• Tue. Aug 19th, 2025

24×7 Live News

Apdin News

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது! | Sanitation workers involved in protest arrested in Madurai

Byadmin

Aug 19, 2025


மதுரை: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் இன்று (ஆக.18) இரவு கைது செய்துள்ளனர்.

தனியார்மய அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சியின் வளாகத்தில் இன்று (ஆக.18) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார்மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும். மதுரை மாநகராட்சியில் அவர் லேண்ட் தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துப் பிரிவு பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை போனஸாக ஒரு மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ளப்போவதில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தரப்புக்கு இடையே நடந்த ஐந்து கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த சூழலில் திங்கட்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் பரவலாக போராட்டம் மேற்கொண்டுள்ள நிலையில் மதுரையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



By admin