0
மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள போதிலும், மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாத இறுதியிலும் டிசம்பர் மாத முதல் வாரத்திலும் பெய்த கடும் மழை காரணமாக, பல பகுதிகள் இன்னும் அபாயகரமான நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், பருவமழையுடன் கூடிய சிறிய அளவிலான மழை பெய்தாலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, பின்வரும் மாவட்டங்களில் வழங்கப்பட்டிருந்த முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது:
மாவட்ட ரீதியான விபரங்கள்:
பதுளை மாவட்டம்: லுணுகலை, மீகாககிவுல, வெலிமடை, கந்தகெட்டிய, ஹாலி எல, பதுளை, ஊவா பரணகம மற்றும் பஸ்ஸறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
கண்டி மாவட்டம்: மினிப்பே மற்றும் உடுதும்பறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
மாத்தளை மாவட்டம்: வில்கமுவ, உக்குவெல, அம்பகங்கா கோரளை, ரத்தோட்டை, லக்கல மற்றும் பல்லேகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன, வலப்பனை, மதுரட்ட மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
கலாநிதி வசந்த சேனாதீர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நிலவும் சூழல், மழைவீழ்ச்சியின் அளவு மற்றும் அபாயகரமான இடங்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்புகள் எதிர்காலத்தில் மாற்றமடையக்கூடும் என தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பெய்த மழையினால் பல பகுதிகளில் மண்சரிவு க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும், சிறிய மழை பெய்தாலும் அந்த இடங்கள் மீண்டும் அபாய நிலையை எட்டக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனவே, மக்கள் தமது சூழல் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.