகத்தின் முதல்வர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத வகையில், ஆட்சியின் தன்மையை மக்களின் முகமலர்ச்சியே பதிலாகச் சொல்லிவிடுகிறது.

அந்த முகமலர்ச்சியானது அவர்களின் உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சியின் மொழிபெயர்ப்பு. விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு ஆலைகளில் எதிர்பாராத வகையில் விபத்தில் இறந்துபோகும் தொழிலாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி கற்பதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்தனர். அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் வகையில், மாவட்ட நிர்வாக அளவிலேயே ஒரு நிதியம் உருவாக்கவும், அந்த நிதியத்திற்கு முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அறிவிப்பு வெளியிட்டேன்.

நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர்கூட விடுபடுதல் கூடாது என்ற அக்கறை முதல்வரான எனக்கு மட்டுமல்ல, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை இருப்பதால் மக்களின் தேவையறிந்து நிறைவேற்ற முடிகிறது. இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார். மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், அநாவசியமாகப் பொங்குகிறார்.

பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும், வள்ளலார் பிறந்தநாளைத் தனிப்பெருங்கருணை நாளாகவும் கடைப்பிடிக்கிறது திராவிட மாடல் அரசு. அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என அரும்பெரும் தலைவர்கள் பெயரில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான்.

விருதுநகரில் நான் சென்று பார்வையிட்ட அரசு காப்பகத்துக்கு அன்னை சத்யா காப்பகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தலைவர் கருணாநிதியின் 40 ஆண்டுகால நண்பரான எம்ஜிஆரின் தாயார்தான் அன்னை சத்யா. அவர் பெயரில்தான் அரசு காப்பகம் இன்னமும் இயங்கி வருகிறது.

இந்த அடிப்படை கூட எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படிப் புரியாமல் போனதோ, பண்பாடே இல்லாமல் அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பேசுவதையும், இப்படிப்பட்டவருடன் ஜனநாயக மாண்புமிக்க சட்டமன்றத்திலும் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதையும் எண்ணி வேதனைப்படுகிறேன். வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

விருதுநகர் மாவட்ட ஆய்வுப் பயணத்திலும் அந்த மாவட்டத்தின் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே நல்ல வேலையைப் பெறுகிற வகையில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி வருகிறோம்.

கோவை, விருதுநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை நான் மேற்கொள்ளவிருக்கிறேன். தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை அங்கே தொடங்க இருப்பதால் இரு மாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். திமுக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.



By admin