சென்னை: மதுரையில் வக்பு தீரப்பாய கிளை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேசும்போது, “வக்பு தீர்ப்பாயம் சென்னையில் மட்டும் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தொடங்கி இருப்பது போன்று, அந்தந்த பகுதி மக்களின் நலன் கருதி திருச்சி, மதுரை,கோவை போன்ற இடங்களிலும் வக்பு தீர்ப்பாய கிளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பதில் அளித்து பேசும்போது, “சென்னையில் இருப்பது போல் மதுரையில் வக்பு தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 13 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலித்து, திருச்சி மற்றும் கோவையில் வக்பு தீர்ப்பாய கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.