இன்றைய ( 01/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
மதுரையில் பிரபல ரவுடி வெள்ளக்காளியின் நெருங்கிய கூட்டாளி சுபாஷ் சந்திர போஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி இந்து தமிழ்திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், “மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமி, ராஜபாண்டியன். உறவினர்களான இவர்களுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்பகை ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பிலும் கடந்த 22 ஆண்டுகளில் 20க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22ஆம் தேதி வி.கே. குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் எட்டு பேர் கொண்ட கும்பலால வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக பிரபல ரவுடி வெள்ளக்காளியின் தாயார் உள்பட 7 பேரை போலீஸ் தனிப்படை தேடி வந்தது,” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வெள்ளக்காளியின் நெருங்கிய நண்பரான சுபாஷ் சந்திர போஸை போலீசார் தேடி வந்தனர்.
“அவரை திங்கள் கிழமை மாலை காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான தனிப்படையினர் பிடிக்க முயன்றனர். அப்போது, தப்பியோடிய சுபாஷ் துப்பாக்கியால் போலீசாரை நோக்கிச் சுட்டார். அதையடுத்து பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
15வயது சிறுமிக்கு கருகலைப்பு: 17வயது சிறுவன், பெற்றோர், மருத்துவர் மீது போக்சோ வழக்கு
பட மூலாதாரம், Getty Images
சென்னையில் சட்டவிரோத கருகலைப்பில் ஈடுபட்டதற்காக 17 வயது சிறுவன், அவரது பெற்றோர் மற்றும் கருகலைப்பு செய்த மருத்துவர் ஆகியோர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், “வட சென்னை பகுதியைச் சேர்ந்த சிறுமி பள்ளிக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், படிப்பைக் கைவிட்டு அருகிலுள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுவனுடன் தொடர்பு ஏற்பட்டு, அவர் கர்ப்பமாகியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தச் செய்தியில், “அவர் கர்ப்பமாக இருப்பது அவரது பெற்றோருக்குத் தெரியாது, எனினும் சிறுவனின் பெற்றோருக்குத் தெரியும். ஒரு நாள் அந்தச் சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டபோது, சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்று அவருக்கு கருகலைப்பு செய்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய்க்கு விவரம் தெரியவந்த பிறகு, அவர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்தச் சிறுவன் சிறார் இல்லத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அவரது பெற்றோர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்களை வைத்து போராட்டம் செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற காவல் ஆணையம் பரிந்துரை
பட மூலாதாரம், Getty Images
சடலங்களை வைத்துப் போராட்டம் நடத்துவது அதிகரித்து வருவதால் அதைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமென ஐந்தாவது காவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“குற்றம் சாட்டப்பட்டவரை உடனே கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவருக்கு உடனடி நிவாரணம் வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன், சடலங்களை வைத்துப் போராடுவது தமிழகத்தில் அதிகரித்து வருவதால், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ‘சடலத்தின் கண்ணியம் காக்கும்’ வகையிலான சட்டத்தைப் போன்று தமிழ்நாட்டில் ஒரு சட்டத்தை உருவாக்க காவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக” அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும் அந்தச் செய்தியில், “சாலைகளில், பொது இடங்களில் பிணங்களை வைத்துப் போராடுவது அந்த சட்டப்படி குற்றமாகக் கருதப்படும், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம். இறந்தவருக்கு கண்ணியத்துடன் இறுதி மரியாதை நடத்தப்படுவதற்கான உரிமையை நிலைநாட்டவும், சடலத்தை எடுத்துக் கொள்ள குடும்பத்தினர் தாமதம் செய்தால் அரசே இறுதி மரியாதையைச் செய்யவும் இந்தச் சட்டம் வழி வகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் தமிழகத்தில் 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு
பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் 78 சுங்கச் சாவடிகளில் முதல் கட்டமாக வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம், ஆர்த்தூர், பட்டறைப் பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகிறது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், “ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் 40 சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.75 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்தக் கட்டணம் திங்கள் கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை ஈஸ்டர் தாக்குதல் குறித்து அரசுக்கு எதிர்க்கட்சி கேள்வி
படக்குறிப்பு, இலங்கை பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பேசிய உதய கம்மன்பில, “ஆட்சிக்கு வந்தவுடன் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உண்மையைப் பகிரங்கப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். இந்த மாதம் 21ஆம் தேதிக்குள் உண்மையைப் பகிரங்கப்படுத்தாவிடின் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்குவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிகை விடுத்திருந்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் வீதிக்கு இறங்குவதைத் தடுப்பதற்காகவே 21ஆம் தேதி குண்டுத் தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவதாக முன்னர் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். குற்றத்தின் உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்கள் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும் அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜனாதிபதி வெளிப்படுத்தும் உண்மையில் உள்ள பொறுப்புதாரி யார் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.