பட மூலாதாரம், Getty Images
பூங்காவில் நடந்த பிறகு அல்லது காடுகளின் வழியாக செல்லும்போது மனம் அமைதியாக இருப்பதாக உணர்ந்ததுண்டா? அப்படி நீங்கள் உணர்ந்திருந்தால் அது உங்கள் கற்பனை அல்ல, அது உயிரியலாகும்.
வெளியில் செல்வதால், மன அழுத்த ஹார்மோன்கள் குறைவது, ரத்த அழுத்தம் சீராவது மற்றும் குடல் ஆரோக்கியம் மேம்படுவது என நமது உடலுக்குள் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தூண்டப்படுகின்றன.
இந்த நன்மைகளை உணர தினசரி மணிக்கணக்கில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் அதிகபட்ச விளைவு 20 நிமிடங்களிலேயே ஏற்பட்டுவிடும்.
எனவே அலுவலகப் பணிகள் இருந்தாலும், வாரத்திற்கு சில முறை மதிய உணவு நேரத்தில் அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று சிறிது நேரம் நடந்துவிட்டு, அங்கு அமர்ந்து உணவு உண்பது கூட உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும்.
இயற்கையின் மத்தியில் இருப்பது ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எப்படி உதவும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
பட மூலாதாரம், Ines Stuart Davidson/RBG Kew
1. ஒருவர் தன்னை அறியாமலேயே ஓய்வெடுக்க முடிகிறது
பசுமையான மரங்களைப் பார்க்கும்போது, அவற்றின் வாசனையை உணரும்போது, இலைகளின் சலசலப்பை, பறவைகள் எழுப்பும் ஓசையைக் கேட்கும்போது, தன்னியக்க நரம்புக் கட்டமைப்பு உடனடியாக பதிலளிக்கிறது.
அருகிலுள்ள ஒரு பூங்காவிற்குச் செல்லும்போதும் இது நிகழலாம்.
“உடலியல் அமைதியுடன் தொடர்புடைய உடலின் ரத்த அழுத்தம் குறைதல், இதயத் துடிப்பு மாறுபாட்டில் மாற்றம் மற்றும் இதயத் துடிப்பு மெதுவாகுதல் போன்ற மாற்றங்களை நாங்கள் காண்கிறோம்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பல்லுயிர் பேராசிரியர் பரோனஸ் கேத்தி வில்லிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 20,000 பேரை உள்ளடக்கி பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், வாரந்தோறும் குறைந்தது மொத்தம் 120 நிமிடங்கள் பசுமையான இடங்களில் செலவிட்டவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும் சிறந்த மன நலனையும் பெறுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இயற்கையில் நேரத்தை செலவிடுவதால் நன்மை கிடைக்கிறது என்பதை நிருபிப்பதற்கான சான்றுகள் போதுமான அளவு வலுவாக உள்ளன.
சில பகுதிகளில், மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ‘பசுமை சமூக பரிந்துரைப்பு’ (green social prescribing) என்று அழைக்கப்படுவதை பரிசோதித்துள்ளனர். மக்களை இயற்கையுடன் இணைத்து அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுவது தெரியவந்துள்ளது.
பட மூலாதாரம், Photo by Diptendu Dutta/NurPhoto via Getty Images
2. ஹார்மோன்கள் மறுகட்டமைக்கப்பட்டு சீரமைக்கப்படுகின்றன
உங்கள் உடலின் ஹார்மோன் அமைப்பும் உடலை அமைதிப்படுத்தும் செயலில் இணைகிறது.
வெளியில் நேரத்தைச் செலவிடுவது, மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது பதற்றமாக இருக்கும்போது அதிகரிக்கும் ஹார்மோன்களான கார்டிசோல் மற்றும் அட்ரினலின் அளவைக் குறைக்கிறது என்று வில்லிஸ் கூறுகிறார்.
“ஒரு ஹோட்டல் அறையில் மூன்று நாட்கள் ஹினோகி (ஜப்பானிய சைப்ரஸ்) எண்ணெயை சுவாசித்தவர்களின் ரத்தத்தில், அட்ரினலின் ஹார்மோனில் கணிசமான வீழ்ச்சியையும், இயற்கையான நோய் எதிர்ப்பு செல்களில் (natural killer cells) பெரிய அதிகரிப்பும் காணப்பட்டதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.”
இயற்கையான நோய் எதிர்ப்பு செல்கள் என்பவை, உடலில் உள்ள வைரஸ்களை எதிர்த்துப் போராடும் செல்கள் ஆகும். இரண்டு வாரங்களுக்குப் பிறகும் ஆய்வில் பங்கேற்றவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்ததை கண்டனர்.
அடிப்படையில் இயற்கை, “அமைதி தேவைப்படுவதை அமைதிப்படுத்துகிறது, வலுப்படுத்த வேண்டியதை பலப்படுத்துகிறது” என்று இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மிங் குவோ பிபிசியிடம் தெரிவித்தார் .
“இயற்கையில் மூன்று நாள் வார இறுதி (உதாரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு) என்பது நமது வைரஸ் எதிர்ப்பு செயல்முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் ஒரு மாதத்திற்குப் பிறகும் இது அடிப்படையாக இருப்பதைவிட 24% அதிகமாக இருக்கலாம்.”
இயற்கையில் குறைவான நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் விளைவுகள் சிறியதாக இருந்தாலும், தொடர்ந்து நீடிக்கும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன என அவர் கூறுகிறார்.
3. சக்திவாய்ந்த உணர்வு வாசனை
இயற்கையைப் பார்ப்பதும் கேட்பதும் எவ்வளவு சக்தி வாய்ந்ததோ, அதே அளவுக்கு அதன் வாசனையை முகர்வதும் சக்தி வாய்ந்தது.
மரங்கள் மற்றும் மண்ணின் வாசனை தாவரங்களால் வெளியிடப்படும் கரிம சேர்மங்களால் நிறைந்துள்ளது, “அவற்றை சுவாசிக்கும்போது, அவற்றின் சில மூலக்கூறுகள் ரத்த ஓட்டத்தில் இணைகின்றன.”
பைன் மரம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பேராசிரியர் வில்லிஸ் கூறுகிறார், ஏனெனில் பைன் காட்டின் வாசனை, நம்மை 90 வினாடிகளுக்குள் அமைதிப்படுத்தும், அந்த விளைவு சுமார் 10 நிமிடங்கள் நீடிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
4. மண்ணைத் தொடுவது
மண்ணிலும் தாவரங்களிலும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால், இயற்கையில் சிறிது நேரத்தை செலவிடுவது நமது மனதை அமைதிப்படுத்துவதுடன், உடலின் நுண்ணுயிரியல் அமைப்பையும் அதிகரிக்க உதவும்.
“அவை புரோபயாடிக்குகள் அல்லது பானங்களில் இருப்பது போன்ற நல்ல பாக்டீரியாக்கள், அவற்றை நாம் விலை கொடுத்து வாங்குகிறோம்” என்று வில்லிஸ் விளக்குகிறார்.
தொற்று பாதிப்பு மற்றும் மன ஆரோக்கியம் போன்ற காரணிகளில் ஏற்படும் விளைவை ஆய்வு செய்து, சிலவற்றை சுவாசிப்பது உங்கள் மனநிலையை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், தாவரங்களால் வெளியிடப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு ரசாயனங்கள் – பைட்டான்சைடுகள் – நோயை எதிர்த்துப் போராட உதவும் என்றும் பேராசிரியர் மிங் குவோ கூறுகிறார்.
தொற்று விஞ்ஞானியான கிறிஸ் வான் டுல்லெக்கன், “நோயெதிர்ப்பு மண்டலத்தை உற்சாகப்படுத்தும் இயற்கையை” ஆக்கப்பூர்வமான சூழலாகப் பார்ப்பதாகக் கூறுகிறார்.
அவர் தமது குழந்தைகளை மண்ணில் விளையாடச் செய்கிறார், இதனால் மண் மற்றும் கிருமிகள் மூக்கு அல்லது வாயில் சென்று, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
பட மூலாதாரம், Getty Images
அனைவராலும் காட்டுக்குள் நினைத்த உடனே செல்ல முடியாது. இருப்பினும், வீட்டிலேயே இயற்கையைப் போன்ற தோற்றத்தை பராமரிப்பதும் ஓரளவு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று வில்லிஸ் கூறுகிறார்.
வெள்ளை அல்லது மஞ்சள் ரோஜாக்கள் போன்ற பூக்களைப் பார்ப்பதுகூட மூளையின் செயல்பாட்டில் மிகப்பெரிய அமைதியான விளைவை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது.
வாசனையைப் பொறுத்தவரை, பினீன் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்ட டிஃப்பியூசரைப் பயன்படுத்துங்கள், இது உங்களை அமைதியாக உணரவைக்க உதவும்.
வேறு எதுவுமே இல்லாவிட்டாலும், ஒரு காட்டின் புகைப்படத்தை அடிக்கடி பார்ப்பது போன்று இருப்பது கூட மன அமைதியை அதிகரிக்க உதவும்.
உங்கள் மடிக்கணினியில் இயற்கையின் படங்களைப் பார்ப்பது அல்லது பச்சை நிறத்தில் ஏதாவது ஒன்றைப் பார்ப்பது போன்றவை, மூளையில் அமைதியான அலை மாற்றங்களைத் தூண்டி மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முயற்சியும் நமக்கு உதவும் என பேராசிரியர் மிங் குவோ கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு