பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
கேரளாவிலிருந்து பவானி ஆற்றுப்பகுதி வழியாக தமிழக வனப்பகுதிக்குள் வந்து, கோவை வனக்கோட்டத்தில் படுகாயங்களுடன் காணப்பட்ட மக்னா யானையைக் காப்பாற்ற வனத்துறையினர் மேற்கொண்ட சிகிச்சை முயற்சிகள் பலனளிக்காமல் அது இறந்தது.
மற்றொரு ஆண் யானை தாக்கியதில் ஏற்பட்ட காயத்தில் இது உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த யானையின் மரணம், மக்னா யானையின் தன்மை, பிற யானைகளுக்கும் இவற்றுக்குமான வித்தியாசங்கள் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மக்னா யானை என்றால் என்ன? மக்னா யானைகளுக்கு தந்தம் இல்லாதது ஏன்?
இந்தியாவில் இருக்கும் 29 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிய யானைகளில் 10 சதவிகிதம் அதாவது 2,900க்கும் அதிகமான யானைகள் தமிழ்நாட்டில் இருப்பதாக கடந்த ஆண்டில் வெளியான மத்திய அரசின் யானை பாதுகாப்புத் திட்ட தரவுகள் தெரிவித்தன. ஆனால், தமிழ்நாடு வனத்துறை கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை, 3 ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட தற்போது யானைகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு வனத்துறை சார்பில் தகவல் பகிரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஓராண்டில் அதிகரித்துள்ள யானை எண்ணிக்கை
வனவிலங்கு வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நடப்பாண்டுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட யானை கணக்கெடுப்பு அறிக்கையை, தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செவ்வாய்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்டபோது, 3,170 காட்டு யானைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது கடந்தாண்டின் எண்ணிக்கையான 3,063 ஐ விட 107 அதிகமென்றும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதில், ஆண்-பெண் விகிதம் 1:1.77 (ஒன்றுக்கு இரண்டு) என்ற அளவில் இருப்பதாகவும், தமிழ்நாட்டிலேயே முதுமலை புலிகள் காப்பகத்தில்தான் யானைகள் அதிக அடர்த்தியான எண்ணிக்கையில் இருப்பதாகவும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1.35 யானைகள் (மொத்தம் 325 யானைகள்) இருப்பதாகவும் தகவல் பகிரப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
எண்ணிக்கையைப் போலவே, யானை- மனித மோதல்களிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. அதிலும் கோவை வனக்கோட்டம் இதில் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. இதனால், யானை, மனிதர்கள் என இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகமாகிவருகிறது.
கோவை வனக்கோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோபனாரி காப்புக்காட்டுப் பகுதியில் காயங்களுடன் சுற்றிவந்த மக்னா யானை செவ்வாய்கிழமை காலையில் உயிரிழந்தது.
கேரள வனப்பகுதியிலிருந்து கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதியன்று இந்த யானை, பவானி ஆற்றுப்பகுதி வழியாக தமிழ்நாடு வனப்பகுதிக்குள் வந்தது. வரும்போதே, உடலில் பல்வேறு காயங்களுடன் வந்த இந்த மக்னா யானைக்கு மருந்து செலுத்தி சிகிச்சையளிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர் என்கிறார்கள் அதிகாரிகள்.
தமிழ்நாட்டையும், கேரளாவையும் பிரிக்கும் கூடப்பட்டி என்ற பகுதியில் பவானி ஆற்றின் நடுவிலேயே நின்று கொண்டிருந்த இந்த யானை குறித்து கேரள வனத்துறையினர் தமிழ்நாடு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், அதைக் கண்காணித்த வனத்துறையினர், அதற்கிருந்த காயங்களைப் பார்த்து, வன கால்நடை மருத்துவர் வெண்ணிலாவின் பரிந்துரையின்படி கரும்பு மற்றும் பழங்களில் மருந்துகளை வைத்து சிகிச்சையளிக்க முயற்சி செய்தனர்.
‘தந்தமில்லாவிட்டாலும் ஆண் யானையே’
இந்த யானையின் வலது கண்ணுக்கு மேலே குத்திக்கிழித்த ஒரு காயம் இருந்துள்ளது. அதன் வலது காதும் கிழிந்த நிலையில் இருந்ததாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை காலையில் மக்னா யானை உயிரிழந்தது. வேறு ஓர் ஆண் யானையுடன் சண்டையிடும்போது ஏற்பட்ட காயங்களாக இவை இருக்கலாம் என்கின்றனர் வனத்துறையினர்.
மக்னா யானைக்கு உடற்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின்பு கோவை வனக்கோட்டப் பகுதியில் ஒரு மக்னா யானை இறந்துள்ளது. இதை ஒரு அபூர்வ வகையான யானை இனமாக பலரும் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு, கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மக்னா யானை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய ஊட்டி அரசு கலைக் கல்லுாரியின் காட்டுயிர் உயிரியல் துறைத்தலைவர் ராமகிருஷ்ணன், ”மக்னா யானை என்றால் தந்தமில்லாத ஆண் யானைதான். எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய உதாரணமாகச் சொல்வதென்றால் ‘மீசையில்லாத ஆண்’ என்று குறிப்பிடலாம். இதனால் அந்த யானைகள் ஆண் யானை இல்லை என்று அர்த்தமாகிவிடாது. அது ஒரு விதமான மரபணு குறைபாடுதானே தவிர, இது ஆசிய யானைகளில் இது ஒரு தனி இனம் என்று பலரும் கருதுவது தவறானது.” என்றார் .
யானை – மனித மோதல் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள ராமகிருஷ்ணன், ஆசிய யானைகள் நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள 13 நாடுகளைச் சேர்ந்த 101 உறுப்பினர்களில் ஒருவர்.
பட மூலாதாரம், Ramakrishnan
யானைகளுக்கு மதம் பிடிப்பதை ‘மஸ்த்’ என்று வடமொழியில் சொல்வதைப் போலவே, மக்னா என்பதும் ஒரு வடமொழிச் சொல்லாக இருக்கலாம் என்கின்றனர் யானை ஆராய்ச்சியாளர்கள்.
மக்னா யானைகளுக்கு தந்தம் இல்லாததால் அவை சந்திக்கும் பிரச்னைகளையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, தந்தமில்லாததால் மக்னாக்களுக்கு இணை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறுகின்றனர்.
”பொதுவாக பெண் யானைகள், தந்தமுள்ள ஆண் யானைகளுடன் இணை சேரவே வாய்ப்புகள் அதிகம். ஓரிடத்தில் தந்தமுள்ள ஆண் யானையும், மக்னா யானையும் ஒரு பெண் யானையுடன் இணை சேர முயலும்போது, அவற்றுக்குள் சண்டை நடக்கும். அப்படி நடக்கும் பெரும்பாலான சண்டைகளில் தந்தமுள்ள ஆண் யானைகளே வெல்கின்றன. இத்தகைய சண்டையில்தான் மக்னா யானைகள் இறக்கின்றன, கோவையில் இறந்த மக்னா யானைக்கும் இதுவே காரணமாக இருக்கும்.” என்கிறார் ராமகிருஷ்ணன்.
இணை சேர்வதற்கு தந்தமுள்ள ஆண் யானையே இல்லாத சூழ்நிலையிலும், மக்னா யானையுடன் இணை சேர்வதை பெண் யானைகள் தவிர்ப்பதும் சில ஆய்வுகளில் பதியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
ஆனாலும் சில நேரங்களில் மக்னா யானைகள் பெண் யானைகளுடன் இணை சேரும்போது, அதற்குப் பிறக்கும் யானையும் மக்னா யானையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் ராமகிருஷ்ணன்.
”இந்த யானைகள் பெண் யானைகளுடன் இணை சேரும்போது, அதனால் பிறக்கின்ற யானை தந்தத்துடன் பிறக்கவும் வாய்ப்புள்ளது. மூதாதையரின் மரபணுவில் தந்தம் இருந்ததன் அடிப்படையில் அவற்றுக்குப் பிறக்கும் யானைக்கு தந்தம் இருக்கலாம்.
இணை சேர்வதற்கான போட்டியில் ஆண் யானையுடன் சண்டையிட்டு தோல்வியடையும் மக்னா யானைகள், பெரும்பாலும் ஆக்ரோஷத்துடன் வலம் வருவது வழக்கம். மஸ்த் காலத்தில் இந்த ஆக்ரோஷம் இன்னும் அதிகமாக இருக்கும். அதனால் யானை – மனித மோதலில் மக்னா யானைகளின் பெயர் அதிகம் அடிபடும். மற்ற யானைகளை விட பயிர்களைச் சேதப்படுத்துவதும், ஆட்களைக் கொல்லுவதிலும் மக்னா யானைகளின் பெயர்கள் பதிவாவதன் காரணமும் இதுதான்.” என்கிறார் அவர்.
இலங்கையில் மக்னா யானைகள் அதிகமாக இருக்க 2 காரணங்கள்
இந்தியாவில் அசாம் மாநிலத்தில்தான், மக்னா யானைகளின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் யானை ஆராய்ச்சியாளர் ஸ்ரீதர் விஜயகிருஷ்ணன்.
இந்தியாவைச் சேர்ந்த யானை ஆராய்ச்சியாளரான இவர், யானை குணாதிசயங்கள் (Elephant Behaviour) குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆராய்ச்சி அமைப்பின் (CCR-Centre for Conservation and Research) கீழ், கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் பணியாற்றி வருகிறார் இவர்.
”தந்தம் உருவாவதற்கான மரபணுவில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது மாற்றங்களே, தந்தம் இல்லாமல் ஆண் யானை பிறப்பதற்குக் காரணமாகிறது. ஆண், பெண் இரு இனங்களிலும் தந்தங்களைக் கொண்டுள்ள ஆப்ரிக்கா யானை இனத்திலும் சமீபகாலமாக தந்தம் இல்லாமல் யானைகள் பிறப்பதும் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பாகவும் நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.” என்கிறார் ஸ்ரீதர் விஜயகிருஷ்ணன்.
ஒரு குறிப்பிட்ட யானைக் கூட்டத்துக்குள் ஒரே ஆண் யானை மீண்டும் மீண்டும் இணை சேருவதாலும் இத்தகைய மரபணு குறைபாடு ஏற்படும் என்கிறார் ஸ்ரீதர் விஜயகிருஷ்ணன்.
குறிப்பிட்ட பகுதிக்குள் அல்லது ஒரே குடும்பத்துக்குள் மீண்டும் மீண்டும் திருமண உறவுகளை ஏற்படுத்தும்போது பிறக்கும் சில குழந்தைகளிடத்தில் குறைபாடுகள் இருப்பதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ராமகிருஷ்ணன்.
பட மூலாதாரம், Sreedhar Vijayakrishnan
இந்தியாவை ஒப்பிட்டால் இலங்கையில் மக்னா யானைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதை விளக்கும் ஸ்ரீதர் விஜயகிருஷ்ணன், அங்கு 5 முதல் 7 சதவிகிதம் மட்டுமே, தந்தமுள்ள ஆண் யானைகள் உள்ளன, மற்றவை அனைத்தும் மக்னா யானைகள் என்கிறார்.
”இலங்கையில் மக்னா யானைகள் அதிகமாக இருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று அங்கு முற்காலத்தில் அதீதமாக நடந்துள்ள யானை வேட்டை. மற்றொன்று அங்குள்ள புத்தமதக் கலாசாரத்தில் தந்தமுள்ள ஆண் யானைகள் மதச்சடங்குகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, புத்தரின் பல் பாதுகாக்கப்பட்டுள்ள மடாலயத்தில் அதை ஊர்வலமாகக் கொண்டு வர தந்தமுள்ள ஆண் யானையே பயன்படுத்தப்படும். இதற்காக ஏராளமான தந்தமுள்ள ஆண் யானைகள் பிடிக்கப்பட்டதும் ஒரு காரணமாயிருக்கலாம்.” என்கிறார் இலங்கையில் யானை குறித்து ஆராய்ச்சி செய்யும் ஸ்ரீதர் விஜயகிருஷ்ணன்.
யானை நீண்டகாலம் வாழும் காட்டுயிர். ஐந்தாறு ஆண்டுகளுக்கு ஒரு முறை குட்டி போடும். அவை பெரிதாகி இனப்பெருக்கத்தில் ஈடுபட 15 ஆண்டுகளாகும். இந்த தலைமுறை கால அவகாசம் அதிகமாக இருப்பதால் மரபணு மாறுபாடுகள் அதிகமாவதும் இதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்கிறார் இவர்.
இலங்கை மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் காடுகள் துண்டாடப்பட்டிருப்பதுதான் மக்னா யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணமாக இருக்கும் என்கிறார் யானை ஆராய்ச்சியாளர் ராமகிருஷ்ணன்.
வேறு பகுதியிலிருந்து ஆண் யானை வர முடியாது என்பதால், ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்குள் நடக்கும் இனவிருத்தி, இந்த பாதிப்பை அதிகப்படுத்துகிறது என்று கூறும் அவர், வால்பாறை, கூடலுார் வனப்பகுதிகளில் மக்னா யானை அதிகரிப்பதற்கும் இதுதான் காரணமென்று குறிப்பிடுகிறார்.
தந்தமில்லாத இந்த ஆண் யானைகள், தோற்றத்தில் தந்தமுள்ள ஆண் யானைகளை விட உயரமாகவும் எடை அதிகமுடையதாகவும் இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதைப் பற்றி விளக்கும் பேராசிரியர் ராமகிருஷ்ணன், ”இந்த யானைகளுக்கு தந்தம் இல்லாததால் தும்பிக்கையின் அடிப்பாகம் நன்கு பெருத்திருக்கும். பார்ப்பதற்கு பலம் அதிகமுள்ளதாகத் தோன்றினாலும் தந்தமில்லாத காரணத்தால் தந்தமுள்ள ஆண் யானையுடன் சண்டையிடும்போது இந்த ஆண் யானைகள் தோற்பது வழக்கம்.” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு