ஊரடங்கு உத்தரவு. துண்டிக்கப்பட்ட இணையத் தொடர்பு. நடுரோட்டில் எரிந்த நிலையில் கிடந்த கார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மணிப்பூரின் தலைநகரான இம்பாலை அடைந்தோம். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடனே நாங்கள் கண்ட காட்சி இதுதான்.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும் இம்பாலில் காட்சிகள் மாறவில்லை. மே 3, 2023 அன்று மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்கு இடையே வன்முறை தொடங்கியது.
இந்த வன்முறையில் இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதுமட்டுமின்றி குக்கி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது.
மணிப்பூரில் மீண்டும் மோதல் தொடங்கியது ஏன்?
மணிப்பூரில் சமீபத்திய மோதல் நவம்பர் 7ம் தேதி தொடங்கியது. அன்று, மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் ‘மெய்தேய்’ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.
நான்கு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 11ஆம் தேதி, ஜிரிபாமில் உள்ள நிவாரண முகாம் தாக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த முகாமில் இருந்து மூன்று பெண்களும் மூன்று குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நவம்பர் 11ம் தேதி அன்றே, ஜிரிபாமில் ஆயுதம் ஏந்திய 10 பேரை, பாதுகாப்புப் படையினர் கொன்றனர். இவர்கள் “அனைவரும் பயங்கரவாதிகள்” என்று அரசு கூறியது.
அதன் பிறகு, சில நாட்கள் கழித்து நவம்பர் 16ஆம் தேதி ஒரு செய்தி பரவத் தொடங்கியது.
நவம்பர் 11ஆம் தேதி ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் இருந்து காணாமல் போன ஆறு பேரின் உடல்கள் அசாம் எல்லையில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட செய்தியை அடுத்து, இம்பாலில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். இந்தப் போராட்டங்கள் படிப்படியாக வன்முறையாக மாறத் தொடங்கின.
இம்பாலின் பல இடங்களில், கோபத்தில் கொந்தளித்த மக்கள் உள்ளூர் எம்.எல்.ஏ.க்களின் வீடுகளைக் குறிவைத்தனர். இதையடுத்து, இம்பால் மற்றும் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, கூடுதலாக ஒன்பதாயிரம் பாதுகாப்புப் படையினரை, மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி, மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங், மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ‘குக்கி பயங்கரவாதிகளால்’ கொல்லப்பட்டதாகவும், குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
வன்முறைக்கு உள்ளான எம்.எல்.ஏ.க்களின் வீடுகள்
இம்பாலில் உள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, பட்சோய் பகுதி எம்.எல்.ஏ.வான, சபம் குஞ்ச்கேஷ்வர் சிங் வீட்டுக்குச் சென்றோம்.
நவம்பர் 16ஆம் தேதி மாலை ஒரு பெரிய கும்பல் அந்த இடத்தைச் சேதப்படுத்தியது. அந்த வன்முறையின் தடங்கள் இன்னும் அங்கே காணப்படுகின்றன. அவரது வீட்டிற்கு வெளியே சாலையில் எரிந்த நிலையில் கார் ஒன்று இருந்தது.
அன்று மாலை நூற்றுக்கணக்கான மக்கள் எம்.எல்.ஏ வீட்டிற்குள் நுழைந்ததாக அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ வீட்டில் இருந்து, அந்த கார் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு நடுரோட்டில் எரிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கேட்டிற்குள் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களை அந்தக் கும்பல் தாக்கியது. அதன் பிறகு எம்.எல்.ஏ. வீடு குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது.
சபம் குஞ்ச்கேஷ்வர் சிங் வீட்டின் டஜன் கணக்கான பானைகள், கண்ணாடிகள் மற்றும் மரச்சாமான்கள் உடைந்து கிடந்தன.
இந்தத் தாக்குதல் நடந்தபோது சபம் குஞ்ச்கேஷ்வர் சிங் அவரது வீட்டில் இருந்துள்ளார். அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் தாக்குதலில் இருந்து அவரைப் பாதுகாத்தனர்.
மணிப்பூர் ரைஃபிள்ஸின் சிறிய குழு அவரது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்தாலும், வன்முறைக் கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து சேதப்படுத்துவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. அன்றிரவு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், ஆயுதம் ஏந்திய குழு எம்.எல்.ஏ வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டது.
அதே நாள் மாலையில், அங்கிருந்து சற்று தொலைவில், மணிப்பூரின் அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான, லீஷாங்தெம் சுசிந்த்ரோ மெய்தேயின் வீட்டின் மீது, ஒரு கும்பல் கற்களை வீசியது.
அப்போது, அங்கு குவிக்கப்பட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். நாங்கள் அவரது வீட்டை அடைந்தபோது, அவரது வீட்டில் கண்ணாடி உடைந்து கிடந்தது.
நவம்பர் 16ஆம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரது வீட்டிற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதைப் பார்த்தோம். அவரது வீட்டிற்கு வெளியே பெரிய இரும்பு கேட் இருந்தது. முள் கம்பிகள் இருந்தன. ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் காணப்பட்டனர்.
அன்று மாலை நடந்த வன்முறையில் எல்லைப் பாதுகாப்புப் படையின் வீரர் ஒருவர் காயமடைந்ததாக பாதுகாப்புப் பணியாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எம்.எல்.ஏ, கேமரா முன்பாகப் பேச மறுத்தார். ”தனது வீட்டைத் தாக்க வந்தவர்கள் உண்மையில் போராட்டக்காரர்கள் அல்ல” என்று கேமரா இல்லாமல் பேசியபோது கூறினார். மணிப்பூரில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு வலு சேர்ப்பதே அவர்களது நோக்கமாக இருந்தது என்றும் கூறினார்.
கூட்டத்தில் பலர் மின்சாரத் துளையிடும் கருவிகள் மற்றும் சுத்தியல்களுடன் வந்திருந்ததாக லீஷாங்தெம் சுசிந்த்ரோ மெய்தேய் எங்களிடம் கூறினார்.
அவரது வீட்டிற்குத் தீ வைத்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது என்கிறார் அவர். இந்தச் சம்பவத்தின்போது எம்.எல்.ஏ அவரது வீட்டில் இல்லை.
நவம்பர் 16ஆம் தேதி முழுவதும் உள்ளூர்ப் பெண்களும் முதியவர்களும் தனது வீட்டிற்கு வந்துகொண்டு இருந்ததாக அவர் கூறினார். அவரது குடும்பத்தினரிடம் பேசிவிட்டு அவர்கள் திரும்பினர்.
மாலையில், நூற்றுக்கணக்கான மக்கள் அவரது வீட்டைச் சுற்றித் திரண்டனர். இதையடுத்து வன்முறை தொடங்கியது. கிடைத்த தகவலின்படி, அன்று மாலை, சுமார் 12 எம்.எல்.ஏக்களின் வீடுகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
கட்டுப்படுத்தப்படும் மக்கள் நடமாட்டம்
நாங்கள் இம்பாலில் இருந்து சுராசந்த்பூருக்கு சென்றோம்.
கடந்த ஆண்டு மே 3ஆம் தேதி குக்கி மற்றும் மெய்தேய் சமூகத்தினருக்கு இடையே வன்முறை தொடங்கிய அதே சுராசந்த்பூருக்கு சென்றோம்.
சுராசந்த்பூர் இம்பாலில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இம்பால் மெய்தேய் மக்கள் அதிகமுள்ள பகுதி.
சுராசந்த்பூர் குக்கி மக்கள் அதிகமுள்ள பகுதி.
பிஷ்ணுபூர் பகுதி இம்பாலுக்கும் சுராசந்த்பூருக்கும் இடையில் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த வன்முறைக்குப் பிறகு, அது ‘தடுப்பு மண்டலமாக’ மாற்றப்பட்டது. இப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இம்பாலில் இருந்து சுராசந்த்பூருக்கு அல்லது சுராசந்த்பூரில் இருந்து இம்பாலுக்கு செல்வது இனி எளிதல்ல. பிஷ்ணுபூர் தடுப்பு மண்டலப் பகுதியில் மிகக் குறுகிய தூரத்தில் பல சோதனைச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிக்கு வருபவர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயம். கடந்த ஆண்டு, ஒருவரின் விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் இந்த சோதனைச் சாவடிகளைக் கடக்க முடிந்தது.
ஆனால் இந்த முறை, “சுராசந்த்பூருக்கு செல்ல உங்களிடம் அனுமதி உண்டா?” என பாதுகாப்புப் படையினர் சோதனைச் சாவடியிலேயே எங்களை நிறுத்திக் கேட்டனர்.
இங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினர், சோதனைச் சாவடியைப் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ தடை விதித்தனர். “நாங்கள் ஏன் சுராசந்த்பூருக்கு செல்கிறோம்? அங்கு யாரைச் சந்திப்போம்? என்ன வேலை செய்வோம்?” என்றும் அவர்கள் கேட்டனர்.
இந்தக் கேள்விகளுக்கான காரணம் என்னவென்று நாங்கள் தெரிந்துகொள்ள நினைத்தபோது, “இங்கு நிலைமை மோசமாக உள்ளது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்” என ஒரு பாதுகாப்புப் பணியாளர் கூறினார்.
அவர்களின் மூத்த அதிகாரிகளுடன், சுமார் அரை மணிநேரம் தொலைபேசியில் பலமுறை பேசிய பிறகு, அவர்கள் சுராசந்த்பூர் நோக்கிச் செல்ல எங்களுக்கு அனுமதி அளித்தனர்.
“நீங்கள் உங்கள் சொந்தப் பொறுப்பில் செல்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பு” என்று அனுமதி வழங்கிய பாதுகாவலர் கூறினார்.
பதற்றத்திலும் அதிருப்தியிலும் சுராச்சந்த்பூர்
நாங்கள் சுராசந்த்பூரை அடைந்தவுடன், மேலோட்டமாகப் பார்க்கும்போது, நிலைமை சாதாரணமாக இருப்பதாகத் தோன்றியது.
ஆனால் அதற்குக் கீழே மறைந்திருக்கும் பதற்றத்தை உணர அதிக நேரம் எடுக்கவில்லை.
நவம்பர் 11ஆம் தேதி ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 10 பேரின் படங்கள் பல இடங்களில் பெரிய பதாகைகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 10 பேரில் 8 பேர் சுராசந்த்பூரில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று மணிப்பூர் அரசு கூறுகிறது.
நவம்பர் 11ஆம் தேதி ஜிரிபாமின் போரோபெக்கரா பகுதியில் உள்ள நிவாரண முகாமில் வசிப்பவர்கள் மீதும் , போரோபெக்கரா காவல் நிலையத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
“பயத்தைப் பரப்புவதே அவர்களின் நோக்கம். ஆனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சரியான நேரத்தில் செயல்பட்டதால் தாக்குதல் முறியடிக்கப்பட்டது” என்று மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் கூறினார்.
“அவர்களது துணிச்சலாலும், விரைவான நடவடிக்கையாலும் அந்த 10 பயங்கரவாதிகளையும் அந்த இடத்திலேயே கொல்ல முடிந்தது. இதன் மூலம் நிவாரண முகாமில் வசிக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட்டனர்” என்று அவர் கூறினார்.
ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிராம மக்கள் என்று சுராசந்த்பூர் மக்கள் கூறி வருகின்றனர். மேலும் அவர்கள் தங்களது சமூக மக்களைப் பாதுகாக்க ஜிரிபாம் சென்றிருந்ததாகக் கூறினர்.
கடந்த ஆண்டு குக்கி மற்றும் மெய்தேய் சமூகத்தினருக்கு இடையே வன்முறை தொடங்கியபோது, இரு தரப்பும் தங்கள் கிராமங்களைப் பாதுகாக்க ஆயுதக் குழுக்களை நிறுத்தியிருந்ததை நினைவுகூற வேண்டும். அதன்பிறகு, இந்த ஆயுதக் குழுக்களோடு தொடர்புடைய பல வன்முறைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பதிவாகியுள்ளன.
நவம்பர் 11ஆம் தேதி கொல்லப்பட்டவர்களில் சிலரின் குடும்பத்தினரைச் சந்தித்தோம். கொலை செய்யப்பட்ட லால்தானேயி இன்ஃபிமேட்டிற்கு 22 வயதுதான். ஓவியராகவும் கட்டடத் தொழிலாளியாகவும், லால்தானேயி இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அவரது அண்ணன் ராம்மாஸோன், தனது தம்பி இறந்துவிட்டதை இன்னும் நம்பவில்லை. “கண்ணை மூடும்போது எனக்கு எனது தம்பியின் முகம் தான் நினைவுக்கு வருகிறது. இறந்த 10 பேரில் பயங்கரவாதிகள் யாரும் இல்லை. போலீசார் அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறியுள்ளனர். இது முற்றிலும் தவறு. அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை”என்றும் அவர் கூறினார்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலராக, லால்தானேயி இன்ஃபிமேட், ஜிரிபாம் சென்றதாக ராம்மாஸோன் கூறுகிறார்.
“மணிப்பூரில் நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் இருந்து, கிராமத்தில் உள்ள அனைவரும் தன்னார்வலர்களாக மாறியுள்ளனர். அவர்கள் தங்கள் வீட்டையும் கிராமத்தையும் காப்பாற்ற தன்னார்வலர்களாக மாற வேண்டும்” என்றார் ராம் மசூ.
“அவர்கள் எல்லோரும் ஏழைகள். யாரும் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அன்றாடம் உழைத்துச் சம்பாதிப்பவர்கள். இவர்களுக்கு நேர்ந்திருப்பது மிகவும் தவறான விஷயம்” என்று அவர் மசூ தெரிவித்தார்.
இந்த வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள மற்றொரு வீட்டில் ஒருவர் இறந்திருந்தார். பார்தா கடைசியாக தனது மகன் ஜோசஃப் உடன் நவம்பர் 10ஆம் தேதி பேசினார். மறுநாள் தனது 20 வயது மகன் ஜிரிபாமில் கொல்லப்பட்டதை அறிந்துள்ளார்.
“என் மகன், தன் மக்களைக் காக்க கிராமத் தன்னார்வலராகச் சென்றிருந்தான். எல்லோரும் அவனை பயங்கரவாதி என்று சொல்கிறார்கள். இறந்தவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லக் கூடாது என்பதே அரசுக்கு எனது வேண்டுகோள்” என்றார் பார்தா.
“ஜோசஃப் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். ஓட்டுநராவதற்கும் பயிற்சி பெற்று வந்தார்” என ஜோசஃப் லால்டிடம் கோபுங்கின் குடும்பத்தினர் கூறினர்.
“நாங்கள் இந்திய குடிமக்கள். நாங்கள் வெளிநாட்டினர் அல்ல. பயங்கரவாதிகள் அல்ல. வேறு எங்கும் இருந்து வந்தவர்கள் அல்ல. எல்லோரையும் போல எங்களுக்கும் சம உரிமை வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்கிறார் அவரது தாயார் பார்தா.
நவம்பர் 11ஆம் தேதியன்று ஜிரிபாமில் இறந்த இந்த 10 பேரும் மார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தையடுத்து சுராசந்த்பூரில் பதற்றம் நிலவுகிறது.
இந்த 10 பேரின் உடல்களும் சுராசந்த்பூர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் குடும்பத்தினரும், மார் சமூக மக்களும், இறந்தவர்களின் உடல்களைத் தங்களிடம் ஒப்படைக்கக் காத்திருக்கின்றனர்.
மார் சமூகத்தின் பழக்க வழக்கங்களின்படி, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் முடியும் வரை இறந்தவர்களின் உடல்களைத் தனியாகவிட முடியாது.
மார் சமூகத்தைச் சேர்ந்த டஜன் கணக்கான மக்கள் ஒவ்வொருவராக மாறி மாறி, ஒவ்வொரு நாளும் 24 மணிநேரமும் இந்த சவக்கிடங்கிற்கு வெளியே அமர்ந்திருப்பதற்கு இதுவே காரணம்.
சில நாட்களுக்கு முன்பு, சுராசந்த்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த மக்கள், கொல்லப்பட்டவர்களின் நினைவாக, வெற்று சவப் பெட்டிகளுடன் பேரணி நடத்தினர்.
இந்த விவகாரத்தில் தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார் சமூகம் கூறுகிறது.
மார் சமூகத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் பஹ்ரில் கூறுகையில், “மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தற்போது 10 பேர் பலியாகியுள்ளனர். 2023 மே மாதத்திற்குப் பிறகு இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை. அதனால் இங்கு அதிருப்தியும் கோபமும் நிலவுகிறது” என்றார்.
வன்முறையில் எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூர், அமைதிக்கு வெகு தொலைவில் உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு