1
மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்தல் சூழல்நேய பூங்கா’ நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், “யாழ். மாவட்ட செயலராக நான் பணியாற்றிய காலத்தில் இந்தப் பகுதியில் சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. துரதிஷ்டவசமாக அப்போதிருந்த பிரதேச சபை நிர்வாகம் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை.
பல முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக வருகின்றபோதும் எமது திணைக்களங்களால் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவில்லை. தமது சபைகளுக்கு வருமானத்தை ஈட்டித் தரக் கூடிய முதலீட்டாளர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு தயக்கம் காண்பிக்கின்றனர். இழுத்தடிப்புச் செய்கின்றனர். ஏற்கனவே இங்கு முதலீடுகளைச் செய்த பலரும், எமது நிர்வாகங்களின் அசமந்தமான செயற்பாடு காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமை தொடருமானால் இங்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு தயக்கமான நிலைமையே ஏற்படும். அது எமது மாகாணத்தை பல வகையிலும் பாதிக்கும். இளையோருக்கு வேலை வாய்ப்பு தேவை என்று நாம் கோரும் அதேவேளை அதற்கு முதலீடுதான் வழியாக இருக்கும் நிலையில் அதனையும் இழப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா போன்று பல வேலைத் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றேன். அத்துடன் இந்தப் பிரதேசத்தில் இவ்வாறான முயற்சியை மேற்கொண்டுள்ள நெய்தல் சூழல் நேயப் பூங்காவின் நிறுவுநர் சி.அனுராஜூக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார் ஆளுநர்.