மதுரை: மதுரையில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை யாகப்பாநகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (31). இவரை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா மற்றும் காவலர்கள் விசாரணைக்காக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வண்டியூர் அருகே கால்வாயில் தினேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையின் போது போலீஸார் தாக்கியதில் தினேஷ்குமார் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் நேற்று முன்தினம் அண்ணாநகர் காவல் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தினேஷ்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் முத்துலெட்சுமி மற்றும் மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தினேஷ்குமார் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அண்ணாநகர் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு இன்று விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் பிளவர் ஷீலா மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவருக்கு பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பட்டியலின சமூகத்தினர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார். எனவே விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். காவல் ஆய்வாளர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.
அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், இது காவல் நிலையத்தில் நிகழ்ந்த மரணம் அல்ல. விசாரணைக்கு பின் வெளியே செல்லும்போது இது போன்ற அசம்பாவிதம் நடைபெற்று உள்ளது. விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றார்.
பின்னர் நீதிபதிகள், அண்ணாநகர் காவல் நிலையத்தில் சிசிடிவி முறையாக செயல்படுகிறதா? காவல் நிலைய ஆய்வாளர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவர் பணிபுரியும் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸாரே விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும். எனவே வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தினேஷ் குமார் உடலை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.