சென்னை: கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா மேமாத்தூர் வழியாக ஓடும் மணிமுத்தாற்றின் குறுக்கே மேம்பாலம் இல்லாததால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் 4 மாதங்களில் பணியைத் தொடங்க ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் மேமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ஆர். சுதாகர் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா, நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேமாத்தூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்துக்கு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி மணிமுத்தாறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடந்தே நல்லூர், வேப்பூர் மற்றும் விருத்தாச்சலம் போன்ற வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் தண்ணீர் வரத்து குறையும் வரை மாதக்கணக்கில் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறோம்.
எங்கள் கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியர் 4 கி.மீ. தொலைவில் உள்ள நல்லூர் பள்ளியில் படிக்கின்றனர். மழைக்காலங்களில் ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்களும், கர்ப்பிணி பெண்களும் கடும் சிரமமைடந்து வருகின்றனர். அவசர நேரங்களில் மருத்துவமனைக்கு செல்ல எங்கள் ஊரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள இலங்கையனூர் சென்று அங்குள்ள ஆற்றுப்பாலம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்ல நேரிடுகிறது.
எங்கள் ஊரில் மேம்பாலம் இல்லை என்பதால் சுமார் 8 கி.மீ. தூரத்துக்கு சுற்றிக்கொண்டு செல்ல நேரிடுகிறது. இதனால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்து வருகிறது. விவசாயிகளும் விளைபொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விட்டது. மேம்பாலம் இல்லை என்பதால் அரசுப் பேருந்து போக்குவரத்தும் இல்லை. எனவே எங்களது கிராமத்தில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசுக்கும், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.குமார் ஆஜராகி, “குறைந்தபட்சம் இந்த கிராமத்தில் மேம்பாலம் கட்டப்படும் வரை பேருந்து போக்குவரத்தாவது தொடங்க உத்தரவிட வேண்டும்,” என வாதிட்டார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர், “இந்த கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 11.57 கோடி செலவில் மணிமுத்தாற்றின் குறுக்கே ஆற்றுப்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2 ஆண்டுகள் காலஅவகாசம் தேவை,” என்றார்.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கிராமத்தினர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுவதால், இன்னும் 4 மாதங்களில் பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும், என தமிழக அரசு மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.