• Sun. Jan 19th, 2025

24×7 Live News

Apdin News

மணல் அள்ளுவதை திருவள்ளூர் ஆட்சியர் தடுக்காவிட்டால் அவமதிப்பு வழக்கு – ஐகோர்ட் உத்தரவு | Contempt Case against Thiruvallur Collector If not Prevented Sand Taken: High Court Warn

Byadmin

Jan 19, 2025


சென்னை: கொசஸ்தலை ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை ஆட்சியர் தடுக்காவிட்டால் அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவு

கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல் மற்றும் சவுடு மண் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தடுக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கொசஸ்தலை ஆறு மற்றும் கனிமவள பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப் படுகைகள் மற்றும் மெய்யூர், வேம்பேடு, ராஜபாளையம், சோமதேவன்பட்டு, எறையூர் போன்ற கிராமங்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும் சவுடு மண் இரவு, பகலாக அள்ளப்பட்டு வருகிறது.

இதனால் கனிம வளம் பறிபோய் வருகிறது. நீர் ஆதாரம் குறைவதால் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கொசஸ்தலை ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மணல் திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டிய வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளே அதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும், குறிப்பாக அரசு புறம்போக்கு நிலங்களில் அதிகளவில் மணல் மற்றும் சவுடு மண் அள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில், உரிமங்களில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே மணல் மற்றும் சவுடு மண் அள்ளப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க சிறப்பு அதிரடிப்படைகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், கொசஸ்தலை ஆற்றுப்படுகைகள் மற்றும் மணல் அள்ளப்படும் கிராமங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக மணல் அள்ளப் பட்டால் அதை தடுக்க மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அதிகாரிகள் தங்களது கடமையை செய்யத் தவறினால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.



By admin