0
ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த குழந்தை ம.சண்முகலிங்கம் வெள்ளி ஜனவரி 17இல் யாழில் காலமானார்.
ஈழத்து நாடகத் துறையின் பிதாமகர் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நடிகராக நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப் போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக விளங்கியவர்.
அத்துடன் கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம் நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக பல் துறை ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விருதுகளுக்கு என்றுமே சொந்தம் கொண்டாடாதவராக விளங்கிய அவர் எளிமையான வாழ்வு வாழ்ந்து, யதார்த்தத்தை படைத்தவர்.
மண் பற்றுடன் வாழ்ந்த பேராளுமை:
ஈழத்தில் ஏராளமான நாடக கலைஞர்களையும், படைப்புக்களையும் உருவாக்கிய பிதா மகன். தமிழ் தேசத்தின் துயர் சூழ்ந்த காலங்களிலும் வசதிகள், வாய்ப்புக்கள் இருந்தும் வெளிநாடு செல்ல மறுத்து கலைப் பணியாற்றியவர்.
நாடகமே தனது உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர் . இன்று நாடகத்துறையில் சிறந்து விளங்கும் எத்தனையோ விற்பன்னர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்
குழந்தை ம.சண்முகலிங்கம்.
ஈழத்தின் வரலாறு கூறும் நாடக எழுத்தாளர், நாடகப் பயிற்சியாளர், நாடக நடிகராக குழந்தை ம. சண்முகலிங்கம் விளங்கியவர்.
இவர் நாடகத்துறைக்கான பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று முப்பது ஆண்டு காலமாக அதே பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
மொழிபெயர்ப்பு நாடக விற்பன்னர்:
பேராளுமை கொண்ட குழந்தை ம. சண்முகலிங்கம் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில நூலுருவிலும் வந்திருக்கின்றன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், இப்சன், அன்ரன்-செக்கோவ், பேட்டல்-பிரக்சட், தாகூர் ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில யப்பானிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
1970களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஒன்றினை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். இந்தப் பணி மூலமாக யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே காத்திரமான நாடகத்துறை ஒன்று உருவாக இவர் காரணமாக இருந்திருக்கின்றார்.
1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி, இராணுவ அடக்குமுறை, பெண்களுக்கெதிரான அடக்குமுறை, மாணவர்களை அடக்கிய கல்வி அடக்குமுறை, சாதிய அடக்குமுறை, சமூகத்தின் போலித்தனங்கள் என்பவற்றையெல்லாம் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இவர் எழுதி இயக்கிய ‘மண் சுமந்த மேனியர்” என்ற நாடகம் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெல்லாம் மேடையேற்றப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இவரது ஏனைய நாடகங்களான ‘அன்னை இட்ட தீ” ‘எந்தையும் தாயும்” ஆகிய நாடகங்களும் மிகவும் பிரபல்யம் ஆனவை. அத்துடன் 1976 ஆம் ஆண்டில் வெளியான பொன்மணி இலங்கைத் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.
ஈழத்தின் சிறுவர் நாடகத்தின் முன்னோடியான இவர் சிறுவர் நாடகங்களையும், பாடசாலை நாடகங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். நாடகத்துறைக்கு இவர் ஆற்றிவரும் பணிக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியிருந்தது.
மண் பற்றுடன் வாழ்ந்த பேராளுமையான குழந்தை சண்முகலிங்கம் எனும் பெருந்தகையின் இழப்பு, தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.